(Reading time: 9 - 18 minutes)

2017 போட்டி சிறுகதை 90 - நலம் நலமறிய ஆவல் - லாவண்யா

This is entry #90 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - லாவண்யா

Father

வேலைமுடித்து வீடு வந்த பாலகுமாருக்கு மனம் எதிலும் ஒன்றவில்லை. எல்லாம் சற்றுமுன்னர் நண்பனிடமிருந்து வந்த அழைப்பால்.

“பாலா, எப்படிக் கேட்கிறது எனத் தெரியலை. வந்து... ஓர் முக்கியமான விஷயம் கேட்கணும்... வீட்டில் இருக்கியா?” என வெங்கடேஷ் தயக்கத்துடன் கேட்டதே திரைப்படம் முன்னோட்டம் போல் மீண்டும், மீண்டும் பாலகுமாரின் மனதில் ஓடியது.

வெங்கடேஷுக்குப் பணத் தேவையைத் தவிர வேறென்ன முக்கியமானதாக இருக்க முடியும்? கல்லூரி வாழ்க்கைக்குப் பின்னர் மீண்டும் அவனைச் சந்தித்த கடந்த ஆறு மாதங்களில் அது மட்டும் தானே அவனின் புலம்பலாக இருக்கின்றது.

“வீட்டில் இல்லைடா...” என வெங்கடேஷிடம் பட்டென்று பொய் உரைத்தான் பாலகுமார். ஆனாலும் இது இன்றோடு தீர்கின்ற பிரச்சனையல்ல. நாளை மீண்டும் அழைப்பான்.

இப்படி இடையூறாக இருக்குமென்று தெரிந்திருந்தால் இந்தத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை, பூப்போட்டு வரவேற்றிருக்கவும் மாட்டான்... பெருமையுடன் பேசியிருக்கவும் மாட்டான்.

இன்று இப்படி நினைக்கும் பாலகுமார், தன் மகள்களிடம், ‘தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் தகவல் தொடர்பு மிகவும் எளிதாகி விட்டது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்...’ எனப் பொறாமைப்பட்டிருக்கிறான்.

ஆறு மாதங்களுக்கு முன்னால் தன் இரு மகள்களுடன் ‘ஐஸ்கிரீம் பார்லரில்’ பாலகுமார் அமர்ந்திருந்த வேளையில், அவன் இளைய மகளின் அலைபேசியில் செய்தி ஒன்று வந்தது.

அதைப் பார்த்துக் கிளுக்கிச் சிரித்தவள், “அக்கா, என் ஃபிரெண்ட் சிங்கப்பூர் டூர் சென்றிருக்கிறாள் என்றேனல்லவா? அங்கே ஓர் பூங்காவில் பஞ்சவர்ணக்கிளிக்கு உணவு கொடுக்க முயன்றாளாம்.

ஆனால் அந்தக் கிளி அவள் தலையில் ஏறி உட்கார்ந்து, அவளைப் பயமுறுத்திவிட்டதாம்... ‘வாட்ஸ் ஆப்’பில் ஃபோட்டா அனுப்பியிருக்கிறாள் பாருங்கள்... ‘வெரி ஃபன்னி’...” என அவன் பெரிய மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“இந்தத் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் உங்கள் நட்புறவு அறுந்து போகாமல் இருப்பதற்கு பெரிதும் துணை புரியும்... எங்களுக்குத் தான் அந்தக் கொடுப்பினையில்லை...” என மகள்களிடம் ஏக்கத்துடன் சொன்னான் பாலகுமார்.          

“ஏன்ப்பா பொறாமைப்படுகிறீர்கள்? நீங்களும் இதன் வழியே உங்கள் நண்பர்களைத் தேடிப் பிடியுங்கள்...” என்றாள் இளைய மகள்.

“சொல்லறது சுலபம்டா... எல்லாரும் எந்த மூலையில் இருக்கிறார்களோ?” என்றான் பாலகுமார்.

“அப்பா, உங்கள் வலைப்பதிவுகளால் முகமறியா பலரையும் நண்பர்களாக்கி இருக்கிறீர்கள்... காலேஜில் மாணவர்களின் பிரதிநிதியா இருந்த நீங்கள், உங்கள் பழைய நண்பர்களைக் கண்டுப்பிடிக்க முடியாதா என்ன?” எனப் பெரிய மகள் அவனை உசுப்பேற்ற, அவன் தேடல் அன்று ஆரம்பமானது.

அதே வேலையாகச் செயல்பட்டு முதலில் ஓர் வகுப்புத் தோழனை முகப்புத்தகத்தின் மூலம் கண்டுப்பிடித்துவிட்டான். அதன்பின்னர் அவன் வழியாக மற்றொருத்தன் எனப் பட்டியல் நீள ஆரம்பித்தது.

ஆனாலும் அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் வெங்கடேஷையும், ஆனந்தையும் மட்டும் கண்டுப்பிடிக்க முடியாததால் அவன் மனம் திருப்தியடைய மறுத்தது. அந்த ஆதங்கத்தை அவன் மகள்களிடம் கொட்ட,

“‘வாட்ஸ் ஆப்ல’ ஒரு ‘க்ரூப்’ ஆரம்பிங்க... தினமும் நண்பர்களிடம் பேசுவதன் மூலம் அவர்களைக் கண்டுப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது” என மகள்கள் சொல்ல, அதைப் பின்பற்றினான். அப்படி ஆரம்பித்த குழுவும், விரைவாக விரிவடைந்தது.

தினமும் காலை வணக்கம் என்று ஆரம்பித்து, இன்றிரவு என்ன உணவு என்பது வரையில் அனைத்து விஷயங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கல்லூரித் தோழர்களும், ‘ஒவ்வொரு மூலையில் இருப்பவர்கள் எல்லாம் உன்னால் தான் ஒன்று சேர்ந்தோம்’ எனச் சிலாகித்தனர்.

‘தன்னால் என்பதைவிட,  தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் என்றால் சரியாக இருக்கும். அதனால் உலகத்தையே சுருக்கி நம் கைக்குள் அடக்கிவிட்டோமே’ என இறுமாந்திருந்திருந்தான் பாலகுமார்.

அவன் நண்பர்கள் தந்த ஊக்கத்தில் நாளடைவில் வேறொரு வகுப்புத் தோழன் வழியாக வெங்கடேஷ் மற்றும் ஆனந்தின் அலைபேசி எண்களைக் கண்டுப்பிடித்து விட்டான்.

இனிய உணர்வுடன் வெங்கடேஷை அழைக்க, அவன் பாலகுமாரை விடவும் உற்சாகமாகப் பேசினான்.

“டேய் பாலா, நீ இந்த ஊரிலா இருக்க? உன் அப்பாவுக்கு வேலை மாற்றல் வந்து நீ கிளம்பினதும் உன்னிடம் தொடர்பேயில்லை...” என ஆரம்பித்த பேச்சு, கடந்து போன இருபது வருட வாழ்க்கையையும் சுற்றி வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.