(Reading time: 13 - 25 minutes)

காப்பாத்துங்க அப்பிடீன்னு கத்தினா.அட என்ன இது மூட்டைக்குள்ளேந்து பொண்ணு குரல் கேக்குதுன்னு சொல்லிக்கிட்டே அந்த பையங்க ரெண்டு பேரும் மூட்டைய அவிழ்த்தாங்க.சட்டுன்னு வெளியேவந்தா அன்னக்கிளி.அந்த ரெண்டு பேருக்கும் thanks சொன்னா.கிடுகிடுன்னு அங்க இங்க கெடந்த சுள்ளிக்குச்சியயெல்லாம் பொறுக்கி கோணிக்குள்ள போட்டு பழயபடி மூட்டமாதிரி கட்டிவெச்சா.ஓடிப்போய் ஒரு எடத்துல ஒளிஞ்சுகிட்டா.

அந்த அசட்டு புருஷன் தீப்பெட்டிய கொண்டு வந்தான்.மூட்ட மேல மண்ணெண்ணய ஊத்தினான்.

தீக்குச்சிய கொளுத்தி நெருப்பு வெச்சான்.மூட்டைக்குள்ள இருந்த வரட்டி,உறிமட்டை,சுள்ளி எல்லாம்படபடன்னு வெடிச்சுகிட்டே எரிஞ்சுது.எல்லாத்தையும் மறஞ்சு இருந்து பாத்துக்கிட்டே இருந்தாஅன்னக்கிளி.மக்கு புருஷன் வீட்டுக்குப் போய்ட்டான்.

அன்னக்கிளிக்கு எங்க போரதுன்னே தெரியல.இருட்ட ஆரம்பிச்சுது.மனித நடமாட்டமே இல்ல.

அன்னக்கிளிக்கு பயமா இருந்தது.பசி வேர.கும்மிருட்டா ஆயிடுத்து.உய் உய்ன்னு காத்து அடிச்சுது.

ஆத்து தண்ணியோட சத்தம் சளசளன்னு கேட்டுச்சு.தூரக்க நிறைய நரிங்க ஊன்னு ஊளையிடுர சத்தம் கேட்டுது....நாய்ங்க வேர கூட்டமா கத்திச்சு..பாம்புங்க தவளய புடிக்கரச்சே தவளைங்க க்ரீச் க்ரீச்ன்னு கத்துமே அது வேற கேட்டுச்சு.அன்னக்கிளிக்கு பயம் தாங்க முடில.உடம்பெல்லாம் நடுங்கிச்சு.அமாவாசை இருட்டு.கீழ இருந்தா பாம்புகீம்பு கடிக்குமோன்னு நெனெச்ச அன்னக்கிளி ஒரு மரத்து மேல ஏறி பத்ரமா ஒக்கந்தா.பயம் பயம் பயம்....ஒரே பயம்..

பாதி ராத்திரி ஆச்சு..அன்னக்கிளி தூங்காம அங்கயும் இங்கையும் பாத்துக்கிட்டே இருந்தா.அப்ப...

தூரத்துல ஒரு வெளிச்சம்..கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து வரமாதிரி இருந்தது.அன்னக்கிளிக்கு அடி வயத்துல குபீர்ன்னு பயம் வந்தது.கொள்ளிவாய்ப் பிசாசு வருதுன்னு நெனெச்சு ரொம்ப பயந்தா.

மூச்ச பிடிச்சுகிட்டு ஒக்காந்திருந்தா.கொஞ்சம் கொஞ்சமா வெளிச்சம் அவ கிட்டத்துல வந்திடுச்சு.

நல்லவேள அது கொள்ளிவா பிசாசு இல்ல.தடிதடியா நாலு ஆம்பிளைங்க கையில தீவட்டி எடுத்து கிட்டு..ஒரு பெரிய மூட்டயையும் எடுத்துகிட்டு வந்தாங்க.அன்னக்கிளி ஒக்காந்திருக்கிற மரத்தடிக்கு வந்தாங்க.அன்னக்கிளி சத்தமே போடல.மூட்டைய கீழெ வெச்சாங்க.அவங்கெல்லாம் பயங்கரமான திருடங்க.

