(Reading time: 28 - 55 minutes)

கிருஷ்ணா…. இதுக்காகத்தான் நான் இத்தனை நாள் சொல்லலை… உனக்குப் புரிஞ்சதா இல்லையான்றதை விட, நீ அழுவேன்னு எனக்கு தெரியும்… அதான் நான் சொல்லாமமே இருந்தேன்…” என்றவன், வேகமாக எழுந்து அவளுக்கு சற்று தள்ளி அவளுக்கு முதுகு காட்டியவாறு அமர்ந்து கொள்ள, அவனுக்கு அவளை இப்படி அழ வைக்கத்தானா அத்தனையும் சொன்னோம் என வேதனை எழ, சட்டென அவன் தோள் சாய்ந்திருந்தாள் அவள்…

அதிர்ச்சியுடன், அவன் அவளை ஏறிட, “கிருஷ்ணா… என்ன இது…” என அவன் பேச முற்படுகையில்,

“நீங்க எதுவும் பேச வேண்டாம்… பேசாம இருங்க… மனசுக்குள்ள இவ்வளவு கஷ்டம் வச்சிட்டு எப்படித்தான் எங்கிட்ட சிரிச்சு பேச முடிஞ்சதோ உங்களால… இதுல நான் வேற உங்களை நிறைய கேள்வி கேட்டு கஷ்டப்படுத்திட்டேன்…” என்றவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்க, அவன் அவளின் கைப்பிடிக்க தயங்கினான்…

“ப்ளீஸ்டா… கிருஷ்ணா… அழாத… யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க… அழாத…” என அவன் அவளிடமிருந்து விலக நினைக்க, அவளோ அவனை விடாமல் பிடித்திருந்தாள்…

“இங்க யாரும் வரமாட்டாங்க… அதும் இந்த ஆலமரத்துப்பக்கம் இந்த நேரம்…” என்று சொல்லியவள்,

“யார் பார்த்தா என்ன?... என்ன சொல்லுவாங்க?... யார் வந்து கேட்டாலும் நான் சொல்லுவேன்… நீங்க என் சகின்னு… என்னோட சகி மட்டும்னு…” என அவன் விழி பார்த்து கூறியவள், அவன் அவளையேப் பார்ப்பதை பார்த்துவிட்டு,

“நான் இருக்குறேன் சகி உங்களுக்கு… நீங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம்… என் சகிக்கு நான் இருக்குறேன்… இனி என் சகி எதுக்காகவும், யாருக்காகவும் ஏங்க கூடாது… கவலைப்பட கூடாது… சரியா?...” என மீண்டும் தன் தோள் சாய்ந்து கொண்டவளை தனக்காக கிடைத்த வரம் போல் பார்த்தவன் அவள் விரல் நகங்களை கூட பற்றவில்லை… அவளுக்கு தெரியாதவாறு திரும்பிகொண்டு தன் கண்ணீர் துடைத்தான் புன்னகையோடு…

கிளம்பும் நேரம் வந்ததும், அவளிடம், “எங்கிட்ட கேட்டல்ல என் பர்த்டே எப்பன்னு?.. அது நாளைக்குத்தான்… இத இப்போ சொல்லாம நாளைக்கு சொன்னா நீ கோச்சிப்ப… அதான் இப்பவே சொல்லிட்டேன்… சரிடா… நேரமாச்சு… வா… போகலாம்…” என அவன் எழுந்து கொள்ள, அவளும் அவனுடன் நடந்தாள்…

மறுநாள் அவன் வந்ததும், “விஷ் யூ அ ஹேப்பி பர்த்டே சகி….” என்றவள் அவனுக்கு கை கொடுத்து வாழ்த்து சொல்ல, அவன் முகம் மலர்ந்தது…

“சரி… கொடுங்க….” என அவள் சொல்ல, “என்னதுடா…” என்றான் அவன் புரியாதவாறு…

“சாக்லேட் கண்டிப்பா நீங்க தர மாட்டீங்க… அதுமில்லாம பர்த்டே அன்னைக்கு எல்லாரும் பர்த்டே கொண்டாடுறவங்களுக்குத்தான் கிஃப்ட் கொடுப்பாங்க… இப்போ ஒரு சேஞ்சுக்கு நீங்க எனக்கு கிஃப்ட் தாங்க…” என்றதும்,

“எங்கிட்ட எதுவும் இல்லையேடா…” என்றான் அவன்…

“அதெல்லாம் முடியாது… எனக்கு எதாவது ஒன்னு வேணும்… கண்டிப்பா…” என அவள் பிடிவாதம் பிடிக்க,

“எங்கிட்ட இப்போ கொடுக்குறதுக்கு என்ன இருக்கு?....” என யோசித்தவனுக்கு சட்டென நினைவு வர,

“ஒரு நிமிஷம்டா….” என்றவாறு தன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி அவள் கைகளில் வைத்தான் அவன்….

