(Reading time: 11 - 21 minutes)

"இல்லைம்மா!"

"பேசாதீங்க!யாரோ சொல்லி எனக்கு தெரிய வேண்டியதா இருக்கு!"

"அது என்ன?சாதாரண ஜூரம் தானே?"

"ம்..சாதாரண ஜூரம் தான் இரண்டு நாளா இருக்குதா?"-என்றவர் அவர்அருகே வந்து மகேந்திரனின் நெற்றியை தொட்டுப் பார்த்தார்.

"ஹாஸ்பிட்டல் போனேளா?"

"ம்ஹூம்!"

"அதுக்கூட செய்யலை!ஈஸ்வரா!குழந்தையா நீங்க?எல்லாத்தையும் சொல்லித்தரணுமா?"-அவரிடமிருந்து ஒரு புன்னகை வெளியானது.

"சிரிக்காதீங்க!மணி பத்தாகுது!எதாவது சாப்பிட்டீங்களா?"

"ம்ஹூம்!"

"அதுவும் செய்யலை!என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க?"

"ஏ..என்னால முடியலைடி!எனக்காக செய்ய இங்கே யார் இருக்கா சொல்லு?"-அவர் தொடுத்த கணையில் காயத்ரியின் சர்வ நாடியும் ஒடுங்கிப் போனது.

"உங்களுக்காக இருக்கிறவளிடமும் விவரம் சொல்ல மாட்டீங்க!எனக்கு தெரிந்தால் தானே நான் வந்து பார்க்க?"-பதிலுக்கு தாக்கினார் அவர்.

"பேசாம இருங்க!நான் போய் எதாவது செய்து எடுத்துட்டு வரேன்!"

"அதெல்லாம் வேணாம் செல்லம்!"

"வேணாம்னா!சாப்பிடாம இருப்பிங்களா?"

"வெளியே இருந்து வாங்கிட்டு வர சொல்றேன்!"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்!நீங்க இருங்க!"-என்றவர் நேராக சமையலறைக்குள் நுழைந்தார்.

மகேந்திரனின் மனதில் ஏதோ ஒருவித நிம்மதி பரவியது!!தனிமையில் தவித்த அவர் இதயத்திற்கு மயிலிறகால் ஆறுதல் வழங்கினார் காயத்ரி.மனதின் காயங்கள் அனைத்திற்கும் ஒரு வடிகலாய் கிட்டியது காயத்ரியின் காதல்.ஒரு புன்னகையோடு சமையலறைக்குள் நுழைந்தார் அவர்.தனக்கென வந்தவள்,தன் நலனுக்காக உழைத்துக் கொண்டிருப்பதை காண எந்த ஆண்மகனுக்கு தான் மனம் கர்வம் கொள்ளாது??மனம் பெருமிதத்தில் மிதந்தது!!மெல்ல ஒவ்வொரு அடியாய் முன்னேறி மனம் பறித்தவளை நெருங்கினார் மகேந்திரன்.அவரது நெருக்கத்தை உணர்ந்த போதிலும் ஏதும் பேசாமல் தன் பணியில் கவனம் பதித்திருந்தார் காயத்ரி.காதல் மட்டும் அங்கு நிலைத்திருக்க,உண்மை உலகை மறந்தவர்,தன் மனையாளை மெல்ல தன் வசத்தில் பிணைத்தார்.சில நிமிடங்கள் திக்கற்ற பேரமைதி நிலவியது!!

"விடுங்க!"-மிக மெல்லிய குரலில் தயங்கியப்படி உத்தரவிட்டார் காயத்ரி.

"ம்ஹூம்!"

"ஐயோ!விடுங்க!"-செல்லமாய் தன்னவரை தள்ளினார்.

"என்ன இது புது பழக்கம்?வர வர ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க!"

"நான் எல்லாம் நல்லப்பிள்ளையாக தான் இருந்தேன்!நீ வந்து தான் மாற்றிவிட்டுட்ட!!"

"முதல்ல இங்கிருந்து போங்க!"

"நான் உனக்கு ஹெல்ப் பண்ண தான் வந்தேன் செல்லம்!"

"ஒண்ணும் வேணாம்!"

"இல்லை...புதுசா வந்திருக்க இல்லையா!எது எது எங்கிருக்குதுன்னு தெரியாதுல அதான் ஒரு உதவிக்கு.."

"ம்...இது என்னோட வீடு!நான் பார்த்துக்கிறேன்!நீங்க போய் ரெஸ்ட் எடுங்க!"

"போகணுமா?"

"போங்க!"

"சரி..சரி..தள்ளாதே!போறேன்!"-சமையலறையை தியாகித்து வெளி வந்தவர்,சோபாவில் சென்று அமர்ந்தார்.உடலில் மீண்டும் சோர்வு வந்து ஒட்டிக்கொள்ள,அப்படியே கண்களை மூடிக்கொண்டார்.

நேரம் சிறிது கடந்திருக்கலாம்!

"ஏங்க!"-காயத்ரியின் குரல் செவிகளில் விழ,கண் விழித்தார் அவர்.

"என்னம்மா?"

"எழுந்து சாப்பிடுங்க!"

"அதுக்குள்ள சமைத்துட்டியா?"

"ம்...சாப்பிடுங்க!"-சூடாக சில இட்லிகளையும்,தொண்டைக்கு இதமாக மிளகு சாம்பாரையும் பரிமாறினார் காயத்ரி.

"இரு செல்லம்!ஃப்ரஷ் ஆயிட்டு வரேன்!"

"சீக்கிரம் வாங்க!"

"ம்..."-எழுந்து சென்று சில நிமிடங்களில் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு திரும்பினார் மகேந்திரன்.

"சாப்பிடுங்க!"

"ஊட்டி விடுறீயா?"-ஏக்கமாக கேட்டவரை சில நொடிகள் ஆழமாக ஊடுருவினார் காயத்ரி.பின்,அச்சிற்றூண்டி பரிமாறப்பட்ட தட்டினை எடுத்தவர்,சிறிது சிறிதாக பிய்த்து அவரை உண்ண வைத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.