(Reading time: 14 - 27 minutes)

“ஹஹஹா காலேஜ்ல எப்போவும் எங்க டீம் தான் வின்” வர்ஷினி புடவையில் காலர் இல்லையே என்று குறைபட்டாள்.

“அப்போ நம்ம டீம் ஸ்ட்ராங் ஆயாச்சு. நீ டான்ஸ் கூட நல்லா ஆடுவியாமே. ஸ்ரீதர் சொன்னான். கிளாசிகல் கத்துக்கிட்டியா” சைந்தவி கேட்க வர்ஷினி மறுப்பாய் தலையாட்டினாள்.

வர்ஷினிக்கு டான்ஸ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆசை. ஆனால் அவள் உடல் நலத்தை கருத்தில் கொண்டு ராமச்சந்திரன் மறுத்து விட்டிருந்தார். வருண் மருத்துவர் ஆன பின் கடினமாக நடனம் ஆடாமல் ப்ரீஸ்டைல் டான்ஸ் இலகுவாக ஆட அனுமதி கிடைத்தது.

“ரொம்ப நல்லா எல்லாம் ஆட தெரியாது. ஜாலியா ஆடுவேன்” வர்ஷினி சொல்லவும் சைந்தவி அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.

அங்கே மற்ற நண்பர் மற்றும் உறவினருக்கு அறிமுகம் செய்து வைக்க விரைவிலேயே அந்த இளைஞர் பட்டாளத்தோடு வர்ஷினி இணைந்து கொண்டாள்.

விழா ஒரு பெரிய கம்யுனிட்டி ஹாலில் நடைபெற்றது.

மாப்பிள்ளை வீட்டினர் அனைவரும் வருகை புரிய நிச்சயதார்த சடங்குகள் நடைபெற்றன.

அங்கே வந்திருந்த இளம் வாலிபர்கள் சிலர் வர்ஷினியிடம் வந்து அவளது அழகை புகழவும் சற்றே சங்கோஜமானாள்.

சிலர் அவளை டேடிங் டின்னர் போகலாம் என்று அழைக்க அதெல்லாம் புதிதாக இருந்ததால் கலவரமானாள். இருந்தாலும் மிக அழகாக அவள் சமாளித்துக் கொண்டிருந்த போதே ஸ்ரீதர் வந்து அவளை அழைத்துக் கொண்டான்.

நிச்சயதார்த்த விழா முடிந்து விளையாட்டுகள் தொடங்கி விட்டிருந்தன.

முதலில் தம்போளா பாஸ் தி பாஸ் எல்லாம் விளையாட விழாவிற்கு வருகை தந்த அனைவரும் உற்சாகாமாக பங்கெடுத்தனர்.

சங்கீத் நிகழ்ச்சி தொடங்க அது வெறும் பெண்கள் சங்கீத் என்று இல்லாமல் எல்லோரும் பங்குபெறுமாறு அமைக்கப்பட்டிருந்தது.

மாப்பிள்ளை பக்கம் லுங்கி டான்ஸ், பத்தமீஸ் தில் என அன்றைய ஹாட் டிரண்டிங் பாடல்களுக்கு ஆட பெண் வீட்டினர் ஆலுமா டோலுமா, ஜித்து ஜில்லாடி என்று கலக்கினார்கள்.

“ஸ்ரீதர். தாங்க்ஸ் டா ரொம்ப ஜாலியா இருக்கு. நம்ம காலேஜ் பங்க்ஷன் மாதிரி செம கலக்கலா இருக்கு” வர்ஷினி மிகவும் சந்தோஷமாக ஸ்ரீதரிடம் நன்றி தெரிவித்தாள்.

“வர்ஷினி. ரொம்ப ஈகுவலா போகுது. நம்ம பொண்ணுங்க டான்ஸ் தான் யார் வின் அப்படின்னு முடிவு செய்யும்னு நினைக்கிறேன்” சைந்தவி வர்ஷினியை உள்ளே இருந்த தனியறைக்குள் இழுத்துச் சென்றாள்.

“ரொம்ப ஜாலியா இருக்கு சைந்தவி. ஆமா யாரு ஜட்ஜ் மார்க் எல்லாம் போடுவாங்களா” வர்ஷினி கேட்க சைந்தவியும் அங்கே இருந்த உறவுப் பெண்கள் மற்றும் தோழிகளும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“கல்யாணப் பொண்ணும் மாப்பிளையும் தான் ஜட்ஜ். அவங்க நம்ம டான்ஸ் பார்க்கவாச்சும் செய்வாங்களா” பெண்கள் கேலி கலாட்டாவில் இறங்கினர்.

“இவங்க அக்கா மாப்பிளை சைட் தான் பெஸ்ட்ன்னு மார்க் போடுவா. அவர் பொண்ணு சைட்க்கு மார்க் போடுவார். இதெல்லாம் எவ்ளோ பார்த்திருக்கோம்” இன்னொரு பெண் சொல்ல அங்கே மீண்டும் சிரிப்பலை.

“வர்ஷினி இது எல்லாம் ஜாலிக்கு தான். இருந்தாலும் பொண்ணு சைட் உற்சாகமே இல்லன்னு சொல்லிட கூடாதுல்ல. நாமளும் கெத்துன்னு காட்ட தான்” சைந்தவி சொல்ல வர்ஷினிக்கு அப்படா என்று இருந்தது.

“ஆக்சுவலி ஜீஜூ அம்மா அவங்க ரிலேடிவ்ஸ் எல்லோரும் இந்த மாதிரி சங்கீத்ல ஆடுறதுக்குன்னே ஸ்பெஷலா டான்ஸ் சாங்க்ஸ் எல்லாம் வச்சிருக்காங்க. தே ஆர் வெரி டிரைன்ட். அவங்க சைட் ஆன்டீஸ் எல்லாம் ஆடுவாங்க. நம்ம சைட்ல அப்படி பார்த்தா கொஞ்சம் வீக் தான். இருந்தாலும் வி ஷுட் கிவ் அவர் பெஸ்ட்” சைந்தவி சொல்லிவிட்டு அவளது நடனத்திற்கு ஒத்திகை பார்க்க சென்றாள்.

அடுத்து பெண்களின் நடனம் தொடங்க மாப்பிள்ளை வீட்டினர் அவர்கள் சம்பிரதாய பாடல்கள் சிலவற்றிக்கு ஆட இளம்பெண்கள் “ மெஹந்தி லகாகே ரக்னா” “சிட்டியா கலையா வே” என்ற ஹிட் பாடல்களுக்கு ஆட பெண் வீட்டினர் “ராதை மனதில், தொடக்கம் மாங்கல்யம்” என சரிசமமாய் ஆடவும் அங்கே அரங்கம் களை கட்டியது.

அவர்கள் எல்லோரும் இதற்காக பயிற்சி எடுத்திருந்தனர். வர்ஷினிக்கு என்ன ஆடுவது என்று முதலில் ஒன்றும் புரியவே இல்லை. முடியாது என்று சொன்னால் அவளை யாரும் கட்டாயப்படுத்த போவதில்லை. இருப்பினும் அவளுக்கே எங்கே அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆசையாக இருந்தது.

சைந்தவி அவள் வந்தவுடனே என்ன பாட்டுக்கு ஆட போகிறாய் என்று முடிவு செய்து வை என்று சொல்லியிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.