(Reading time: 10 - 19 minutes)

சிறுகதை - எளிமையாக ஒரு காதல் கதை - லேகா

love

னைவருக்கும் வணக்கம். என் பெயர் மதி, மதிவதனி.  இத்தளத்தில் பலர் கதைகளைப் பதிவிட்டிருக்கின்றனர்.  அதில் ஒன்றாக என் காதல் மலர்ந்த மொக்கைக் கதையை தங்களுடன் பகிரவே தற்போது இங்கே வந்துள்ளேன்.

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே நகரத்தில்தான்.  எங்கள் சொந்தம் முழுவதுமே கிராமத்தில் இருந்தாலுமே, நாங்கள் அங்கு செல்வதென்பதோ, ஏதேனும் விஷேச சமயங்களில் மட்டுமே.  அன்றும் அதே போல ஒரு விழாவிற்கு செல்ல வேண்டியிருந்தது.

‘காலேஜ் லீவு, ஜாலியா வீட்டுல இருக்கலாம்னு பார்த்தா, இப்படி ஊருக்கு வான்னு சொல்லி கொடுமைப்படுத்துறாங்களே!’ என சலித்துக்கொண்டே ரெடியாகி என் அறையை விட்டு வெளியே வந்தேன்.

உடனே எனக்கு அங்கே செல்ல விருப்பமில்லைன்னு நினைக்காதீங்க.  அங்கே போறவரைக்கும் தான் இந்த சலிப்பு எல்லாம். அதன்பின், எல்லாமே மறந்து போய்விடும்.

அங்கே சென்று எப்போதும் போல் எனக்கான வாண்டுகளின் கூட்டத்தோடு அமர்ந்து நக்கல், நய்யாண்டி போன்ற வேலைகளை வெகு நன்றாக பார்த்துக்கொண்டிருந்த நேரம், எங்களை விட்டு சிறிது தூரத்தில் சலசலப்பு.

என்னவென்ற ஆர்வத்துடன் பார்த்தோம்.  இருவருக்கு ஏதோ தகராறு போல.  என்ன ஆகுமோ என்று பார்த்துக்கொண்டிருந்தோம்.  அவர்களை கட்டுப்படுத்த சிலர் முயன்று கொண்டிருந்தனர்.  அப்போது யாரோ அங்கே வந்து சமாதானப் படுத்தினார்.

இது தாங்க என் ஹீரோவோட என்டரி.  எஸ்… நீங்க நினைச்சபடி அந்த சமாதானப் புறா தான்.  யாரோ எவரோ தெரியவில்லை.  ஆனால், அவர் இருவருக்குமே பரிந்து பேசுவது போல அவரவர் தவறுகளை இதமாக சுட்டிக்காட்டி அந்த சூழ்நிலையைக் கையாண்ட விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

அதற்குப் பிறகு, எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போக, நானும் என் பட்டாளத்துடன் சென்று மீண்டும் கொட்டமடிக்க ஆரம்பித்தேன்.  என்னதான் அவர்களுடன் சிரித்து பேசியபடி அமர்ந்திருந்தாலும், அந்த ‘அவன்’ நினைவு மட்டும் நீங்காமல்.

சிறிது நேரம் கழித்து என் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது, என்னை அவர் இருக்குமிடத்திற்கு வரக் கூறி.  யாரிடமேனும் அறிமுகப்படுத்தவே இவ்வாறு அழைப்பு விடுப்பார் என்பது தெரியுமாதலால், அவரைத் தேடிச் சென்றேன்.  அங்கே அவர் பேசிக்கொண்டிருந்தது, சாட்சாத் நான் முன்பு கண்டவர் தான்.  அவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்தவாறே அருகில் சென்று என் தந்தையை அழைப்பதைக் கூட மறந்தவாறு நின்றிருந்தேன்.

