(Reading time: 8 - 15 minutes)

ப்போது..அந்த இனிமையான வேளையில்..அரண்மனைச் சேவகன் ஒருவன் தர்பாருக்குள்  ஓடிவந்தான்.

அப்படி ஓடிவரும்போது ராஜாதி ராஜ.. ராஜ கம்பீர.. ராஜ மார்த்தாண்ட.. ராஜ குலோத்துங்க.. ராஜ குல திலக என்று சப்தமிட்டபடியே ஓடிவந்தான்..ஆனால் குதிரைவீரனின் உண்மைப் பெயர் தெரியாததால் எப்படி முடிப்பதென்று தடுமாறி மீண்டும் மீண்டும் ராஜாதி ராஜ... என்று ஆரம்பித்துச் சொல்லியபடியே இருந்தான்.அப்போதுதான் பெரிய ராஜாவுக்கு குதிரைவீரனின் உண்மைப் பெயரைக் கேட்டு அறியாமல் இருப்பது புரிந்தது.

அபரஞ்சிதாவின் தந்தையும் பழைய(பெரிய) ராஜாவுமான அவர் குதிரைவீரனை நோக்கி..மருமகனே..ராஜா அவர்களே..உங்களின் உண்மையான பெயரை இதுவரை நானறியேன்..தயவு செய்து சொல்வீராக என்றார்.

மாமா அவர்களே ..தயவு கூர்ந்து மன்னிக்கவும்..சரியான நேரம் வரும்போது அவசியம் என் பெயரையும் நான் யார் என்பதையும் தங்களிடம் தெரிவிப்பேன்..அதுவரை என் பெயர் குதிரைவீரனாகவே இருக்கட்டும் என்றான்.

அப்படியாகில் சம்மதமே என்றார் பழைய(பெரிய) மன்னர்.

குதிரை வீரன் அரண்மனைச் சேவகனைப் பார்த்து சேவகனே நீ சொல்ல வந்ததைச் சொல்வாயாக என்றான்.

அவனும் குதிரைவீரனைப் பணிவுடன் வணங்கி மன்னா...நின் கொற்றம் வாழ்க..நின் புகழ் வாழ்க.. அரண்மனை வாயிலில் ஒர் இளம் பெண்ணும்,இரு ஆடவர்களும் வந்துள்ளனர்.அப்பெண் ஒன்றைக் கூறினாள்.அப்பெண்ணுக்கு தீர்க்க முடியாத சந்தேகம் ஒன்று உள்ளதாம்.அதற்கான விடையை சொல்லக் கூடிய அறிவும் திறமையும் தங்கள் ஒருவருக்கே உள்ளதாகவும் எனவே தங்களைக் காண விழைவதாகவும் தங்களைக்காணாமல் இவ்விடம் விட்டுச் செல்லமாட்டேன் என்றும் கூறினாள் என்றான்.

முடிசூடிய முதல் நாளே இப்படி ஒரு வழக்கா என்று அங்கிருந்த அனைவரும் எண்ண அப்பெண்ணையும்,உடன் வந்தவர்களையும் உள்ளே வரச் சொல் என்று சிறிதும் தயக்கமின்றி சேவகனிடம் கூறினான் குதிரைவீரன்.

அவ்விடம் இருந்த அனைவரும் வாயிலை நோக்கப் பதின் வயதுப் பருவமங்கை ஒருத்தி பிரம்மன் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சிலையோ இவள் என்று எண்ணும் படியாக இருபுரமும் இரு ஆடவர்கள் நடந்து வர தர்பாரின் உள்ளே பையப் பைய நடந்து வந்தாள்...அவள் சொல்லப் போகும் கதையினைக் கேட்டு அவ்வரங்கமே எந்த அளவு அதிரப் போகிறது என்பதை அறியாமல் கண்ணிமைக்கவும் மறந்து அவளின் எழிலார்ந்த மேனியைப் பார்த்தபடி  அங்கே நின்றிருந்தவர்கள் நின்றிருந்தனர். அமர்ந்திருந்தவர்கள் அமர்ந்திருந்தனர்.

புதிதாய் முடிசூடிய மன்னன் குதிரைவீரனுக்கு முன்னால் வந்து நின்ற மூவரும் கைகளைக் கூப்பி தலை தாழ்த்தி பெரிய மன்னருக்கும் புதிய மன்னன் குதிரைவீரனுக்கும் வணக்கம் தெரிவித்தனர்.

மூவரின் முகத்திலும் அப்பியிருந்த சோகத்தைப் பார்தத குதிரைவீரன் ஏதோ பெரும் துன்பம் இவர்களுக்கு நேர்ந்திருக்க வேண்டும் என எண்ணியவனாக..பெண்ணே உங்கள் மூவரையும் பார்த்தால் வெகு தொலைவிலிருந்து வருவதுபோல் தெரிகிறது.மிகவும் களைப்பாய்த் தெரிகிறீர்கள்.முதலில் உணவருந்தி ஓய்வெடுங்கள்.பின்னர் உங்களைப் பற்றிய விபரத்தைத் தெரிவிக்கலாம் என்றான் மிகக் கனிவோடு. 

மன்னிக்க வேண்டும் மன்னாதி மன்னா..உணவருந்தும் நிலையிலும் ஓய்வெடுக்கும் மன நிலையிலும் நாங்கள் இல்லை.பற்றி எரிகிறது மனம்.பதைபதைக்கிறது எங்கள் நெஞ்சம்.உடனடியாக எங்களுக்குத் தேவை உங்களின் அறிவார்ந்த தீர்ப்பு.யாராலும் சொல்லமுடியாத தீர்வினை  இவ்விஷயத்தில் சொல்லக் கூடியவர் நீங்கள் ஒருவரே.ஆகவே நேரம் கடத்தாமல் துன்பமான இன்னிலையிலிருந்து என்னை மீட்பீராக என்றாள் அப்பெண்.அவளின் நீண்ட மீன்கள் போன்ற கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

பெண்ணே..துன்பம் கொள்ள வேண்டாம்..எதுவாகிலும் இச்சபையிடத்து கூறலாம்.உங்கள் மூவருக்கும்

ஏற்பட்டுள்ள பெரும் துன்பம் யாது?.அது ஏற்படுவதற்கான காரணம் யாது? சொல்வாயாக என்றான் குதிரைவீரன் கண்ணீர் வழிய நிற்கும் அப்பெண்னைப் பார்த்து.

ஆண்களில் சிறந்தவரே..அரசர்க்கரசே..ஆரம்பித்தாள் அந்த பதின் வயதுப் பருவ மங்கை..அவள் பேசப் பேச அரங்கம் ஊசி விழுந்தாலும் சப்தம் கேட்கும் அளவுக்கு நிசப்தமானது..ஒரு கட்டத்தில் அரங்கமே மொத்தமாய் அதிர்ந்துபோனது அவள் சொன்ன அந்த விஷயம் கேட்டு... 

அப்படி அரங்கமே அதிரும் வண்ணம் அந்த அழகிய பருவப் பெண் சொன்ன கதை என்ன?விஷயம் என்ன..? அடுத்தவாரம் பார்ப்போமா..?நன்றி..

தொடரும்...

Episode 07

Episode 09

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.