“ஹே… சகி… என்ன இது?...”

“கோல்ட் செயின்டா… காவேரி மதர் இன்னைக்குத்தான் எனக்கு கொடுத்தாங்க… என்னோட பதினேழாவது வயசில என் தாத்தா எனக்கு கொடுக்க சொல்லி கொடுத்தாங்களாம்… நான் வேண்டாம்னு சொல்லிப்பார்த்தேன் மதர் கேட்கலை… சரி எனக்காக இன்னைக்கு ஒருநாள் போட்டுக்கோன்னு சொல்லி என் கழுத்துல போட்டு விட்டாங்க…” என அவன் விளக்கம் கொடுக்க,

“இது உங்களுக்கு வந்த கிஃப்ட்… அதும் தாத்தா கொடுத்த கிஃப்ட்… இது எனக்கு வேண்டாம்… அதுமில்லாம இது செயின்… இதை நான் வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியாது சகி… அதனால எனக்கு இது வேண்டாம்…” என அவள் மறுக்கவே,

‘இப்போ என்ன உனக்கு கிஃப்ட்ம் வேணும்… பட் செயினையும் வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியாது அப்படித்தான?...” என கேட்க அவள் ஆம் என்றாள்…

“சரி… இந்தா பிடி….” என அந்த செயினில் கோர்த்திருந்த டாலரை எடுத்து அவள் கையில் ஒப்படைத்துவிட்டு, “இந்த சிலுவை போட்ட டாலர் மதர் எனக்கு கொடுத்தாங்க இன்னைக்கு இந்த செயினில் கோர்த்து போட்டுக்க சொல்லி… நான் இதையும் மறுத்தேன்… அவங்களே டாலரை கோர்த்து என் கழுத்தில போட்டு விட்டுட்டாங்க…” என சொன்னதும்,

“இல்ல சகி… எனக்கு இது வேண்டாம்…” என அவள் சொல்லுவதை காதிலேயே வாங்கவில்லை அவன்…

தன் கைகளில் வைத்திருந்த டாலரையே பார்த்திருந்தவள், “ஹ்ம்ம்ம் இதை நான் தொலைச்சிட்டேன்னா?... என்ன பண்ணுறது சகி?...” என அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு அவள் கேட்டதும்,

“நீ நிச்சயமா இதை தொலைக்க மாட்ட…” என உறுதியுடன் அவன் கூறினான்…

“ஹ்ம்ம்… நம்பிக்கை தான்…” என்றவள், “சரி உங்க பையை கொடுங்க…” என அவனிடம் இருந்து பிடுங்கி, அதனுள் துழாவினாள்…

அதில் அவனது ஐடி கார்டோடு சேர்த்து, அவன் சிறுவயது புகைப்படம் ஒன்றும் இருக்க, அதை எடுத்துக்கொண்டவள், தன் பையைத் திறந்து அவன் முன்னர் ஒருநாள் அவளுக்கு கொடுத்திருந்த அந்த குட்டி ஆல்பத்தில் தன் சிறுவயது போட்டாவின் அருகில் அவனது குட்டி புகைப்படத்தையும் சேர்த்து வைத்து,

“இதெப்படி இருக்கு சகி?... இது தான் உங்க ப்ர்த்டே கிஃப்ட்… பட் நான் இதை உங்களுக்கு தர மாட்டேன்… நெக்ஸ்ட் பர்த்டேக்கு தரேன்… ஒகேயா?...” என பாவம் விதியை அறியாது அவள் கேள்வி கேட்டு சிரிக்க அவனும் அந்த பாழாய்ப் போன விதியை பற்றி எண்ணாது அவனும் மகிழ்வுடன் சரி என்றான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.