(Reading time: 23 - 46 minutes)

தீபாவளி - பார்த்தி கண்ணன்

ணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. கும்மிருட்டு. மென்மையாக வானம் தூரலிட்டுக் கொண்டிருந்தது. நடுங்க வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல்,தெருக்கோடியில் மங்கலாய் எரிந்துகொண்டிருந்த தெருவிளக்கின் ஒளியில் அப்பாவின் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேன்.

“டேய் உள்ள வாடா..மழ வருது.. கரண்ட் போறதுக்குள்ள சாப்புடு வா” உள்ளேயிருந்து அம்மா அழைத்தாள்.

“பசிக்கலமா,,அப்பா வரட்டும்” உரக்கக் கத்திவிட்டு மீண்டும் வழி மீது விழியை வைத்தேன்.

Diwali“என்னடா என்னைக்கும் இல்லாத அதிசயமா அப்பா வரட்டுங்குற..”என்று அம்மா முனகியது காதில் விழுந்தது.

ஒன்பது ஐந்துக்கு வரும் மினி பஸ்ஸில் தான் அப்பா வருவார். பக்கத்து டவுனில் ஒரு மில்லில் வாட்ச்மேன் வேலை. நாளைக்கு தீபாவளி என்பதால் இன்னைக்கு ராத்திரி ஷிப்ட் இல்லை.

வாயில்படிக்கும் நடைக்கதவுக்குமாக நடை போட்டுக் கொண்டிருந்த போது, அன்றைக்கு மதியம் நடந்தது மீண்டும் நினைவுக்கு வந்தது.

“ஜீன்ஸ் பேன்ட் ஒன்னு,சாதா பேன்ட் ஒன்னு.அப்புறம் இந்த சட்டை. மொத்தம் ஆயிரம் ரூவாய்க்கு மேல டா” என்று சொல்லியவாறே அவற்றை, “நியூ இந்தியா சில்க்ஸ்” என்று எழுதியிருந்த துணிக்கடை கவரிலிருந்து வெளியே எடுத்து என் மடியில் வைத்தான் சங்கரன். வாய் கொள்ளாத சிரிப்பு. கண்ணில் மிளிரியது அவ்வளவு பெருமிதம். நானும் அவனும் எங்கள் ஊர் அரசுப்பள்ளியில் மூன்றாவது படிக்கிறோம்.

புதுத்துணியின் மனம் நன்றாக இருந்தது. முகர்ந்து கொண்டேன். ஜீன்ஸ் பேன்டைத் தடவிப் பார்த்த போது உணர்ந்த அந்த பொருபொருப்பு புதுமையாக இருந்தது. ஜீன்ஸ் பேன்ட்டெல்லாம் எனக்கு வாங்கியதுமில்லை, போட்டதுமில்லை. நல்ல நாள், பண்டிகை என்று ஏதாவது வந்தால் எங்கள் ஊர் ராமசாமி அண்ணன் கடையில் துணி எடுத்து, டெய்லரிடம் கொடுத்து ஒரு செட் சட்டை,ட்ரவுஸர் தைத்துக் தருவார்கள். ஆனால் இதுவும் கூட அந்த  சமயத்தில் அப்பாவிடம் காசு பணம் புழங்கினால் தான். இல்லையென்றால் அதற்கு முன்னால் கடைசியாக வாங்கிய துணியைத்தான் அன்றைக்கும் போட்டுக் கொள்வது.

கட்டிலுக்கடியிலிருந்து ஒரு அட்டைப்பெட்டியை எடுத்தான் சங்கரன். வெளியே நீட்டிக் கொண்டிருந்த நான்கு ராக்கெட் வெடிகளைப் பார்த்த்தும் புரிந்தது, அது பட்டாசுப் பெட்டியென்று.

