(Reading time: 20 - 40 minutes)

தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 03 - சிவாஜிதாசன்

Samrat Samyukthan

அத்தியாயம் 1.3 : ஓலைக்குடிசை மர்மம்

காலைப் பொழுது.

சம்யுக்தனும் பார்த்திபனும் பூங்கொடியின் வீட்டிற்குச் சென்று குதிரையை நிறுத்தினார்கள். பூங்கொடியின் தாயார், மணிமேகலை, அவர்களை வரவேற்று விருந்தோம்பல் செய்தார்.

விருந்து முடிந்ததும், தன் இரு தொடைகளிலும் கை வைத்தபடியே ஏப்பம் விட்ட பார்த்திபன், "விருந்து என்றால் இது தான் விருந்து. தேவர்களின் அமுதம் போலல்லவா இருந்தது. தினமும் இங்கேயே வந்து விருந்துண்ணலாம் போல ஆசையாக இருக்கிறது" என்றான்.

மணிமேகலை, "தாராளமாய் வாருங்கள்" என்று கூறியபடி, வெற்றிலை தாம்பாளத்தை நீட்டினார்.

சம்யுக்தனும் பார்த்திபனும் ஆளுக்கொரு வெற்றிலையை எடுத்து தங்கள் தொடைகளில் அவற்றை தடவி, காம்பைக் கிள்ளிப் போட்டுவிட்டு வெற்றிலையை மடக்கி வாயில் போட்டு மென்றார்கள்.

சம்யுக்தன், "பூங்கொடி எங்கே?" என்று கேட்டான்.

"அந்த விளையாட்டுப் பெண் தோழிகளுடன் விளையாடச் சென்றிருக்கிறாள்" என்றார் அவளுடைய தாய்.

சம்யுக்தன், "சரி, நாங்கள் கிளம்புகிறோம்" என்றான்.

பார்த்திபன், "சற்று பொறு சம்யுக்தா. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு, நீ கேள்விப்பட்டதில்லையா?"

சம்யுக்தன், "அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்றான்.

"இந்த வீட்டின் பின்னால் நந்தவனம் போல் பெரிய தோட்டம் உள்ளதே, அங்கே சென்று மர நிழலில் மாங்காய் சாப்பிட்டுக்கொண்டே சற்று நேரம் இளைப்பாறி விட்டு பின்னர் செல்லலாமே"

"உண்ணுவதை நிறுத்தவே மாட்டாயா"

"கும்பகர்ணன் வயிற்றை கொடுத்த ஆண்டவனின் சதி இது"

"உன்னைத் திருத்தவே முடியாது" என்று சம்யுக்தன் கூற, இருவரும் தோட்டத்திற்கு சென்றார்கள்

அந்த தோட்டம், மாமரங்களும் தென்னை மரங்களும் நிறைந்து காணப் பட்டது. தரையில் கிடந்த மாமரத்தின் காய்ந்த இலைகள் காற்றில் அசைந்து 'சல சல'வென்று ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. சுற்றியெங்கும் நிழலாகவே இருந்தது. ஆங்காங்கே மரங்களின் இடையே இருந்த இடைவெளிகளின் வழியாக நுழைந்த சூரியனின் ஒளி, சின்னச் சின்னப் புள்ளிகளாய் கீழே தரையில் இயற்கையிட்ட கோலப் புள்ளிகளாய் தெரிந்தன.

மாமரத்தின் உச்சியில் பழுத்து தொங்கிய மாங்கனிகளை அணில்களும் , கிளிகளும் கொறித்துக்கொண்டிருந்தன. அவை மனிதர்களைப் போல போட்டி, பொறாமை, வஞ்சம் என்னும் வாசனையே இல்லாமல் கவலையின்றி மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தன.

சம்யுக்தனும் பார்த்திபனும் ஒரு பெரிய மாமரத்தின் நிழலில் சென்று அமர்ந்தார்கள். இதமான தென்றல் காற்று அவர்களை தழுவிற்று. தோட்டத்திற்கு பாய்ந்த தண்ணீர் வாய்க்கால்களில் தேங்கி இருந்தது. பாலுடன் கலந்த நீரிலிருந்து அன்னப்பறவை பாலை மட்டும் அருந்தி விட்டு தெளிவான தண்ணீரை விட்டுச்செல்வது போல, சேற்றை தன்னுள் மறைத்து தெளிவான தண்ணீரை மட்டும் கொண்டிருந்தது அந்த வாய்க்கால்.

சம்யுக்தன் அந்த நீரை இரண்டு கைகளால் அள்ளி தன் முகத்தில் தெளித்து விட்டு மூடிய கண்களுடன் மெல்ல நிமிர்ந்தான். முகத்தில் இதமான காற்று பட்டு அவனுடைய முகம் குளிர்ந்தது. அவன், மனதுக்குள் "ஆகா! என்ன ஒரு ரம்யமான இன்பம்" என்று எண்ணினான்.

"அங்கே என்ன செய்கிறாய் சம்யுக்தா?" என்று மாமரம் ஒன்றில் சாய்ந்திருந்தவாறே கேட்டான் பார்த்திபன்.

"சொன்னால் உனக்குப் புரியாது, அனுபவித்தால் தான் தெரியும்" என்று கூறியபடியே அவனருகில் சென்றான் சம்யுக்தன்.

"அது என்ன? அந்த மாமரத்தின் கிளைகளுக்கிடையில் ஒரு பெரிய பறவைக்கூடு போல இருக்கிறதே"

"நானும் பூங்கொடியும் சிறு வயதில் செய்த எங்களுக்கான ஒரு சின்ன வீடு. இன்னும் அதை பராமரித்து வருகிறாள்"

"அது சரி, அந்த வீட்டிற்கும் இன்னொரு மரக் கிளைக்கும் இடையே ஒரு பெரிய பலகை இருக்கிறதே, அது என்ன?"

"அது அந்த வீட்டிற்கு செல்கின்ற பாலம்"

"சரி, வா. அந்த வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு வருவோம்" என்று பார்த்திபன் அழைத்தான்.

"சரி, போகலாம். நானும் பார்த்து வெகு நாளாயிற்று" என்று சம்யுக்தனும் உடன் சென்றான்.

இருவரும் மரக் கிளைகளில் ஏறி அந்த பாலத்தின் வழியாக அந்த சிறு வீட்டை அடைந்தார்கள்.

"என்ன சம்யுக்தா, வீட்டினுள் செல்ல முடியவில்லையே"

"சிறு பிள்ளைகளுக்கு ஏற்றார் போல் கட்டிய வீடு. இப்போது எப்படி நாம் செல்ல முடியும்?"

"இவ்வளவு தூரம் வந்தும் வீணாகிவிட்டதே" என்று கூறிக்கொண்டே பார்த்திபன் கீழே இறங்கினான்.

கீழே இறங்கியதும் இருவரும் கீழே கிடந்த தென்னை ஓலையால் வேயப்பட்ட பாயில் படுத்து சற்று இளைப்பாறினார்கள். 

"சம்யுக்தா, சின்ன வயதில் யாரெல்லாம் சேர்ந்து விளையாடுவீர்கள்?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.