(Reading time: 26 - 51 minutes)

தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 02 - சிவாஜிதாசன்

Samrat Samyukthan

 

அத்தியாயம் 1.2 : காவலும் காதலும்

ரவு நேர குளிர் தென்றலில் இரு புள்ளிமான்கள் நடந்து சென்றுகொண்டிருந்தன. ஆண் மான் தன் ஜோடி மானை பொய் கோபத்தோடு முறைத்துக்கொண்டே வந்தது. பெண் மானோ மனதில் ஆயிரமாயிரம் கனவுகளோடு கற்பனையும் கலந்து உடலை மட்டும் உலகில் உலாவவிட்டு உள்ளத்தால் விண்ணைத் தாண்டி தனக்கென வடிவமைத்த கனவுலகில் நுழைந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் சிறகடித்துப் பறந்தது.

திடீரென வேடன் ஒருவன் ஓடிவர ஆண் புள்ளிமான் தன் காதலியை மரத்தின் பின்னால் மறைந்துகொள்ளச் சொன்னது. பெண் மானும் மறைந்துகொண்டது. நிச்சயம் அந்நேரத்தில் பார்த்திபன் சம்யுக்தனுக்கு வேடனாகவே தோன்றினான். மரத்தின் பின்னால் மறைந்திருந்த பூங்கொடி, இன்பமயமான நேரத்தில் கரடி போல் நுழைந்த பார்த்திபனை மனதிற்குள் கருவினாள்.

சம்யுக்தனின் முன்னால் வந்து நின்ற பார்த்திபனுக்கு மூச்சு வாங்கியது.

சம்யுக்தன், "ஏன் இவ்வளவு அவசரமாக ஓடி வருகிறாய்? என்ன ஆயிற்று?" என்று வினவினான்.

பார்த்திபன் மூச்சு வாங்கிக்கொண்டே, "கோயிலுக்கு சென்று திரும்பும் வழியில் உன் மாமன் மகள் பூங்கொடியை காணவில்லை என்று அவளுடைய தோழிகள் பதை பதைப்புடன் என்னிடம் வந்தார்கள். எனக்கு என்னவோ இது எதிர் நாட்டு சதி வேலையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. அதனால் தான் உன்னிடம் ஓடி வந்தேன்" என்று கூறினான்.

பார்த்திபன் கூறியதை கேட்ட சம்யுக்தன், "ஓடி வந்த களைப்பு தீர முதலில் தண்ணீர் அருந்து" என்று கூறினான்.

அதைக் கேட்ட பார்த்திபன், "உன் மாமன் மகளைக் காணவில்லை என்று கூறுகிறேன். நீ சற்றும் பதற்றமின்றி என்னை தண்ணீர் அருந்த சொல்கிறாயே. எனக்கு என்னவோ அவர்கள் பூங்கொடியை கடத்திக்கொண்டு போயிருப்பார்களோ என்று தோன்றுகிறது" என்றான்.

"கவலைப்படாதே, அவளைக் கடத்தினால் கடத்தியவர்களுக்கு தான் ஆபத்து"

அதைக் கேட்ட பூங்கொடி, "என்ன சொன்னீர்கள்?" என்று கூறி மரத்தின் மறைவிலிருந்து எட்டிப் பார்த்தாள்..

அதைப் பார்த்த பார்த்திபன், "ஐயோ! மோகினிப் பிசாசு!" என்று அலறினான்.

பூங்கொடி பார்த்திபனின் அருகில் வந்து, "என்னைப் பாரத்தால் தங்களுக்கு மோகினிப் பிசாசு போலவா இருக்கிறது?" என்று கூறி சிரித்தாள்.

"உன்னைப் பாரத்தால் அப்படி தெரியவில்லை. ஆனால், உன் கொலுசின் ஒலியைக் கேட்டால் மோகினி தான் என்று தோன்றுகிறது"

அதைக் கேட்ட பூங்கொடி சம்யுக்தனைப் பார்த்து, "என்ன அத்தான், அவர் சொல்வதைக் கேட்டு நீங்கள் அமைதியாக நின்றுகொண்டிருக்கிறீர்களே" என்றாள்.

சம்யுக்தன், "என்னால் முடியாததை அவன் சொல்கிறான். மிக்க நன்றி, பார்த்திபா" என்று வேடிக்கையாக கூறி விட்டு, "அது இருக்கட்டும், நீ தோழிகளிடம் சொல்லிவிட்டுத் தான் வந்தேன் என்றாயே, பிறகு ஏன் அவர்கள் உன்னைத் தேடவேண்டும்?" என்று கேட்டான்.

"நான் அவர்களிடம் சொல்லி விட்டுத்தான் வந்தேன் அத்தான், அவர்கள் காதில் ஒழுங்காக விழவில்லை போலிருக்கிறது"

"சரி, பரவாயில்லை. உன் தோழியரிடம் உன்னை சேர்த்துவிடுகிறேன். உன் தாய் தந்தையர் உன்னைக் காணாமல் வருத்தப்படப்போகிறார்கள். கிளம்பலாம்"

"இன்னும் சிறிது நேரம் பேசி விட்டு செல்லலாம் அத்தான்"

சம்யுக்தன், "நீ பார்த்திபனுடன் பேசிக்கொண்டிரு, நான் வருகிறேன்" என்று கூறி சில அடிகள் முன்னால் நடந்தான்.

அதைக் கேட்ட பார்த்திபன் சிரித்துக்கொண்டே, "எனக்கு சம்மதம், உனக்கு" என்று பூங்கொடியைப் பார்த்து கேட்டான்.

பூங்கொடி அவனை கோபமாக முறைத்துக்கொண்டே சம்யுக்தனின் பின்னால் நடந்து சென்றாள். அவர்களுடன் பார்த்திபனும் சென்றான்.

உடனே சம்யுக்தன், "நீ ஏன் எங்களுடன் வருகிறாய், நீ இங்கிருந்து காவல் புரி" என்று கூறினான்.

பார்த்திபன், "இல்லை சம்யுக்தா, காவல் செய்யும் காளையர்களைப் பார்த்து பார்த்து கண்கள் வறண்ட பாலைவனம் போல் ஆகிவிட்டன. அங்கே வந்து கன்னியர்களைப் பாரத்தால் என் கண்களுக்கு சற்று குளிர்ச்சி ஏற்படும் அல்லவா" என்று பதிலுரைத்தான்.

சம்யுக்தன், "அவர்கள் கன்னியர்கள் அல்ல, கள்ளியர்கள்" என்றான்.

பார்த்திபன், "ஆம். என் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட கள்ளியர்கள்" என்றான்.

பூங்கொடி, "பேச்சை நிறுத்தினால் சற்று வேகமாக செல்லலாம்" என்றாள்.

உடனே பார்த்திபன், "தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்!" என்று சற்றே பரிகாசத்துடன் கூறினான். 

பார்த்திபன், பூங்கொடி கொண்டு வந்த தீப்பந்தத்தை கையில் பிடித்தபடி செல்ல அந்த கும்மிருட்டில் மூவரும் அமைதியாக நடந்து சென்றார்கள். அந்த தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் சம்யுக்தனும் பூங்கொடியும் ஒருவரை ஒருவர் ரகசியமாக பார்த்துக்கொண்டே மௌனபாஷை பேசினார்கள்.

அப்போது சிறிது தூரத்தில் ஒரு மாட்டு வண்டி நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த பூங்கொடி, "ஐயோ!" என்று அதிர்ச்சியானாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.