அடேயப்பா. பெட்டி நிரைய பட்டாசுகள். வண்ண வண்ணமாய், வித விதமாய் சின்னச் சின்னப் பெட்டியில் மத்தாப்புகளும், வெடிகளும். அதில் பலவற்றை நான் பார்த்ததேயில்லை.

“பாத்தியாடா துப்பாக்கி” பெட்டிக்குள்ளிருந்து ஓரு கருப்பு ப்ளாஸ்டிக் துப்பாக்கியை எடுத்து என் முகத்துக்கு முன்னாள் ஆட்டினான்.

“சூப்பர்டா” என்றேன். இனி இந்தத் துப்பாக்கி உடையும் வரை திருடன் போலீஸ் விளையாட்டுக்கு மட்டுமே வருவான் சங்கரன். அதிலும் அவனே தான் போலீஸ். நான் ஒட அவன் துரத்தி துரத்தி சுடுவான். அவ்வப்போது எனக்கும் அதை சுடத் தருவான் என்பதால் நானும் அவன் சுடும் போது “ஆ” எனக் கத்திக் கொண்டே பறந்து பறந்து விழுவேன்.

“நீ புதுத்துணி எடுத்துட்டியாடா?” சங்கரன் கேட்கவும் எனக்கு பகீரென்றது.

அந்தக் கேள்விக்கான பதிலுக்குத்தானே நானும் ஏங்கிக்கொண்டிருக்கிறேன். இந்த வருடம் மில்லில் யாருக்குமே போனஸ் இல்லையென்று நிர்வாகம் சொல்லிவிட்டதாக அம்மாவிடம் அப்பா புலம்பிக்கொண்டிருந்தது நினைவிருந்தது. புதுத்துணி எடுப்பதாக இருந்தால் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னதாக எடுத்துத் தைக்கக் கொடுத்திருக்கவேண்டும். அது நடக்கவில்லை என்ற போதே ஏறக்குறைய முடிவு செய்துவிட்டேன். இருந்தாலும் கடைசி நேரத்தில் அப்பா ரெடிமேட் துணி எடுத்து வருவாரோ என்று ஒரு துளி நம்பிக்கையும் ஏக்கமும் மனதின் எங்கோ ஒரு மூலையில் குடிகொண்டிருந்தன.

“உன்னத் தான்டா.. டிரெஸ்,பட்டாசெல்லாம் வாங்கிட்டியா?” என்று என் தோளை உலுக்கினான்.

“ஆ..ம்ம்..இன்னைக்கு நைட்டு அப்பா வீட்டுக்கு வரும் போது வாங்கிட்டு வருவாருடா.ஒரு மாசமா அப்பாவுக்கு நேரமே இல்ல. இன்னிக்கு தான் வாங்குவோம்” என்றேன்.

“நாளைக்கு தீபாவளி டா.. இன்னிக்கு நைட்டு எல்லாம் தீர்ந்துருமே”

“இல்லடா..டவுன்ல எங்கப்பாவுக்கு நெறைய கடை தெரியும். காலைலயே எங்களுக்கு எடுத்து வச்சிருக்க சொல்லிருப்பாரு எங்கப்பா” என்று ஒரு பொய்யைச் சொல்லி முடிக்கும் போதே துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது. கண்ணீர் முட்டிக் கொண்டது. எப்படியோ சமாளித்து வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன்.

இப்போது, ‘பாம் பாம்’ என்ற மினி பஸ்ஸின் ஹார்ன் ஒலி கேட்டதும், நினைவுகள் கலைந்தன. என்னை அறியாமல் கால்கள் தெருவுக்கு ஓடின.

பஸ்ஸிலிருந்து சிலர் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அதில் அப்பாவை கண்கள் தேடின. சில நிமிடங்களில் அந்த சிறு கூட்டம் தெருமுனையை அடைந்த போது, தெருவிளக்கு வெளிச்சத்தில் அப்பாவைக் காண முடிந்தது. அவர் கையில் ஒரு வெள்ளை துணிக்கடைப் பை.

