(Reading time: 8 - 16 minutes)

14. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

தி ஜெய்யின் மார்பில் கை வைத்ததும், அவன் உடம்பில் ஏற்பட்ட அதிர்வு, அவனது சொருகிக்கொண்டிருந்த விழிகளை சட்டென பிரித்தது…

விழி திறந்து அவளைப் பார்த்த போது, அவள் வார்த்தைகளைத் தேடி தவித்து கொண்டிருப்பது புரிந்தது…

“ரு………த்………” “ரு……த்….” “ரு….த்….” என திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தாள் அந்த இரண்டு எழுத்துக்களை மட்டும்…

விழிகளோ தனது காதலை கண்ணீரின் வழி தெரியப்படுத்திக்கொண்டே இருக்க… அவளது கரம் மட்டும் அவனது காயத்திலேயே இருந்தது, குருதி வெளியே வராத அளவுக்கு அழுத்தி பிடித்துக்கொண்டு… ஆனாலும் அதையும் மீறி ரத்தக்கசிவு இருந்து கொண்டே இருந்தது…

“சதி……” என்றவனது விழிகள் அவளிடத்தில் தனக்கொன்றுமில்லை என புரியவைக்க முயல, அவள் கேட்டபாடில்லை…

அவள் தனது இன்னொரு கையையும் அழுத்தி அவனது மார்பில் வைத்து தண்ணீர் வெளிவரும் அணையை அடைப்பது போல் வைக்க, குருதி அந்த மலர்க்கரம் இட்ட அணைக்கெல்லாம் கட்டுப்படமாட்டேன் என்பது போல் அவளது விரல்களைத் தீண்டி தாண்டி வெளிவந்து தரையை நோக்கி பாய்ந்தது…

சட்டென தனது துப்பட்டாவை அவிழ்த்து அவனது காயம் பட்ட இடத்தில் எடுத்து முதுகோடு சேர்த்து இறுக கட்டிப்பார்த்தாள்… கட்டிய சில நிமிடங்களிலேயே அவளது துப்பட்டா ஈரமாகி சொத சொதவென்று ஆனது…

அதைப் பார்த்து புன்னகை செய்தவனை, அழுகையும் கோபமுமாக முறைத்தவள், அவனை அங்கிருந்து வெளியே இழுத்து வந்தாள்…

அவன் வந்த கார் தவிர அங்கே வேறெதுவும் நிற்பதற்கான அறிகுறியே தெரியவில்லை… பக்கத்தில் வேறு வீடுகளும் இல்லை…

அந்த தெரு முனை வரை வரைக்கும் ஓடிச் சென்று பார்த்தாள்… எந்த ஆள் நடமாட்டமும் தென்படவில்லை…

ஸ்கூட்டி ஓட்டி பழக்கமிருப்பதால், காரையும் எடுத்துவிடலாம் என்ற நப்பாசையில் அவள் காருக்குள் நுழைகையில் கார் சாவி அங்கே இல்லை…

ஜெய், தான் வரும்போது, காரிலேயே சாவியை விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வந்தது… இப்போது அது இல்லையென்றால் நிச்சயம் அதனை பைரவும் அவனது ஆட்களும் தான் எடுத்துக்கொண்டு போயிருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்த போது

“ஈஸ்வரா….” என வாய்விட்டு கத்தியவள், நினைவு வந்தவளாக, ஜெய்யிடம் ஓடி வந்தாள்…

அவனது சட்டைப்பை இருந்ததற்கான அடையாளமே இல்லாது ரத்தமாகி இருக்க, அவள் வேதனையுடன் தனது விழி மூடிக்கொண்டாள்…

ஜெய் அவளது செய்கையைப் பார்த்துவிட்டு,

“போனைத் தேடுறீயா?...” எனக் கேட்க, அவள் சட்டென நிமிர்ந்தாள்…

மெல்ல அவளருகில் வந்தவன், அவளைத் தாண்டிச் சென்று, டிரைவர் சீட்டுக்கு அடியில் இருந்த போனை எடுத்ததும்,

அவனிடமிருந்து அதனை பிடுங்கி, மடமடவென்று வேகமாக ஆம்புலன்சிற்கு போன் செய்தாள்…

அவர்கள் முகவரி கேட்க, அவள் செய்வதறியாது நின்றாள்… அவள் இப்போது எங்கே இருக்கிறோம் என்றே தெரியாத நிலையில் எப்படி அவளால் முகவரியை சொல்ல முடியும்?...

அழுகை வேறு எட்டிப்பார்க்க,

“போனைக் கொடு…” என அவளிடமிருந்து வாங்கி, அவன் முகவரியை சொல்லிவிட்டு அவளிடம் கொடுத்ததும், இஷானின் எண்களை அழுத்தினாள்…

ரிங்க் போய்க்கொண்டே இருந்ததே தவிர, அவன் எடுத்தபாடில்லை…

“ஈஸ்வரா… ஈஸ்வரா…. ஈஸ்வரா…” என மீண்டும் முணுமுணுத்துக்கொண்டே போன் செய்ய இம்முறையும் அவன் எடுக்கவில்லை…

சில நிமிடங்கள் கழித்து, ஜெய், மெதுவாக காரில் சாய்ந்து நின்று அவன் தனது கண்களை மூட, அவனருகே வந்தவள்,

“கண்ணைத் திறங்க… ப்ளீஸ்… கண்ணைத் திறங்க…” என அவனது கன்னம் தொட்டு எழுப்ப, நெஞ்சின் வேதனை அவனது முகத்தினில் தெரியவில்லை… மாறாக அதனின் தாக்கம் அவனது விழிகளை மூட செய்ய முனைந்தது…

“இன்னும் கொஞ்ச நேரத்துல ஆம்புலன்ஸ் வந்துடும்… ப்ளீஸ் கண்ணைத் திறங்க… எனக்கு பயமா இருக்கு…” என அழ ஆரம்பித்தவள், அவன் கொஞ்சம் கண்ணைத்திறந்ததும்,

“எனக்கு பயமா இருக்கு…. கண்ணை மூடாதீங்க….” என அழ, அவன் சிரித்தான்…

அந்த நிலையிலும் அவன் சிரிப்பது வியப்பைத்தர, எதுவும் சொல்லாமல் விழிகளில் தேங்கியிருந்த நீரோடு அவனைப் பார்த்துக்கொண்டிருந்த போது, ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது…

அதன் பின் அனைத்தும் துரிதமாக நடைபெற, மருத்துவனையில் ஐசியூ பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தான் ஜெய்…

அவன் இருந்த அறைக்கதவின் மேல் சாய்ந்து கொண்டு அவனுக்கு எதுவும் ஆகிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே இருந்த போது, அவள் கையில் இருந்த செல்போன் சத்தம் கொடுத்தது…

இஷான் என்ற பெயரை பார்த்ததும், “அண்ணா…..” என இவள் சத்தமிட்டு அழைக்க, மறுமுனையில் இஷான் ஆடிப்போனான்…

“சதி… என்னடா ஆச்சு?... எங்க இருக்குற?... ஜெய் போன் உன் கையில எப்படி?... என்னாச்சுடா?.. எங்க இருக்குற?...” என அவன் விடாது கேள்விகள் கேட்க, அவள் உடனேயே அவனை அந்த மருத்துவமனைக்கு வர சொன்னாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.