(Reading time: 26 - 51 minutes)

தூரத்தில் ஓர் உருவம் நடந்து செல்வது மட்டும் அவனுக்கு தெரிந்தது. தீப்பந்தத்தை எடுத்து கையில் பிடித்தான் சம்யுக்தன். அந்த உருவம் நின்றது .அலட்சியமாக சம்யுக்தனை நோக்கி நடந்து வந்தது. வாளை வெறியோடு பிடித்தபடி அவ்வுருவத்தை நோக்கி ஓடினான் சம்யுக்தன். ஆனால், அந்த உருவம் திடீரென மாயமாய் மறைந்தது.

ளிங்கினால் கட்டப்பட்ட வானளாவிய ஓர் அரண்மனை. எதிரிகள் எளிதில் உள்ளே நுழைய முடியாதபடி அரண்மனையைச் சுற்றிலும் கற்களால் கட்டப்பட்ட பெரிய கோட்டை இருந்தது. அந்த கோட்டை மதில் சுவரின் மேல் வீரர்கள் காவல் புரிந்து கொண்டிருந்தனர். சூரியன் இல்லாத ஆணவத்தில் இரவின் இருளானது அந்த கோட்டையை கௌவ்விக்கொண்டிருந்தது. அந்த இருளை விரட்டுவதற்காக ஆங்காங்கே தீப்பந்தங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. கோட்டை வாயிலின் பெரிய கதவானது இழுத்து தாள் போடப்பட்டிருந்தது. அந்த நுழைவாயிலில், கையில் ஈட்டியுடன் வீரர்கள் காவலுக்கு நின்றிருந்தார்கள். அந்த கோட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. முதலைகள் நிறைந்து காணப்பட்ட அந்த அகழித் தண்ணீரில் தெரிந்த வான் நிலவு மற்றும் விண்மீன்களின் பிம்பம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது..

அரண்மனைக்குள்ளே ரகசிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில், அரசர் குலசேகரவர்மனுடன், ராஜகுரு, மந்திரி தேவராஜன் மற்றும் சில மந்திரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

அந்நேரத்தில் காவல் சிப்பாய் ஒருவன் அங்கே வந்து அரசருக்கு பணிவோடு வணக்கத்தைத் தெரிவித்து, அருகில் இருந்த ராஜகுருவின் காதில் ரகசியமாக எதையோ கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். மன்னர் கேள்விப் பார்வையை ராஜகுருவின் மேல் வீசினார். 

"ஒற்றன் கொல்லப்பட்டுவிட்டான்".

அரசரின் முகம் சினத்தால் சிவந்தது.

"ஒற்றன் கொல்லப்பட்டுவிட்டான்.என்ற செய்தியைக் கொண்டு வந்து சேர்த்தது எனது நம்பிக்கைக்குரிய ஒருவன். ஒற்றனை கொன்றது நாகவன அரசன் மார்த்தாண்டன்"

"மார்த்தாண்டனை அவன் கண்டானா?"

"இருவர் கண்டுள்ளார்கள்"

எல்லோரும் புரியாமல் விழித்தனர்.

"சம்யுக்தனும் அங்கே இருந்திருக்கிறான். மார்த்தாண்டனுடன் மோதுவதற்கு அவன் துணிந்திருக்கிறான்" என கூறியவாறே ராஜகுருவின் கண்கள் மந்திரி தேவராஜனை நோக்கின.

தேவராஜன் சிலையென அமர்ந்திருந்தார். 

"மார்த்தாண்டன் தான் கொன்றான் என எப்படி சொல்கிறீர்கள்?" என அரசர் கேட்டார்.

"தனது எதிரி தப்புவதற்கு எல்லா வாய்ப்பையும் கொடுத்துவிட்டு, தான் தப்பித்துவிட்டோம் என எதிரியை மகிழ்ச்சியடையச் செய்துவிட்டு, திடீரென தோன்றி எதிரியின் தலையைக் கொய்வது தான் மார்த்தாண்டனின் கொடூர வழக்கம்"

"ஒவ்வொரு முறையும் நம்முடைய ஒற்றர்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்? ஒவ்வொரு முறையும் அவர்கள் கொல்லப்படும்போது என் இதயம் கனக்கிறது. நாம் அப்போதே போர் புரிந்து அந்த மார்த்தாண்டனை வீழ்த்தியிருந்தால் நம் வீரர்களை இழந்திருக்கமாட்டோமே"

"மன்னா!எடுத்தோம் கவிழ்த்தோம் என்று போர் செய்ய முடியாது. விவேகமில்லாத வீரம் நம் வீழ்ச்சிக்கு காரணமாகி விடும். நாமோ எந்த பேரரசருக்கும் கப்பம் கட்டி வாழாதவர்கள். ஒரு வகையில் பார்த்தால் நாம் எல்லோருக்கும் எதிரி தான். நாம் அவசரப்பட்டு போர் தொடுத்து, மார்த்தாண்டனுக்கு பேரரசர்களின் படைகள் உதவிக்கு வந்தால், நிலைமை என்னாகும்?" என்றார் ராஜகுரு. 

"நாம் இப்படியே ஒவ்வொரு வீரனாக எவ்வளவு காலத்திற்கு பலிகொடுத்துக் கொண்டிருப்பது? இதற்கு போர் தான் நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று என் மனதிற்கு தோன்றுகிறது"

"மன்னா! போருக்கு முன்னால் நம் படைபலத்தை பெருக்கிக் கொள்ளவேண்டும்.. அதற்குரிய திட்டங்களைத் தீட்டவேண்டும். நம் நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். போரில் வீரத்தை விட ராஜதந்திரம் மிக முக்கியமான ஒன்று. நாம் எதிரியைத் தாக்கும் போது அவர்கள் நம் மக்களைத் தாக்கினால் நம் கவனம் சிதறி, போரில் தோல்வியுற வாய்ப்பு இருக்கிறது. அதற்காக நீண்ட கால பொறுமை புத்திசாலித்தனம் என்று நான் கூறவில்லை. நம் படைபலத்தை அதிகரிக்கவும் போர் நேரத்தில் நம் மக்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிக்கவும் சிறிது காலம் ஆகும் என்று தான் சொல்கிறேன்"

மந்திரி தேவராஜன், "ராஜகுரு சொல்வதும் சரி தான்" என்று கூறினார். .

மன்னர், "அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?" என்றார்.

"நம் முன்னோர்கள் சுவற்றுக்கும் காதுகள் உண்டு என்று சொல்லியிருக்கிறார்கள். நம்முடைய திட்டத்தை இங்கு தீட்டுவதை விட சுரங்க அறையில் சென்று விவாதிப்பது நல்லது என்று தோணுகிறது. எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்"

எல்லாரும் ராஜகுருவின் கூற்றை ஆமோதிப்பது போல தலையசைத்தார்கள். எல்லாரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தபோது ஓர் உருவத்தின் நிழல் அவர்களின் கண்களில் படாதவாறு மறைந்து கொண்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.