(Reading time: 32 - 64 minutes)

22. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

ரு வாரத்திற்கு மேலாகிவிட்டது… இன்னும் துஷ்யந்த் கங்காவிடம் பேசவில்லை… இன்ஸ்டிட்யூடிற்கு சென்றவள், மதியமே திரும்ப வந்துவிட்டாள்… புதிய கதைகள் எழுதக் கூட தோன்றவில்லை… மனமும் உடலும் எந்த வேலையும் செய்யாமல் வேலை நிறுத்தம் செய்தது… “நான் ஏன் இப்படி இருக்கிறேன்? துஷ்யந்த் என்னை விட்டு விலக வேண்டும் என்று தானே நான் நினைக்கிறேன், இப்போது சொல்லாமல் கொள்ளாமல் அவன் சென்றது எனக்கேன் வருத்தத்தை கொடுக்கிறது, இந்த நேரம் அவனுக்கு திருமணம் ஆகியிருந்தால், அப்போதும் நீ இப்படி தான் இருந்திருப்பாயா?? நீ ஏன் இவ்வளவு பலகீனமாய் மாறிப்போனாய்..?? என்று அவள் மனம் கேள்விக் கேட்டது..

ஒருவேளை திருமணம் ஆகியிருந்தால், அது வேறு.. ஆனால் திருமணத்தை நிறுத்தியவன், உடனே குன்னூர் சென்றதற்கு காரணம் என்ன?? என் மீது கோபமா? வருத்தமா? ஏன் திருமணத்தை நிறுத்தினேன் என்ற காரணத்தை என்னிடம் ஏன் அவன் சொல்லவில்லை… அங்கு போன இந்த ஒரு வாரத்தில் இளங்கோ, வாணிம்மாவிடம் பேசியிருக்கிறான்… ஆனால் என்னோடு பேசாமல் இருக்கும் காரணம் என்ன..?? இதையே தான் அவள் இந்த ஒரு வாரத்தில் திரும்ப திரும்ப யோசித்திருந்தாள்…

அதையெல்லாம் யோசித்தப்படியே உட்கார்ந்திருந்தவள், ஸ்டடி டேபிளின் மீது இருந்த தன்னுடைய டைரியிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தாள்… அதில் துஷ்யந்தும், அவளும் ஜோடியாக நின்றிருந்தனர். பார்ப்பவர்களுக்கு இருவரும் கணவன் மனைவியாய் ஜோடியாக நிற்பதாக தோன்றும்… ஆனால் இது அவர்கள் தனியாக எடுத்த புகைப்படம் இல்லை… கூட வாணிம்மாவும் இளங்கோவும் நின்றிருப்பர்.

இந்த புகைப்படம் இளங்கோ, பதிப்பகம் ஆரம்பித்தப்போது எடுத்தது… பதிப்பகம் தொடங்குவதற்கான பூஜையெல்லாம் முடிந்ததும், நதிகள் பதிப்பகம் என்ற பெயர்பலகைக்கு முன்பு எல்லோரும் குழுகுழுவாக புகைப்படம் எடுத்தனர்… இளங்கோவின் குடும்பம், நண்பர்கள், பின் இளங்கோ, துஷ்யந்த், ரம்யா, வாணிம்மா நால்வரும் சேர்ந்து என்று ஒவ்வொரு புகைப்படமாக எடுத்துக் கொண்டிருக்க, இளங்கோவை நடுவில் நிற்க வைத்து இவளும் வாணிம்மாவும் அவனோடு புகைப்படம் எடுக்க தயாரானர்… அப்போது திடிரென்று துஷ்யந்தை இளங்கோ அழைத்து, அவனையும் அவர்களோடு நிற்க சொன்னான்..