என்னைக் கண்ட தந்தை, “வாம்மா…. மதி… இவருக்கு உன்னை அறிமுகப்படுத்தவே உன்னை இங்கு கூப்பிட்டேன்” என்றவர், அவர் எதிரில் அமர்ந்திருந்தவனிடம் திரும்பி, “தம்பி, இவதான் என் பொண்ணு. பைனல் இயர் கம்ப்யூட்டர் படிக்கிறா” என அறிமுகப்படுத்தினார்.

அவரைத் தொடர்ந்து என்னை நோக்கிய அவன் விழிகள் சிரித்ததைக் கண்டு என் வயிற்றுள் எக்கச்சக்க பட்டாம்பூச்சிகள்.  இந்த க்ரஷ் க்ரஷ் என்பார்களே, இதுதான் போல.

அவர் பெயர் திவாக்கராம்.  ஒரு வகையில் எங்களுக்கு சொந்தம்.  பட்டப்படிப்பு முடித்துவிட்டு பெங்களூரில் வேலை.  இவ்வளவே நான் அங்கே இருந்தவரை எனக்கு கூறப்பட்டவை.  அதன்பின் என் தந்தை என்னை பெரிய மனது வைத்து அனுப்பிவிட, ‘ச்சே… நான் அங்கே இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்னவாம்’ என்று புலம்பிக்கொண்டே சென்றேன்.

அன்றைய தினத்திற்குப் பிறகு அவர் வருவார் என்று அறிந்தால் தவறாது ஆஜராகிவிடுவேன் நான்.  என்னை அவருக்கு நினைவில் இல்லை போல; ஏனென்றால், சில பல முறைகள் இருவரும் சந்தித்திருந்தாலும், அவர் என்னிடம் பேசவில்லை.  நானும் அவரிடம் பேச முயற்சிக்கவில்லை.  தயக்கம் காரணம்.

சில மாதங்கள் கழித்து எங்கள் ஊரில் திருவிழா வர, விடுவேனா நான்…  ஒரு வாரத்திற்கு முன்பே சென்றுவிட்டேன்.  ஆனால், நான் யாருக்காக சென்றேனோ, அவர் மட்டும் கண்ணில் படவே இல்லை.  ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்போடு ஆரம்பித்து சோகத்தில் முடிந்தன.

விழாவில் மிகவும் முக்கியமான நாள் அது.  அன்று இரவே திரும்ப ஊருக்குக் கிளம்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது.  அதனால், இன்று பார்த்தால் தான் உண்டு.  நேரம் செல்ல செல்ல, இனி காணவே முடியாது என்றிருந்தேன்.  ஏனென்றால், இன்னும் சில நாட்களில் நான் பணியில் சேருவதற்காக சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது.

சட்டென ஒரு குரல், அவன் பெயரை விளித்தது.  என்னையும் மீறி ஏதோ ஒன்று தோன்ற திரும்பிப் பார்த்தேன்.  என் எதிரே சற்று தூரத்தில் அவன்.  நீலவண்ண சட்டையும் வெள்ளை நிற பட்டு வேஷ்டியும் கட்டிக்கொண்டு ஒரு கையில் போன் பேசியவாறு அவன் நடந்து வந்த விதமே தனியாகக் காட்டியது அவனை.

‘போட்றா பேக்கிரவுண்ட் ம்யூசிக்கை’ என நான் என் மனசாட்சிக்கு குரல் கொடுக்க, அது ‘இது காதலா… முதல் காதலா… ஒரு ஆணிடம் உருவானதா… இது நிலைக்குமோ… நீடிக்குமோ நெஞ்சே’ என எனக்காக பாட்டுபாடியது.  நான் முறைக்க, டக்கென தன் ப்ளேயரில் பாட்டை மாற்றி ‘சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு’ என்று கூவியது.

அது அவனுக்குக் கேட்டதோ என்னவோ, அதற்கு ஏற்றாற்போல் அவன் மீசையை வேறு முறுக்கிவிட்டான்.  அதிலேயே என் மனமோ, அனைத்தையும் மறந்து அவனிடம் சரண்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.