மனதில் ஒரு லட்சம் பட்டாம்பூச்சிகள் பறந்தன. இருண்ட அந்தத் தெருவின் மத்தியில் நின்றிருந்த நான் துள்ளிக் குதித்தேன்.

“அம்மா..அப்பா வந்தாச்சு” என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் ஓடிப் போய் கட்டிலில் விழுந்தேன்.

“அய்யோ..ஏண்டா இப்புடி கத்துற. அவரு தினமும் தான வர்ராரு” என்று எரிச்சல் பட்டுக் கொண்டாள் அம்மா.

கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டு கண்களைப் பொத்திக்கொண்டேன். அப்பா வந்து அழைத்த பின்னால் அந்தப் பையை வாங்கிப் பார்க்கலாம் என்று எண்ணிக்கொண்டேன்.

சில நொடிகள் கடந்தன. ஆனால் என்னால் இருப்புக் கொள்ள முடியவில்லை.

எழுந்து மீண்டும் தெருவுக்கு ஓடினேன். அப்பா கிட்டத்தட்ட வீட்டை அடைந்து விட்டார்.

என்னைப் பார்த்ததும்,”ஏன்டா..இந்நேரத்துல வெளியில என்ன வேலை..உள்ள போ” என்றார் வழக்கமான கரடு முரடான குரலில்.

அவர் அப்படித்தான். எந்த உணர்வையும் காட்டாத ஒரு குணாதிசயம் கொண்ட ஆள்.. ஆனாலும் அம்மாவை விட அவரைத் தான் எனக்குப் பிடிக்கும். ஏனெனில் என்னை அவர் எப்போதும் எதற்கும் அடித்ததில்லை. ஆனால் அம்மா என்றால் அடி தான்.  இந்த வாட்டும் வறுமையில் அப்பா சிரிப்பை மறந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தன. அன்போ பாசமோ தப்பித் தவறியும் அவர் பேச்சிலும் செயலிலும் காட்டியதில்லை..சரி இப்போது எனக்கு தேவை பாசம் இல்லை. பட்டாசு மட்டுமே.

நான் முன்னே செல்ல, அப்பா பின் தொடர்ந்தார். நான் வாசலில் நிற்க, அவர் நடைக்கதவை இழுத்து சாத்தினார். அப்போது அவர் வைத்தைருந்த பாலிதீன் பையைப் பார்த்தேன்.

பட்டாசு இருப்பதற்கான அறிகுறி ஏதுமில்லை. அது பரவாயில்லை. காலையில் கூட பக்கத்து மளிகைக் கடையில் கூட வாங்கிக்கொள்ளலாம். துணி இருந்தால் போதும் கடவுளே என வேண்டிக்கொண்டேன்.

“வரும்போது மழையாப்பா?”

“இல்ல” என்று ஒற்றைச் சொல்லில் பதில் சொல்லிவிட்டு என்னைக் கடந்து சென்றார். பின்தொடர்ந்து ஓடினேன்.

“இன்னிக்கு பஸ் அஞ்சு நிமிஷம் லேட்டுப்பா..என்னாச்சு?”

“நானாடா ஓட்டுறேன்? என்னைய கேக்குற.. போடா உள்ள” என்றார் அதட்டும் தொனியில்.

அதற்கு மேல் என்ன கேட்பது? அமைதியாக உள்ளே சென்று கட்டிலில் உட்கார்ந்துகொண்டேன்.

அம்மா அப்பாவிடமிருந்து பையை வாங்கிக்கொண்டார்,”நல்ல நேரம்.மழைக்கு முன்னாடியே வந்துட்டீங்க. கைய கழுவிட்டு வாங்க சாப்புடலாம்” என்று தண்ணீர் செம்பை நீட்டினார்.

நான் கட்டிலில் படுத்துகொண்டே வெளியில் நடப்பதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

“டேய்..இங்க வா” அப்பா கூப்பிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.