அவன் வாணியின் அருகில் நிற்பான் என்று இவள் நினைத்திருந்த வேளையில், அவனோ அவள் அருகில் வந்து நின்றான்… வேண்டாம் என்று மறுக்க அவளுக்கு மனம் வரவில்லை… இவள் மீது அவன் ஸ்பரிசம் படாது இருந்தாலும், மிக அருகில் வந்து நின்றிருந்தான்… புகைப்படமும் எடுக்கப்பட்டது… அதன்பின் அதை அவள் மறந்துப் போனாள்…

போட்டோ ஸ்டூடியோவிற்கு சென்று எடுத்த போட்டோக்களை வாங்குவது கங்காவின் பொறுப்பு, காரணம் அவள் தான் அந்த போட்டோகிராஃபரை ஏற்பாடு செய்திருந்தாள்… அந்த போட்டோகிராஃபர் வேறு யாருமில்லை… ரம்யாவின் அண்ணனை தான்  புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்திருந்தாள்… அப்போது தான் புதிதாக ரம்யாவின் அண்ணன் போட்டோ ஸ்டூடியோ திறந்திருந்ததால், இந்த வாய்ப்பை அவனுக்கு கொடுக்க, இளங்கோவிடம் அவளே பேசினாள்… “பங்ஷன் சிம்பிளா செஞ்சா போதாதா..?? போட்டோல்லாம் எதுக்கு கங்கா..?” என்று இளங்கோ கேட்டாலும், அவள் காரணங்களை சொன்னதும் அவனும் ஒத்துக் கொண்டான்… அவள் இன்ஸ்ட்டியூட்டிற்கு கொஞ்சம் தொலைவில் தான், அந்த ஸ்டூடியோ இருக்கவே, அவளே நேரில் சென்று வாங்க முடிவெடுத்தாள்…

புகைப்படங்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கிறதா, என்று பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, இவர்கள் நால்வரும் நின்றிருந்த புகைப்படம் கண்ணில் பட்டதும், திடிரென்று மனதில் ஒரு எண்ணம் தோன்றி, “இந்த போட்டோல இருக்க எங்க ரெண்டுப்பேரையும் மட்டும் தனியா இருக்க மாதிரி ரெடி பண்ண முடியுமா..??” என்றுக் கேட்டாள்..

“ம்ம் செய்யலாம் சிஸ்டர்… இவர் தான் உங்க ஹஸ்பண்டா சிஸ்டர்.. சொல்லியிருந்தா, அப்பவே உங்க ரெண்டுப்பேரையும் தனியா சில ஸ்டில்ஸ் எடுத்திருப்பேனே..” என்று ரம்யாவின் அண்ணன் கேட்டதும், அவளுக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை… எதற்காக இப்படி ஒரு எண்ணம் தனக்கு வந்தது, ஏன் இவ்வாறு கேட்டோம்… மனதில் பல கேள்விகளோடு அவள் நின்றிருக்க, பேசாமல் வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடலாமா?? என்று  முடிவெடுத்தப் போது,

“ஏன் தேவையில்லாம கேள்விக் கேக்கற… அதான் பங்ஷன் முடிஞ்சிடுச்சுல்ல… இனி என்ன செய்ய முடியும்?? அக்கா கேக்கறது போல செஞ்சுக் கொடுக்க முடிஞ்சா செய்..” என்று அப்போது அங்கு வந்த ரம்யா கூறினாள். அவள் அண்ணனுக்கு சாப்பாடு எடுத்து வந்திருந்தாள் போல..

ரம்யாவை பார்த்ததும் கங்காவிற்கு இன்னும் அதிர்ச்சி… இது யாருக்கும் தெரியக் கூடாது என்று அவள் நினைத்திருக்க, இப்போது ரம்யாவிற்கு தெரிந்ததில் இன்னும் மனதில் தயக்கக்கங்கள் சேர்ந்திருந்தது… இப்போது இங்கு ரம்யா வரவில்லையென்றாலும், அவளின் அண்ணன் என்ற பட்சத்தில் அவன் ரம்யாவிடம் சொல்லவும் வாய்ப்பிருக்கிறதே.. இதையெல்லாம் ஏன் யோசிக்காமல் விட்டுவிட்டோம் என்று நினைத்து அவள் பயந்தாள்.

