(Reading time: 26 - 51 minutes)

அப்போது பூங்கொடிக்கு எதிரில் இருந்த பெண்மணியைப் பார்த்தான். அவர் சற்று வயதான பெண்மணி. நூலினால் ஆன சிகப்பு வண்ண சேலையை அணிந்திருந்த அவர் அதன் முந்தானையால் தலையைப் போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்தார்.

'இந்தப் பெண்ணை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லையே' என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே, மீண்டும் அப்பெண்ணை நோக்கினான்.

சம்யுக்தன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த அந்த பெண்மணி, "ஏனப்பா, இந்த வயதானவளை அப்படி வெறித்துப் பார்க்கிறாய்?" என்று கேட்டார்.

சம்யுக்தன், "இல்லையம்மா, நான் இதற்கு முன் தங்களைப் பார்த்ததே இல்லையே, அதான் யாரென்று பார்க்கிறேன்" என்றான்.

"சிறிது காலத்திற்கு முன்னால் தான் நான் இந்த ஊருக்கு பிழைப்பு தேடி வந்தேன்" என்றார் அந்த பெண்மணி.

சம்யுக்தன், "நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?" என்று கேட்டான்.

"அரண்மனைக்கு பக்கத்து வீதியில் ஒரு சிறு குடிசையில் தங்கி, மோர் விற்று பிழைப்பு நடத்தி வருகிறேன்"

சம்யுக்தன், "நல்லது தாயே" என்று கூறி விட்டு வண்டியை வேகமாக செலுத்தினான்.

சிறிது நேரத்தில் வண்டி அரண்மனையைத் தாண்டி சென்றது. அப்போது அந்த பெண்மணி, "நான் இங்கே தான் இறங்க வேண்டும், வண்டியை நிறுத்துங்கள்!" என்றார்.

வண்டியும் நின்றது. அவர் இறங்கி அந்த வீதியில் நடந்து செல்வதை சம்யுக்தன் ஒரு சிந்தனையோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது, பூங்கொடி, "அத்தான், என்ன சிந்தனை? நேரமாகிறது" என்றாள்.

சிந்தனை கலைந்த சம்யுக்தன் வண்டியை வேகமாக செலுத்திக்கொண்டு சென்றான்.

நான்கு வீதிகளைத் தாண்டி பூங்கொடியின் வீட்டின் முன் வண்டி நின்றது. எல்லாரும் வண்டியை விட்டு இறங்கியதும், வண்டிக்காரர் வண்டியை அதற்கான இடத்தில் சென்று நிறுத்திவிட்டு, மாடுகளை அவிழ்த்து அவற்றை அதன் கொட்டகையில் சென்று கட்டினார்.

பூங்கொடியின் தோழிகள் அவளிடம் விடை பெற்றுச் சென்றனர். மாடுகளின் கழுத்துகளில் கட்டப்பட்டிருந்த மணிகளின் ஒலியைக் கேட்டு பூங்கொடியின் பெற்றோர் வெளியே வந்தனர்.

பூங்கொடியின் தாய், "பூஜை முடிந்து வர இவ்வளவு நேரமா?" என்று கேட்டார்.

"இல்லையம்மா, பூஜை முடிந்து சரியான நேரத்திற்குத் தான் புறப்பட்டேன். வழியில் அத்தான் தான் ஏதோ பேசவேண்டும் என்று கூறி தாமதப்படுத்திவிட்டார்; அதன் பிறகு, வண்டிக்காரரிடம் தான் தான் வண்டியை ஓட்டிக்கொண்டு வருவேன் என்று அடம் பிடித்து எங்களை அழைத்து வந்தார்" என்று பூங்கொடி அப்பாவியாக கூறினாள்.

அதைக் கேட்டு சம்யுக்தன் திரு திருவென்று முழித்தான்.

அப்போது அவளுடைய  தந்தை, "சம்யுக்தன் மிகவும் நல்ல பிள்ளை ஆயிற்றே, அவன் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை, எனக்கு உன் மேல் தான் சந்தேகமாக இருக்கிறது" என்றார்.

"என்னப்பா, உங்கள் பெண்ணை நீங்களே சந்தேகப்படுகிறீர்களே, இது நியாயமா?"

"சம்யுக்தன் மீது அவதூறு கூறினால் உன் மேல் தான் தவறு இருக்கும்"

அதைக் கேட்டு பொய்யாக கோபித்துக்கொண்ட பூங்கொடி தாயின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டு சம்யுக்தனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

"வா, சம்யுக்தா. சற்று இளைப்பாறி விட்டு செல்" என்று பூங்கொடியின் தந்தை அழைத்தார்.

"இல்லை, மாமா. எனக்கு இன்று காவல் பணி இருக்கிறது, நான் உடனே செல்ல வேண்டும்"

"எப்படி செல்லப் போகிறாய்?"

"சிறிது தூரம் தானே, நடந்தே சென்று விடுவேன்"

"என் குதிரை வீட்டின் பின்புறம் கட்டப்பட்டு இருக்கிறது, அதை எடுத்துக்கொண்டு செல்"

"சரி மாமா, காவல் பணி முடிந்ததும் நானே குதிரையை கொண்டு வந்து விடுகிறேன்".

"ஆகட்டும் சம்யுக்தா"

சம்யுக்தனும் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு குதிரையை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றான்.

ம்யுக்தன் நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டான். அவன் கண்கள் நாலாபுறமும்  சுழன்று தன்னை யாரேனும் பின்தொடர்கிறார்களா என்று கண்காணித்துக்கொண்டே வந்தன. அடர்ந்த இருள் சூழ்ந்த காட்டின் வழியே மிதமான வேகத்தில் அவன் குதிரை சென்றுகொண்டிருந்தது.

மக்கள் பகலில் செல்வதற்கு கூட பயம் கொள்ளும் அந்த அடர்ந்த காட்டில் சம்யுக்தன் எவ்வித அச்சமும் இன்றி சென்றான். புலி, சிங்கம், நரி, ஓநாய் என எல்லா வகையான கொடிய மிருகங்களும் அக்காட்டினை புகலிமாடாய்க் கொண்டு வாழ்ந்து வந்தன.

திடீரென, குதிரை குளம்புகளின் ஒலி காட்டில் பரவவே சிங்கங்கள் கர்ஜித்தன. தூரத்தில் யானைகளின் பிளிறல் காட்டையே அதிரச் செய்தன. ஓங்கி வளர்ந்த மரங்கள் பூதாகரமாக காட்சி தந்து தங்கள் பங்கிற்கு கிலியை உண்டாக்கின.

மரக்கூட்டத்தைத் தாண்டி சமவெளிக்கு வந்தான் சம்யுக்தன். குதிரையின் வேகத்தை நிறுத்தி அரை நாழிகை குதிரைக்கு ஓய்வு கொடுத்து தானும் ஓய்வு மேற்கொண்டான். தான் எடுத்து வந்த தீப்பந்தத்தின் தீ ஜுவாலைகளை காய்ந்த சருகுகள் மீது படரவிட்ட சம்யுக்தன் தன்னைச் சுற்றி நெருப்புப் படலத்தை உருவாக்கி தன்னைப் பாதுகாத்துக் கொண்டான். சிங்கங்களின் கர்ஜனை வெகு அருகில் கேட்டது. சம்யுக்தனோ எந்த சலனும் இன்றி இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.