ஒத்தன் சொன்னான்..அடேய் எனெக்கு ரொம்ப பயமா இருக்குங்கடா..ஏதேதோ சப்தமெல்லாம் கேக்குது..பேய் வருமோன்னு பயமா இருக்குடா..அப்பிடின்னான்.இன்னொருத்தன் சொன்னான்

ஆமாம்டா...எனெக்குப் பேய்ன்னா பயம்..கொஞ்ச தூரத்துல சுடுகாடு இருக்குடா..அங்கேந்து பேய் வந்தாலும் வரும்டா என்றான்..அட போங்கடா..பேயாம் பேயி..அதுக்கெல்லாம் எனக்கு பயம் இல்லடா அப்பிடின்னான் இன்னொருத்தன்.ஆனாலும் பயந்துகிட்டே சுத்தியும் முத்தியும் பாத்தான்.நாலாமவ்னுக்குஉடம்பெல்லாம் நடுங்கியது.அப்போது மிக வேகமாகக் காற்று வீசியது..பயங்கரமாக நரிகள்ஊளையிட்டன..அன்னக்கிளிக்கு பயத்தில் உடம்பு நடுங்கியது.ஒங்க காதோடு ஒரு விஷயம் சொல்றேன்.என்னாச்சு தெரியுமா..பயத்துல அன்னக்கிளி ஒன் பாத்ரூம் போயிட்டா.சொடசொடன்னு அது கீழே ஒக்காந்திருந்த திருடங்க மேல கொட்டிச்சு.அவ்வளவுதான்..ஐயோ..பேய்...பேய் .... அப்பிடின்னு கத்திக்கிட்டே அந்த திருடங்க நாலு பேரும் மூட்டைய அப்பிடியே போட்டுட்டு ஓடியேபோய்ட்டாங்க.தீவட்டியும் அணெஞ்சு போயிடுச்சு.அன்னக்கிளி அசையாம ஒக்காந்திருந்தா.

காலை விடிய ஆரம்பிச்சிது.அன்னக்கிளி மரத்துலேந்து எறங்கினா.மூட்டைய பிரிச்சுப்பாத்தா பாத்தவ அப்பிடியே பிரமிச்சுப் போய்ட்டா.அமாம்... அந்த மூட்டேல கொத்துக் கொத்தா தங்க வைர நகைங்களும் கட்டுக் கட்டா பணமும் இருந்துச்சு.என்ன செய்யல்லாம்ன்னு ஒரு நிமிஷம் யோசிச்சா.

ஒரு plan  அவளுக்குத் தோணுச்சு.

மூட்டயத் தூக்கி தலைல வெச்சுக்கிட்டு மாமியார் வீட்ட நோக்கி நடந்தா அன்னக்கிளி.கதவத் தட்டி அதத அதன்னு கூப்ட்டா.உள்ள இருந்த மாமியார்க்காரிக்கு தூக்கிவாரிப் போட்டுச்சு.ஐயோ இதென்ன..

அன்னக்கிளியதான் கொளுத்தி சாக அடிச்சாச்சே..வாசல்ல அவ கொரலு கேக்குதே..அதெப்பிடி..

ஒரு வேள அவளோட பேயா இருக்குமோ?பயந்து கிட்டே கதவத் தொரந்தா மாமியார்க்காரி.

தலைல மூட்டையோடு நிக்கிற அன்னக்கிளிய பாத்து மிரண்டு போனாள் மாமியார்.

அத்த..பயப்படாதீங்க அத்த...நான் பேய் இல்ல ...உள்ள வந்து விபரமா சொல்றேன் அப்பிடின்னு சொல்லிக்கிட்டே உள்ளே வந்தாள் அன்னக்கிளி.மூட்டையைப் பிரித்துக் காட்டினாள்.கொத்துக் கொத்தாய் நகைகளையும் கட்டுக் கட்டாய் பணத்தையும் பார்த்த மாமியார்க்காரிக்கு தலையைச் சுற்றியது.ஏது இவ்வளவு..ஏது இவ்வளவு என்று மூட்டையைச் சுற்றிச்சுற்றி வந்தாள்.

அன்னக்கிளி தனது ப்ளானை நிறைவேற்றத் தொடங்கினாள்.அத்த சொல்றேன் அந்த கதயக் கேளுங்க என்று சொல்லத்தொடங்கினாள்.

ஒங்க புள்ள என்னைக் கொளுத்தி சாகடித்தாரா..நான் செத்துப்போய் சொர்க்கத்துக்குப் போனேன்.