“சரி சிஸ்டர் செஞ்சுடலாம்… இதுல எந்த சைஸ்ல லாமினேஷன் போடனும்னு சொல்லுங்க போட்டுடலாம்..” என்று ரம்யாவின் அண்ணன் கேட்டதும்,

“லாமொனேஷன்ல்லாம் வேண்டாம்… இந்த போட்டோ சைஸ்ல ஒரே ஒரு பிரிண்ட் போட்டுக் கொடுத்தாலே போதும்..” என்று பதில் கூறினாள்…

“சரிங்க சிஸ்டர்… நீங்களே வந்து வாங்கிக்கீறீங்களா..?? இல்ல ரம்யாக்கிட்ட கொடுக்கவா..??” அவன் கேட்டதற்கு கங்கா பதில் சொல்வதற்குள்ளேயே,

“என்கிட்டேயே கொடுண்ணா.. நானே அக்காக்கிட்ட கொடுத்துட்றேன்..” என்று ரம்யாவே பதில் கூறினாள்.

“அக்கா.. இன்ஸ்ட்டியூட்க்கா போறீங்க… மதியத்துக்கு மேல வேலை இல்ல… அதனால நானும் உங்கக் கூட வரவா..??” ரம்யா கேட்டதும் அவளும் சரி என்று தலையாட்டினாள்.

ரம்யா அந்த நேரம் கங்காவின் இன்ஸ்ட்டியூட்டில் தையற் பயிற்சியில் இருந்தாள்… வகுப்பு நேரமென்று இல்லாமல் அடிக்கடி இன்ஸ்ட்டியூடிற்கு வந்து ஆர்வத்தோடு கற்றுக் கொள்வாள்… கங்காவிற்கும் ரம்யாவை மிகவும் பிடிக்கும், பொதுவாக அவளைப் பற்றி தெரியாத போது, நன்றாக பேசுபவர், கழுத்தில் தாலியோடு கணவன் யாரென்று தெரியப்படுத்தாமல் இருக்கும் அவளின் பிண்ணனி தெரிந்ததும், அவளிடம் பழக தயக்கம் காட்டுவர்… ஆனால் ரம்யா அப்படியில்லை… அவள் பற்றி தெரிந்தபோதும், அக்கா.. அக்கா.. என்று பாசத்தோடு பழகுவாள்… அதனாலேயே ரம்யா கங்காவிற்கு நெருக்கமாகி போனாள்… ரம்யாவையும் தன் தங்கையாகவே கங்கா நினைத்தாள். அதனால் தான் அவளுடைய அண்ணனுக்கு நதிகள் பதிப்பகத்தின் தொடக்க விழாவில் புகைப்படம் எடுக்க வாய்ப்பு கொடுத்தாள்.

ஆனால் ரம்யா இப்போது தன்னைப் பற்றி என்ன நினைப்பாள்..?? யோசனைகளோடு கங்கா நடந்துக் கொண்டிருக்க,

“அக்கா… நான் யார்க்கிட்டேயாவது இந்த விஷயத்தை சொல்லிடுவேன்னு நினைக்கீறீங்களா..?? நான் யார்க்கிட்டேயும் இதை சொல்ல மாட்டேன்...என்னோட அண்ணன் மூலமாவும் இந்த விஷயம் யாரிடமும் போகாது… நீங்க பயப்படாதீங்க…

ஆனா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன் க்கா.. உங்க கடந்தகாலம் பத்தி எனக்கு தெரியாது… ஆனா நீங்க தப்பானவங்களா இருக்க மாட்டீங்கன்னு நான் எப்பவும் நம்பறேன்… ஆனா உங்க எதிர்காலம் பத்தி நீங்க யோசிக்கனும்… இளங்கோ அண்ணா பதிப்பக விழால துஷ்யந்த் சாரை பார்த்தேன்… பார்க்க பழக நல்லவரா தான் இருக்காரு… முக்கியமா அவருக்கு உங்க மேல ரொம்ப அன்பு இருக்கு.. உங்களுக்கும் அப்படித்தான்னு நினைக்கிறேன்.. உங்க ரெண்டுப்பேருக்குள்ள என்ன..?? அதெல்லாம் எனக்கு தேவையிலை… இந்த ஊரு உலகம் என்ன சொல்லும், அதைப் பத்தில்லாம் யோசிக்காதீங்கக்கா… நல்ல முடிவா எடுங்க..” என்று பக்குவப்பட்டவளாக ரம்யா கூறிய போது, கங்காவால் எந்த பதிலும் கூற இயலவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.