(Reading time: 14 - 28 minutes)

"சரிம்மா நான் கடைக்குக் கிளம்பறேன் நேரமாகிட்டுது.. சாயங்காலம் தான் வருவேன் இன்னிக்கு..", என்று சொல்லிவிட்டுக் கிளம்பித் தன் ஹோண்டா சிட்டி காரை எடுத்துக் கொண்டு அதற்குமேல் நிற்காமல் சென்றே விட்டார்.

வீட்டுப் பணியாளிடம் சொல்லிவிட்டு.. கூடை நிறையக் காய்கறிகளுடன் ரோட்டைக் கடந்து எதிரே இருக்கும் தன் கொழுந்தன் வீட்டிற்குச் சென்றாள் தமயந்தி.

கிட்டதட்ட நாலாயிரம் சதுர அடியில் கட்டப்பட்டிருந்தது அந்தப் பழங்கால வீடு.. கீழேயே நான்கு அறைகளும் மாடியில் நான்கு அறைகள் மற்றும் பால்கனி, மொட்டை மாடி என்று அமைந்திருந்தது.. வீட்டை ஒட்டி எழுனூறு அடியில் அமைந்த அவுட் ஹவுஸ்.. இரண்டு போர்ஷன்களைக் கொண்டிருந்தது.

வீட்டினுள் நுழைந்தவள் மனதில் ஒரு பதைப்பு.. ‘இன்றைக்கு என்ன ஏழரையைக் கூட்டுவாளோ இந்த அக்கா’ என்று பயந்தவாறு உள்ளே நுழைந்தாள்.

பணம் நிறைய இருந்தாலும் அதை அனுபவிப்பதற்கும் ஓர் ரசனை வேண்டும்.. பணத்தால் அனைத்தையும் வாங்க முடியும்தான் ஆனால்.. அதையும் ரசித்துச் செய்தால் ருசிக்கும்.. அந்த ரசனையை எங்கே போய் வாங்குவது.. அது குணத்தால் வருவதாயிற்றே.

அந்த வீட்டில் பணத்தின் வெளிப்பாடு நிறையவே தென்பட்டாலும் கூட அதை ரசிக்க முடியவில்லை தமயந்தியால்.. எதையும் நளினமாய் அழகுறச் செய்து பழகியவளுக்கு.. இங்கே மியூசியத்தில் இருக்கும் விலையுயர்ந்தப் பொருட்களின் அணிவகுப்பைப் போலத்தான் தோன்றியது.. அவ்வளவு விலையுயர்ந்தப் பொருட்களை ஒருங்கே பார்க்கும் போது சிலசமயம் எதுவுமே பதியாமல் போகும் அபாயமும் உண்டு.. அந்நிலையில் தான் இருந்தாள் தமயந்தி.

உள்ளே நடுநாயகமாய் அமையப் பெற்றிருந்த சோஃபாவில் காலை மடக்கி உட்கார்ந்திருந்தாள் ரேணுகா.. பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் சில நொறுக்குத்தீனி அருகில் அவர் மகள் மணிமேகலை புத்தகமும் கையுமாக அமர்ந்திருந்தாள்.. அவள் வேளாண் பொறியியல் கடைசி வருட மாணவி.. இப்போது ஸ்டடி ஹாலிடேஸ்..

"வாம்மா.. என்ன இந்தப்பக்கம் காத்தடிச்சிருச்சு..", என்று நக்கலாய்க் கேட்ட ரேணுகாவைப் பார்த்து மனதாரப் புன்னகைத்த தமயந்தி.

"அக்கா எப்படி இருக்கீங்க.. ஒருவாரமாச்சு.. இந்தப்பக்கம் வந்து.. மணிக் குட்டி.. எப்படிடா இருக்கே.. அங்கே வரலாமில்லை அக்காவும் இருக்கா.. ஜாலியா பொழுதுபோகுமே?..", என்று சாதாரணமாய்த் தான் சொன்னாள்.

