(Reading time: 9 - 18 minutes)

லைபேசியில் புதுப்பிக்கப்பட்ட நட்பு, நேரிலும் தொடர்ந்தது. தன் வீட்டுக்குத் தனியாக வந்தவனிடம், “வாடா, நீ மட்டும் வந்திருக்க... வீட்ல கூட்டிட்டு வரச் சொன்னேனே...” என பாலகுமார் உரிமையுடன் கோபித்துக் கொள்ள, 

“பக்கத்தில் ஓர் வேலையாக வந்தேன்... அடுத்த முறை கூட்டிட்டு வரேன்டா...” என்றான் வெங்கடேஷ்.

மனைவியையும், மகள்களையும் நண்பனுக்கு அறிமுகப்படுத்தி வைத்த பாலகுமார், பின்னர் அவனைப் பற்றியும், அவன் பணியில் எட்டிய வளர்ச்சியைப் பற்றியும் பெருமையுடன் பேசினான்.

“நீ காலேஜ் படிக்கும் பொழுதே திறமைசாலியாச்சே... இப்போது கேட்கவா வேண்டும்? நான் உயிரோட இருப்பதற்குக் காரணமே நீ தான்டா” என்றான் வெங்கடேஷ்.

கல்லூரிக் காலத்தில் வெங்கடேஷ் விபத்தொன்றில் அடிப்பட்டிருந்தான். அப்போது அவனுக்குத் தேவையான இரத்தத்தை, துரிதமாகச் செயல்பட்டு அலைந்து, திரிந்து சேகரித்துத் தந்தான் பாலகுமார்.

சற்று தாமதித்திருந்தாலும் அவன் உயிரைக் காப்பாற்ற முடிந்திருக்காது என மருத்துவர்களே அன்று சொன்னார்கள்.

பின்னர் பேச்சு, பாலகுமாரின் வலைப்பதிவுகளைப் பற்றியும், அதனால் பெருகிய அவன் நட்பு வட்டத்தைப் பற்றியும், தகவல் தொடர்பில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றியும் வலம் வந்தன.

அவனுடன் பழங்கதைகளைப் பேசியதில் பாலகுமாரின் அன்றைய பொழுது மிகவும் உற்சாகமாகக் கழிந்தது. ஆகவே தன் வீட்டுக்கு வருமாறு வெங்கடேஷ் அழைக்கவும், அடுத்த வாரம் தன் குடும்பத்துடன் கிளம்பினான்.

அங்கு சென்ற பின்னரே, வெங்கடேஷின் மகளுக்கு, ‘ஆட்டிசம்’ (மதி இறுக்கம்) இருப்பது பாலகுமாருக்குத் தெரிந்தது. மூளையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் அமர்ந்திருந்தாள்.

ஆட்டிசம் ஓர் நோயல்ல என்றாலும் வெங்கடேஷின் மகளுக்கு ஆட்டிசம் சற்று கடுமையானதாகவே இருந்தது. மகளின் இந்நிலையைப் பற்றி இதுவரையில் அவன் சொன்னதில்லை.

அவனிடம் தனிமையில் பாலகுமார் விசாரிக்க, “அவளுக்கு உண்டான பயிற்சியைத் தந்து கொண்டிருக்கிறோம்... அவள் சிகிச்சைக்குப் பணம் தண்ணீராய்க்  கரைகிறது...

வாங்கும் சம்பளம் எல்லாம் இதற்கே அதிகமாய்ச்  செலவாகிவிடுகிறது... அவளைப் பார்த்துக்கவென என் வைஃப்பும் வேலைக்குப் போவதில்லை...” என அன்று ஆரம்பித்த வெங்கடேஷின் புலம்பல், இன்று வரையிலும் தொடர்கிறது.

அதனால் தான்,  ‘உன்கிட்டே ஒண்ணு கேட்கணும்...’ என வெங்கடேஷ் சொன்னதும், ‘வீட்டில் இல்லைடா’ எனப் பொய்யுரைத்தான் பாலகுமார்.

புது வீடு, புது கார் என அவனுக்கே ஏகப்பட்ட செலவுகள் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கிறது. இதில் நண்பன் பண உதவி கேட்டால் என்ன செய்வது?

“அப்படியே அவனுக்குப் பணத்தைக் கொடுத்தாலும், எப்போது திரும்ப வரும் எனத் தெரியாது? ச்சே... இப்படியெல்லாம் பிரச்சனை வரும் எனத் தெரிந்திருந்தால் பழைய நட்பைப் புதுப்பிக்காமல் விட்டிருப்பேன்” என மனைவியிடம் புலம்பிக் கொண்டிருக்கையில் ஆனந்திடமிருந்து பாலகுமாருக்கு அழைப்பு வந்தது.

அவனும் வெங்கடேஷைப் பற்றியே பேசினான். “வெங்கடேஷ் பெண்ணுக்கு இப்படி ஆகியிருக்க வேண்டாம். அவன் இருக்கிற வரையில் மகளுக்குப் பாதுகாப்பாக இருப்பான். அதன்பிறகு அவளின் துணைக்கு யார் இருக்கிறார்கள் என்ற பெரும்கவலை அவனை அரிக்கிறது.

எனக்குத் தெரிஞ்ச,  ஆட்டிசத்துக்கென செயல்படும் மறுவாழ்வு மையத்துக்கு அவனைக் கூட்டிட்டுப் போனேன். சற்று நம்பிக்கையும், தைரியமும் அவனுக்கு கூடியிருக்கு.

மனைவியின் ரணத்தையும் கிளறிவிட்டிடுவோம் என மகளைப் பற்றி அவர்களிடம் மனசுவிட்டுப் பேச முடியலையாம் அவனால். அதனால் தான் நம்மிடம் புலம்புகிறானாம்.

‘பணம் வேணுமா?’ எனக் கேட்டால்,  ‘சிகிச்சை பற்றியும், ஆட்டிசம் பற்றிய மேலும் விவரங்களையும் தந்து அவனுக்கு ‘மாரல் சப்போர்ட்’ கொடுத்தாலே அது கோடி ரூபாய்க்குச் சமம் என அழறான்டா...”  எனப் பேசிவிட்டு வைத்தான் ஆனந்த்.

‘அப்போ என்னிடம் அவன் பணம் கேட்க நினைக்கவில்லையா?’ என பாலகுமாரின் மனதில் நிம்மதி அலையடித்தது.  

“அப்பா, வெங்கடேஷ் மாமா இதை உங்கக்கிட்டே கொடுக்கச் சொன்னார்..” எனக் கீழே தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த இளைய மகள் ஓடிவந்து கடிதம் ஒன்றைத் தந்தாள்.

“அவனை எங்கே பார்த்தே? என பாலகுமார் திகைக்க, “இப்போ.. நம்ம அப்பார்ட்மெண்டுக்கு கீழே...” என ஓடிவிட்டாள்.

கடிதத்தை அவசரமாகப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.