(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 01 - மது

Heart

ழை!!!

வானத்து இடியோசை செவிகளில் தாளமாய், நிலத்தின் மண்வாசம் நாசிகளில் சுவாசமாய், சில்லென்ற தென்றலில் தேகம் சிலிர்க்க, அந்தி மாலை கருமையைக் கண்கள் தீட்டிக் கொள்ள வானில் இருந்து துள்ளி குதித்து தாவி வரும் மழையை  இரு கரம் கொண்டு ஆரத் தழுவிடவே, மலரிதழ் முத்தம் ஒன்று பதித்திடவே...

அந்த அரங்கத்தின் வாயிலை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள்  அவள்.

உள்ளங்கையை விரித்து வான் நோக்கி அவள் முகம் நிமிர்த்திட சரியாக அக்கணம் முதல் மழைத்துளி அவள் இதழ்களில் ஸ்பரிசம்.

மழையின் தீண்டலில் அவள் மழலையாகி உருகிவிட, மனம் நிறைந்த மகிழ்ச்சியில் கன்னம் குழிய, அந்தக் கார்கால இருளில் வதனம் ஒளிர மெல்லத் திரும்பி அவனைப் பார்த்து புன்னகைத்தாள். 

மார்பின் குறுக்கே இருகைகளைக் கட்டியபடி தளர்வாய் தூண் ஒன்றின் மீது சாய்ந்து கொண்டிருந்தவனின் கம்பீர நீண்ட தேகத்தின் தீட்சண்யமான இருவிழிகள் அவளின் பூரிப்பில் கனிந்திட அவன் உதடுகளோ அவள் புன்னகையைப் பிரதிபலிக்கும் வண்ணம் மலர்ந்து மகிழ்ந்தன.

சிறிது நேரத்தில் சோவென ஆரவாரமாய் மழை நர்த்தனமாட சற்றே தள்ளி நின்று அணுஅணுவாய் அதன் எழிலை ரசித்து தன் கண்கள் வழியே நினைவுகளில் நிறைத்துக் கொண்டவள்  அழகான புன்னகையைத் தரித்தபடியே அவனை நோக்கி நடந்து வந்தாள்.

அவள் மெல்ல மெல்ல முன்னேற அவன் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

அவளை முதன்முதலாக அவன் பார்த்ததும் இதே இடத்தில் தான். அன்றும் இது போலவே மழையை ரசித்துக் கொண்டிருந்தாள் போலும்.

அன்றைய நாளில் அவனுக்கு அவள் யாரோ எவரோ! அவன் நினைவுப் படுகைகளில் தெளிவற்ற நீராவியாய்!!!

சில வருடங்களுக்குப் பின் இதே இடத்தில் தான் இது போலவே ஒரு மழை நாளில் தான் பாலைவனத்தில் உயிரூற்றாய் அவன் வாழ்வில் அவள் பிரவாகம்.

சுமையை முதுகில் சுமந்து ஊர்ந்து போகும் ஆமையென, அவ்வபோது கூட்டினுள் முடங்கிக் கொள்ளும் நத்தையென அவள் வாழ்வில் வண்ணப் பட்டாம்பூச்சியின் வானமாய் அவன் பிரவேசம்.

ன்னிரண்டு ஆண்டுகள்!!!

மேடு பள்ளங்கள், தடைகள், வறட்சி அத்தனையையும் தாண்டி அவன் கரைகளிலே ஜீவநதியாக அவள் வாழ்வோட்டம்.

அவள் வறண்டு போகும் போது குறுகி, பொங்கி எழும் போது விரிந்து என அவளின் அணையாய் தொடரும் அவன் பயணம்.

ஏதோ ஒரு கடலில் சங்கமிக்கும் வரை தானே கரையோடு நதியின் பந்தம்??? இது வாழ்வின் நிர்பந்தம் அன்றோ!!!

அப்படி இல்லை.

பிரபஞ்ச வெளியில் இணைப்பாதைகளில் செல்லும் இரு அலைக்கதிர்களின் வரைமுறை இல்லா வரையறையற்ற பயணம் அவளோடு அவன் சொந்தம்.

அவன் மேல் அவளும் அவள் மேல் அவனும் கொண்டிருக்கும் உணர்வு. எந்த உறவிற்குள் அடங்கி விடக் கூடும் இவர்கள் பிணைப்பு!!! அன்பு, நேசம், பாசம், பக்தி, பரிவு, நட்பு, காதல் என்ற எண்ணற்ற வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றில் முற்றுப் பெற்று விடுமா!!!

எல்லாவற்றிற்கும் ஓர் முடிவு உண்டு. அனைத்திற்கும் எங்கேனும் ஓர் முற்றுபுள்ளி உண்டு. இது இயற்கையின் நியதி எனில் இவர்கள் பந்தமும் முற்றுப் பெறும்!!!

முடிவிலியின் முடிவினிலே......

ந்த இரவு நேர நிசப்தத்தில் சீரான தாளத்தில் தூரத்து அலைகடலோசையை ரசித்தபடியே பால்கனி தூணில் சாய்ந்திருந்தவள் மனம் மேகமில்லா இரவு வானம் போல நிர்மலமாக இருந்தது.

வாழ்க்கை என்பதும் கடல் தான். அதில் மனமானது அலையைப் போல் எந்நேரமும் அமைதியின்றி ஏதோ ஒரு தேடலை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறது. சரி இலக்கை அடைந்ததும் நிம்மதியாக நிலைத்து இருக்கிறதா. அது தான் இல்லை. ஒன்றை அடைந்தவுடன் மற்றொன்றை நோக்கிய தேடல்.

கரையைத் தேடி தாவி வரும் பேரலை அதை அடையும் முன்பே சில நேரம் வடிந்துவிடுவதைப்  போலத் தான் மனமும் அடிக்கடி துவண்டு போய்விடுகிறது. மீண்டும் அதில் இருந்து மீண்டு எழுந்து எதிர்நீச்சல் போட்டு கரையை நோக்கி தாவி வருவதற்குள் என்ன வாழ்க்கை இது என்ற சலிப்பு தட்டிவிடுகிறது.

மனமே!! சற்று கரை மீதான ஆசையை விடுத்து அகம் என்னும் நடுக்கடல் நோக்கி வா!!! அங்கே அலைகள் உன்னை இன்பமாக ஊஞ்சலாட்டும்!!! அமைதியும் நிம்மதியும் சூழ சற்றே இளைப்பாறு!!!

ஆனால் வாழ்க்கையின் இந்த இனிமையை உணர்ந்து ரசிப்பதற்குள் தான் எத்தனை எத்தனை வலிகள், தோல்விகள், ஏமாற்றங்கள். ஆறாத ரணமாக, ஆறிவிட்டாலும் மறையாத வடுவாக.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.