முகத்தில் கோபம் கொந்தளிக்க அதை அடக்கியபடி.. "அடியேய் தங்கச்சி.. யாருடி அக்கா.. உன் பொண்ணு உனக்கு ஜனிச்ச முந்தியே என் வயித்திலே வந்தவடி என் பொண்ணு.. அந்தச் சுந்தரி.. அது முந்திரிக் கொட்டை.. முன்னாடியே குதிச்சிடுச்சு.. சீனியாரிட்டிபடி என் பொண்ணுதான் மூத்தவ.. ஏதோ தன் அண்ணன் பொண்ணு.. வாக்கு பேக்குன்னு.. எனக்குப் பேரிக்காயைக் காட்டிடுச்சு நம்ம மாமியாரு.. உங்கத்தை.. இந்த அக்கா சொக்கால்லாம் இங்கே வேணாம் கேட்டுக்கோ..", என்று வார்த்தைகளைத் துப்பினாள் ரேணுகா.

"அய்யோ அக்கா.. என்னக்கா.. இப்படிச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் டென்ஷனாகுறீங்க.. உங்களுக்கு ஏற்கனவே பிபி. இருக்கு.. கொஞ்சம் பார்த்துக்கா.. சொன்னாலும் சொல்லாட்டாலும் முந்திகிட்டு முந்திரியா விளைஞ்சாலும் இந்த வீட்டிக்கு மூத்த பேத்தி சுந்தரிதானே.. அதை விடுங்க.. அத்தான் கேட்டுட்டு வர சொன்னாங்க.. ஏதோ பெரிய டெம்போவோ லாரியோ வந்துச்சாமே இங்கே.. ஏதாவது விஷயமா?.. விசேஷமா.. அப்படின்னா ஏதாவது ஒத்தாசைத் தேவைப்படுமான்னு பார்த்துட்டு அப்படியே நம்ம தோட்டத்தில் விளைஞ்சக் காயைக் குடுத்துட்டுப் போக வந்தேன்..", என்று சோஃபாவில் எதிர்புறம் அமர்ந்துகொண்டாள் தமயந்தி.

"அதானே பார்த்தேன்.. நீயாவது அதுவும் உனக்கிருக்கிற அத்தனை அலுவலில் இங்க வர்றதாவது.. ஆகக் கொழுந்தன் சொல்லித்தான் இங்க வந்துருக்க.. இல்லாட்டிப் போனா அவ்வளவுச் சுளுவா இங்கே வந்துருவியா நீயி..", என்று அங்கலாய்த்துக் கொண்டாள்.

"அதெல்லாம் இல்லை அக்கா.. கொஞ்சநாளா.. நானும் கூட அப்பப்பக் கடைக்குப் போறேன்.. புதுசா சில பிரான்ச் தொறந்துருக்காங்கல்ல.. ஏதோ என்னாலே ஆன வேலையைச் செய்யறேன்..", என்று மென்மையாய்ச் சொன்னவளை.. ‘கழுதை

படித்த திமிர்’.., என்று மனதுள் கறுவியபடி..

"அது சரி.. இருக்காதாப் பின்னே.. அதான் எல்லாச் சொத்தும் ஒன்னுக்கு நாலா கைக்கு வந்து சேர்ந்துடுச்சே.. முட்டைப் போடற வாத்தைக் கையிலே வெச்சிகிட்டா வேலை அதிகமாத்தானே இருக்கும்..", என்று சொல்லிவிட்டு.

"நான் பொதுப்படையாத்தான் சொன்னேன்.. தம்பிக்கு நல்லா ஏறுமுகம்தானே.. இங்கேயும் ஒரளவு நல்லாத்தான் இருக்கு.. ஆனாலும் கூட உன் பிறந்த வீட்டுச் சொத்துமில்லே சேர்ந்துருச்சு அங்கே.. ஏதோ ஆத்தாமை.. மனசுள்ளே எனக்கு வஞ்சமெதுவுமில்லை.. நேரே சொல்லிடுறேன்.. நீ தப்பா நினைச்சுகாதேடி தங்கச்சி..", என்று பெருமூச்சுவிட்டாள் ரேணுகா.

"உங்களைப்பத்தி எனக்குத்தெரியாதா அக்கா.. விடுங்க.. ஏதோ நீங்க பெரியவங்க இன்னிக்கும் எங்களைக் கூட அனுசரிச்சுக் கூட்டிட்டுப் போறீங்க.. அதுவே பெரிய விஷயம்.. பெரியத்தான் இல்லாட்டி சின்னத்தானுக்குச் சரிப்படுமா என்ன.. சரி அதை விடுங்க.. என்ன சங்கதி.. நம்ம சண்முகத்துக்கு ஏதாவது வரன் மீண்டும் குதிந்துருச்சா?..", என்று ஆவலுடன் கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.