(Reading time: 26 - 51 minutes)

விடிவதற்கு இன்னும் இரண்டு நாழிகையே இருந்தது. பறவைகள் தங்கள் கூட்டை விட்டு இரை தேட பறந்து சென்றன. இளங்காற்றின் குளிர்ச்சி சற்று அதிகமாகவே இருந்தது. அது புற்களில் பனித்துளியாக பிரதிபலித்தது. நிலவின் பணி முடிந்து கதிரவனின் செங்கதிர்கள் பூமியைத் தொடும் நேரம்.

நிர்மலமான ஆகாயத்தைப் போன்று தெளிவான நதி "சல சல" என்று ஓடிக்கொண்டிருந்தது. அந்நதியின் பக்கத்திலிருந்த பூந்தோட்டம் முழுவதும் மலர்களின் மொட்டுகள் நிறைந்து உலகத்தைக் காண துடித்துக்கொண்டிருந்தன. அங்கே மலர்ந்திருந்த பூக்களின் நறுமணம் காற்றுடன் கலந்து அவ்விடத்தை பரவசப்படுத்தியது.

அந்த ஆற்றின் கரையோரம் சிறு சிறு பாறைகள் இருந்தன. அதில் ஒரு பாறையின் முன்னே இருந்த எரிந்த விறகு கட்டைகள் பாதி அணைந்தும் பாதி அணையாமலும் கனலுடன் புகைந்து கொண்டிருந்ததன. 

பறவைக் குஞ்சுகள் தங்களுடைய கூட்டிலிருந்து "கீச் !கீச் !"என்று ஒலி எழுப்பிக்கொண்டு இருந்தன. அந்த இனிமையான ஒலியை ரசிக்காமல், இளவரசன் ரவிவர்மன் ஒரு பாறையில் சாய்ந்த வண்ணம் ஏதோ யோசனையில் அமர்ந்து இருந்தான். வெண்மேகங்கள் வானில் மெல்ல நகர்ந்துகொண்டிருந்தன. அதைப்போல இளவரசனின் மனதிலும் பல யோசனைகள் நகர்ந்துகொண்டிருந்தன.

அப்போது, இளவரசனின் நண்பன் அவன் அருகே சென்று, "தொந்தரவிற்கு மன்னிக்க வேண்டும் இளவரசே. சிறிது காலமாகவே தங்களைக் கவனித்து வருகிறேன். தாங்கள் ஏதோ மனக்குழப்பத்தில் இருப்பது போல தோன்றுகிறது. அது என்னவென்று என்னிடம் பகிர்ந்து கொண்டால் தங்களுக்கு ஆறுதலாக இருக்கும்; சொல்லக்கூடாதவையாக இருந்தால், வேண்டாம்" என்றான்.

இளவரசன் எழுந்து உட்கார்ந்து, வாளை எடுத்து அதன் உறையில் செருகி, "நீ சொல்வதும் சரி தான். சிறிது காலம் நான் குழப்பத்தில் தான் இருக்கிறேன்" என்றான்.

"நான் யூகிப்பது சரியென்றால், அந்த குழப்பத்திற்கு காரணம் சம்யுக்தன் தான் என்று  எண்ணுகிறேன்"

அதை ஆமோதிப்பது போல இளவரசனும் மெளனமாக தன் நண்பனைப் பார்த்தான்.

இளவரசன்,  "என் பாட்டனார் காலத்தில், என்னுடைய தந்தை என்னைப் போல் இளவரசராக இருந்த சமயம், அவரை எதிர்த்து யாரும் வென்றதில்லை. ஆனால், என் நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. சிறந்த வீரன் சம்யுக்தன் தான் என்று என்னுடைய தந்தை கூட சொல்கிறார். ஒரு இளவரசனாக இருந்துகொண்டு இரண்டாவது நிலை வீரனாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. வீரப்பரம்பரையில் தோன்றிய நான், அந்த பரம்பரைக்கு களங்கம் விளைவித்து விடுவேனோ என்று மனது உறுத்துகிறது" என்றான். 

"நீங்கள் நேற்று நடந்த போட்டியை மட்டும் கருத்தில் கொண்டு இவ்வாறு முடிவு செய்வது நல்லதல்ல. எனக்குத் தெரிந்த வரையில் தாங்கள் தான் சிறந்த வீரர் "

"என்னுடைய நண்பனாக நீ சொல்லாதே. ஒரு நடுநிலையாளனாக சொல் பார்க்கலாம்."

இளவரசனின் நண்பன் ஒன்றும் சொல்லாமல் தலையைக் குனிந்தான்.

"சம்யுக்தன் சிறந்த வீரன் தான், அதில் மறுப்பதற்கு ஒன்றும் இல்லை. சரி, நேற்று அந்த மைதானத்தில் நாங்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு பெண் வந்தாளே, அவள் யாரென்று தெரிந்ததா?" என்று கேட்டான் இளவரசன்.

"நான் விசாரித்த வரையில் அது சம்யுக்தனின் மாமன் மகள் பூங்கொடியாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்"

"பூங்கொடியா?" என்று இளவரசன் கேட்டுக் கொண்டே, "சிறு பிள்ளைப் பருவத்தில் நானும் சம்யுக்தனும் நண்பர்களாக இருந்தோம். அரண்மனைத் தோட்டத்தில் பூங்கொடி, நான் மற்றும் சம்யுக்தன் மூவரும் விளையாடிக்கொண்டிருப்போம். வளர்ந்த பிறகு அந்த கள்ளம் கபடமற்ற நட்பு போய் விட்டது. அந்த இனிமையான நாட்களை நினைத்தால் அந்த பிள்ளைப் பருவத்திலேயே உலகம் நின்றிருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது"  என்று ஆதங்கத்துடன் இளவரசன் கூறினான்.

"என்ன இளவரசே, ஒரு தத்துவ ஞானி போல பேசுகிறீர்கள்"

"வேதனைகள் நிறைந்த மனதில் தத்துவங்கள் வருவது இயல்பு தானே" என்று புன்னகைத்த இளவரசன், "நான் அரண்மனைக்கு சென்று வருகிறேன்" என்று கூறி கிளம்பினான்.

பொழுதும் விடிந்தது.

தொடரும்...

பாகம் - 01 - அத்தியாயம் 01

பாகம் - 01 - அத்தியாயம் 03

{kunena_discuss:1135}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.