(Reading time: 26 - 51 minutes)

வீரபுர இளைஞர்கள் போர்ப் பயிற்சி மேற்கொள்ளும் காலத்தில் அடர்ந்த காட்டினுள் எந்த ஆயுதமும் இல்லாமல் ஒருமாத காலம் வாழ வேண்டும். காட்டிற்கு சென்ற சிலர் பல மாதங்கள் ஆகியும் வீடு வந்து சேரவில்லை என்றால் அவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பு இருக்காது, உடலும் கிடைக்காது. அவ்வாறான சமயங்களில் பெற்றோர்கள் மிகுந்த வேதனைக்குள்ளானபோதும், எல்லா பெற்றோர்களும் தங்கள் மகன் சிறந்த வீரனாக வேண்டும் என்றும் கடுமையான பயிற்சி, வீரர்களின் தன்னம்பிக்கையையும் அறிவுக்கூர்மையையும் பலப்படுத்தும் என்றும் நம்பிக்கை கொண்டார்கள்.

தான் காட்டினுள் வாழ்ந்த அந்த நாட்களை சம்யுக்தன் எண்ணிப் பார்த்தான். எப்போது நினைத்தாலும் அவன் உடல் உதறல் எடுத்துக்கொள்ளும் அளவு பயங்கரமானதாய் இருந்தது. வாள் வீச்சிலும் வீரத்திலும் கெட்டிக்காரனாக இருந்தாலும் காட்டு வாழ்க்கை அவனை பயமுறுத்தியது. உண்ண உணவு, குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் காட்டில் பல மைல் தூரம் நடந்து மயங்கி விழுந்திருக்கிறான்.

உடலில் வலு குறைந்து வேட்டையாட கூட முடியாமல் கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பிற்கே சென்ற தருணத்தில், சிறிது தூரத்தில் புலி ஒன்று மானை வேட்டையாடியதைக் கண்டான். பசி அவனை மிருகமாகியது. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று அவன் எண்ணவில்லை. புலியை நோக்கி ஓடினான். சம்யுக்தன் வெறியோடு ஓடி வருவதைக் கண்ட புலி, மானை கீழே போட்டுவிட்டு அவனைக் கடித்துக் குதறத் தயாரானது.

சம்யுக்தனும் புலியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். புலி தன் காலைத் தூக்கி சம்யுக்தனை ஓங்கி அறைந்தது. அப்படி ஓர் அடியைத்  தாங்கிக்கொண்டு மீண்டும் எழுந்து நின்றதே அதிசயமாய் அவனுக்கு தோன்றியது. தோள்பட்டையில் ரத்தம் பீறிட்டு வந்து கடுமையான வலியை உருவாக்கியது.

பசியை விட தன்னைத் தாக்கிய புலியைக் கொல்வதே லட்சியம் என தீர்மானித்தான். மீண்டும் ஓடினான். புலியுடன் போராடினான். அதன் கோரமான பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்தான். அந்த நேரத்தில் அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து புலியின் முகத்தில் ஓங்கி அறைந்தான் சம்யுக்தன். புலியின் பிடி தளர்ந்தது.

தன் சக்தியை எல்லாம் திரட்டி புலியின் வாயை வெறியோடு பிடித்து திருப்பினான். அவனால் நீண்ட நேரம் சமாளிக்க முடியவில்லை  அருகில் கிடந்த கூரான குச்சியை எடுத்து புலியின் இடது கண்ணில் குத்தினான். புலி வலியால் அலறியது. சம்யுக்தனின் உடல் முழுவதும் ரத்தக் கீறல்கள். ஆயினும், அவன் வெறி அடங்கவேயில்லை. பெரிய பாறாங்கல்லை எடுத்து புலியின் தலையில் போட்டு கொன்றான்.

தன்னைத்தனியாக புலியைக் கொன்றதை பெருமையாக எண்ணினான். அவனது தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரித்தது. பசியைப் போக்க மான் கறியை உண்டான். காட்டு மிருகங்களுக்கு நடுவே பயமின்றி வாழத் தொடங்கிய சம்யுக்தன், வேட்டையாட பழக்கப்பட்டு காட்டு வாழ்க்கையை வாழ்ந்து முடித்தான்.

பழைய நினைவுகளை சிந்தனையில் ஓட்டியபடி இருந்த சம்யுக்தன் வானில் தவழ்ந்துகொண்டிருந்த வெண்ணிலாவை நோக்கினான். 'தான் வர வேண்டிய நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிட்டோம், இன்னும் சிறிது தூரம் தான் செல்ல வேண்டும்' என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு எழுந்து நின்றான்.

மீண்டும் குதிரையின் மேல் ஏறிய சம்யுக்தன் இரண்டு நாழிகையின் பயணமாக காட்டின் எல்லையை வந்தடைந்தான்.  குதிரையை அருகில் இருந்த மரத்தடியில் கட்டிவிட்டு ஓங்கி வளர்ந்த ஆலமரத்தின் மேல் ஏறி அருள்நம்பி வருகிறானா என்று பார்த்தான்.

அருள்நம்பி குதிரையில் வேகமாய் வந்து கொண்டிருந்தான். அவனை விரட்டியபடி சில நாகவன வீரர்கள் தீப்பந்தத்தை கையில் தாங்கியபடி குதிரையில் வந்து கொண்டிருந்தனர். சம்யுக்தன் அவர்களோடு போரிட தன் வாளை தயாராக வைத்துக்கொண்டு கீழே இறங்கினான். குதிரையில் ஏறி அருள்நம்பியை நோக்கி சென்றான். அருள்நம்பியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று அவன் மனம் துடித்தது.

குதிரையை வேகமாய் செலுத்தினான். திடீரென, அருள்நம்பியை துரத்திக்கொண்டு வந்த வீரார்கள் மாயமாய் மறைந்தனர். அருள்நம்பி மட்டும் தனியாக வந்தான். அக்காட்சி சம்யுக்தனை மிகவும் குழப்பத்திற்குள்ளாக்கியது. குதிரையில் வேகமாய் வந்த அருள்நம்பியும் திடீரென புதரினுள் மறைந்து போனான்.  .

புதரை நோக்கி தன் குதிரையை விரட்டினான் சம்யுக்தன். புதரில் இருந்து அருள்நம்பி கையில் தீப்பந்தத்தோடு வெளியே வந்தான். சம்யுக்தன் அதிர்ச்சியில் மிரண்டான்..

அருள்நம்பி கழுத்தில் தலையில்லாமல் முண்டமாய் வந்தான்.. சில அடி தூரத்தில் அவனது உடல் கீழே விழுந்தது. சம்யுக்தன் குதிரையில் இருந்து கீழிறங்கி அருள்நம்பியின் உடலை தன் தோள்களில் தூக்கினான். அவன் கண்கள் சினத்தால் சிவந்திருந்தன. சுற்றும் முற்றும் எதிரிகளை தேடினான்.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.