அம்மாடி சொர்க்கம்தான் எத்தன சுகமா அழகா அருமையா இருக்கு?எனெக்கு அங்கேயே இருக்கணும்ன்னுதான் ஆசையா இருந்துச்சி.ஆன பாருங்க அத்த..அங்கே மாமாவப் பாத்தேன்..

அதான் ஒங்க புள்ளையோட அப்பாவப் பாத்தேன்..

என்னது எம் புருஷன பாத்தியா? நெசமாலுமா?விழி பிதுங்கக் கேட்டாள் மாமியார். 

 ஆமாம் அத்த மாமாவ நான் போட்டோல பாத்திருக்கேன்ல..அங்க பாத்ததும் அடையாளம் தெரிஞ்சு போச்சு..

ம்ம்.அப்பரம்..அவரு என்ன சொன்னாரு? என்னபப்த்திக் கேட்டாரா?..ஆவலோடு கேட்டார்.

பின்ன கேக்காமலா.?

நீ என்ன சொன்ன?

அத்த...இப்பல்லாம் வீட்டுல பணக்கஷ்ட்டம் உள்ளதாகவும்..உங்களுக்குப் போட்டுக்க நகையே இல்லன்னும் சொன்னேன்..மாமா அழுதுட்டாரு அத்த..ஒடனே ஒங்கள பாக்கணும்ன்னாரு..இப்ப இதெல்லாம் எடுத்துக்கிட்டு போய் ஒன் அத்தேட்ட குடு..அவ என்ன பாக்க வர்ரச்சே பெரிய மூட்டையா தரேன்னாரு அத்த..

அப்பிடியா சொன்னாரு..நாம் போனா பெரிய மூட்டேல நக,பணம்ல்லாம் தருவாரா.?அப்ப அன்னக்கிளி நான் ஒடனே கெளம்பறேன்...உன்ன மூட்டையா கட்டிக் கொளுத்தினாப்ல என்னையும் நீ மூட்டேல கட்டி கொளுத்திவிடு..நான் சொர்க்கத்துக்குப் போயி ஒங்க மாமாவ அதான் எம் புருஷன பாத்து பெரிய மூட்டையா வாங்கி வறேன்..ம்ம்..சீக்கிரமா என்ன கொளுத்திவிடு அன்னக்கிளி என்றாள்.

மாமியாரை மூடையில் கட்டிய அன்னக்கிளி மறக்காமல் மண்ணெண்ணெய்,.தீப்பெட்டியை எடுத்துக்கொண்டாள்.ஆற்றங்கரையின் ஓரம் மூட்டையை வைத்தாள்.கொஞ்சம் தாமதித்தாள்.

ம்ம்ம்..ஏன் தயங்குர அன்னக்கிளி சீக்கிரம் என்னக் கொளுத்து என்றாள் மாமியார்க்காரி.

மூட்டையைப் பிரித்தாள் அன்னக்கிளி..மாமியாரை வெளியே அழைத்தாள்.

அத்த..ஒங்ககிட்ட நான் சொன்னதெல்லாம் பொய் என்று சொல்லி நடந்தவற்றையெல்லாம் ஒன்று விடாமல் சொன்னாள்.எனக்கு நீங்கள் தாய் போன்றவர் உங்களைக் கொளுத்த எனக்கு மனமில்லை என்றாள்...அன்னக்கிளி சொன்னவற்றையெல்லாம் கேட்ட மாமியார்க்காரியின் மனம் திருந்தியது.

அன்னக்கிளியிடம் தான் நடந்து கொண்டதும் கொடுமைப்படுத்தியதும் தவறு என்றும் தன்னை மன்னித்து விடும்படியும் வேண்டினாள்.

இருவரும் வீடு திரும்பினார்கள்.இருவரும் தாயும் மகளையும் போல் அன்போடுவாழ்ந்தார்கள்.

அசட்டுப் புருஷனையும் அன்னக்கிளி கெட்டிக்காரனாக மாற்றி விட்டாள்.அப்பரம் என்ன?வீடே கலகலப்பாக சந்தோஷமாக மாறிவிட்டது.

ஹி..என்னப்போல ஸ்கூல் போகும் dear friends இந்தக் கதையில வரும் அன்னக்கிளி அக்கா போல மனசுல பொறுமையும் அன்பும் இருந்தா எப்பேர்ப்பட்ட கொடுமக்காரங்களையும் திருத்திடலாம்.. நாமும் இது போன்ற நல்ல குணங்களை வளத்துக்குவமா?.. நன்றி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.