(Reading time: 26 - 51 minutes)

மன்னர் மற்றும் அனைவரும் அரண்மனையின் இன்னொரு ரகசிய அறைக்குச் சென்று தாளிட்டுக் கொண்டார்கள். அந்த அறையில் பழைய காலத்து புராதானப் பொருட்கள் நிறைய இருந்தன. அழகான வண்ண ஓவியங்கள் அந்த அறையின் சுவற்றை அலங்கரித்தன. சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த ஓர் அகல் விளக்கை ஒரு பெண் தன் கைகளில் ஏந்தியிருப்பதைப் போல் ஓர் ஓவியம் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது.

அங்கே ஒரு பெரிய சிங்கத்தின் சிலை கம்பீரமான தோற்றத்துடன் இருந்தது. ராஜகுரு சமிக்ஞை செய்ததும், அவர்களுடன் காவலுக்கு வந்த வீரர்கள் இருவர் அந்த சிங்கத்தின் தலையை மட்டும் அகற்றினார்கள். அந்த சிங்கத்தின் கழுத்துப் பகுதியில் ஒரு துவாரம் இருந்தது. அரசர் தன்னுடைய வாளை முழுவதுமாக அந்த துவாரத்தில் நுழைத்தார். வாளின் கைப்பிடி மட்டும் வெளியே தெரிந்தது. இப்போது அரசர் அந்த கைப்பிடியை மெதுவாக திருப்பினார்,

உடனே அந்த பெண் ஓவியத்தின் கையிலிருந்த அகல் விளக்கு சுவற்றின் உள்ளே சென்று செம்பினாலான, உள்ளங்கை அளவுள்ள ஒரு நிஜ அகல் விளக்கு வெளியே வந்தது. அரசர் தன்னுடைய மோதிரத்தை கழற்றி அந்த அகல் விளக்கில் வைத்தார். அகல் விளக்கு மீண்டும் உள்ளே சென்றது. உடனே, அந்த பெண் ஓவியத்தின் கண்கள் அசைந்து அரசரையும் மற்றவர்களையும் பார்த்தது. பிறகு அந்த ஓவியம் வரையப்பட்டிருந்த சுவர் ஒரு கதவு போல திறந்தது. அங்கே நின்றுகொண்டிருந்த வீரர்கள் அரசரை வணங்கினர்.

அங்கே சுரங்க அறைக்குச் செல்வதற்கான படிக்கட்டு இருந்தது. அரசரும் ராஜகுருவும் மற்றும் அமைச்சர்களும் அதில் இறங்கி சென்றனர். சற்று தூரம் அந்த சுரங்க ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றனர். அந்த சுரங்கப் பாதை அகழியின் அடியில் அமைக்கப்பட்டு அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. 

அந்த சுரங்கத்தினுள்ளே ஒரு தனி சாம்ராஜ்யமே அமைக்கும் அளவுக்கு விசாலமான பெரிய மாளிகை இருந்தது. வீரபுரத்து மக்கள் கட்டடக் கலையில் வல்லவர்கள் என்பதற்கு சான்றாய் அந்த மாளிகை விளங்கியது.

எல்லாரும் சுரங்க அறையில் கூடி தங்கள் ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்தார்கள் .

மந்திரி தேவராஜன், " நம் ஒற்றர்கள் ஒவ்வொருவராக மடிவதைப் பார்த்தால், நம் அரண்மனையில் எதிரி நாட்டின் ஒற்றன் இருக்கிறானோ என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது " என்றார்.

"நீங்கள் சொல்வதும் சரி தான் மந்திரியாரே. அரண்மனையில் நம்முடைய ஆலோசனை கூட்டத்தை யாரோ ஒருவன் வேவு பார்த்துக் கொண்டிருந்தான். அதனால் தான் எல்லாரையும் சுரங்க அறைக்கு அழைத்து வந்தேன்"

எல்லாரும் திடுக்கிட்டு ராஜகுருவை நோக்கினர்.

அரசர், "என்ன சொல்கிறீர்கள் ராஜகுருவே! அந்த ஒற்றனின் தலையைக் கொய்து தலையற்ற அவன் முண்டத்தை அந்த மார்த்தாண்டனுக்கு பரிசளித்திருக்க வேண்டாமா?" என்று கொந்தளித்தார்.

ராஜகுரு புன்முறுவலுடன்,  "நாமும் அந்த மார்த்தாண்டனைப் போல் அறிவின்மையாய் நடந்து கொள்ளாமல் ராஜதந்திரத்துடன் செயல்பட வேண்டும். இந்த ஒற்றன் எதிரி நாட்டுக்கு எவ்வாறு தகவல் அனுப்புகிறான் என்பதை முதலில் நாம் கண்டறிய வேண்டும். இந்த வேலையை இவன் ஒருவனால் மட்டும் செய்ய இயலாது. இவனுக்கு உதவி செய்ய இன்னும் சிலர் கண்டிப்பாக இருப்பார்கள்; அவர்களையும் கண்டுபிடித்து கூண்டோடு ஒழித்துக் கட்டவேண்டும். ஒரு மரத்தின் மேல் பகுதியை மட்டும் வெட்டி விட்டால் அது மறுபடியும் துளிர்த்து விடும். வேரோடு வெட்டி சாய்த்து விட்டால், அது துளிர்க்க வாய்ப்பே கிடையாது" என்று விளக்கினார்.

அப்போது ஒரு மந்திரி குறுக்கிட்டு, "ராஜகுருவே, அந்த ஒற்றன் யாரென்று உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டார்.

"இனிமேல் தான் அவனை கண்டுபிடிக்க வேண்டும்"

மந்திரி தேவராஜன், "அடுத்து, எதிரி நாட்டுக்கு நம் நாட்டிலிருந்து யாரை ஒற்றனாக அனுப்புவது?" என்று கேட்டார்.

அதற்கு ராஜகுரு, "அடுத்த ஆலோசனைக்கூட்டத்தில் அதைப் பற்றிப் பேசி முடிவெடுப்போம்" என்றார்.

ஆலோசனை கூட்டம் முடியும் தருவாயில் தேவாராஜனை நோக்கிய ராஜகுரு, "மந்திரியாரே"  என்றார்.

"சொல்லுங்கள் ராஜகுருவே"

"சம்யுக்தன் சிறந்த வீரன். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல புத்திகூர்மை இல்லாத வீரம் ஆபத்தை தான் வரவழைக்கும். மார்த்தாண்டனின் மனம் சிறிது மாற்றமடைந்திருந்தால் கூட சம்யுக்தன் இந்நேரம் பிணமாகத் தான் இருந்திருப்பான். மார்த்தாண்டன் சம்யுக்தனை உயிரோடு விட்டதற்கான காரணம், தனக்கு நிகரான வீரன் இவனில்லை என்ற எண்ணத்தாலோ அல்லது ஒற்றன் கொல்லப்பட்ட விவரத்தை எடுத்துரைக்க உனக்கு உயிர் பிச்சை தருகிறேன் என்ற கர்வத்தாலோ இருக்கலாம்"

மந்திரி தேவராஜனின் இதயத்துடிப்பு பன்மடங்கு அதிகரித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.