(Reading time: 26 - 51 minutes)

ஆதர்ஷும் ப்ரியாவும் அதிர்ச்சியாக ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.  ப்ரியா தன்னுடைய தங்கை யஷ்விதாவை ஜெய்கு பேசலாம் என்று தன் கணவனிடம் சொல்லியிருந்தாள்.  இருவரின் படிப்பும் முடியட்டும் என்றிருந்தனர்.  நல்ல வேளையாக இது குறித்து யஷ்விதா உட்பட யாரிடமும் பகிராதது நன்மைக்காகவே என்று நினைத்து நிம்மதியடைந்தனர்.  ஜெய்யை பக்கத்திலிருந்து பார்த்தவளுக்கு, தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமையும் என்று மகிழ்ந்திருந்த வேளையில் அது இல்லை என்றானது சிறு வருத்தமே.  ஆனாலும் ஜெய்யின் விருப்பம் வேறாக இருக்க, அதையே நினைத்து கொண்டிருப்பதால் ஒரு பயனுமில்லை என்று அமைதியானாள்.

ந்திரசேகர் விஷயத்தை ராகுலின் குடும்பத்திடம் சற்று தயக்கத்தோடு சொல்லியிருந்தார்.  எல்லோரிடத்திலும் சங்கடமான மௌனம்.  ரவிகுமார் தம்பதியரின் பார்வை அர்த்தத்தோடு சந்தித்து கொண்டது.  ராகுலின் கண்கள், கேள்வியையும் ஆச்சரியத்தையும் மைத்ரீயிடம் அனுப்பி கொண்டிருந்தன.  ரவிகுமார் ஏதும் சொல்லாது அமைதியாகவே அமர்ந்திருந்தார்.  வடிவு தன் கணவனை பேசுமாறு தூண்டினார்.

மகனுடைய நிச்சயத்தன்றே, திடீரென மகளின் நிச்சயத்தை குறித்து பேசினால் யாருக்கு தான் அதிர்ச்சியாக இருக்காது.  ரவிகுமாரின் நிலை புரிந்தாலும் மனைவியின் தூண்டுதலில் பேசினார் சந்திரசேகர்,

“உங்க பொண்ணோட படிப்பு இன்னும் முடியலையேனு யோசிக்கிறீங்களா?”

தரையில் பதிந்திருந்த ரவிகுமாரின் விழிகள் மட்டுமே உயர்ந்தன இப்போது.

“உங்களோட நிலைமை என்னன்னு எனக்கு நல்லாவே புரியுது சம்மந்தி.  போன வாரம் நீங்க என்னோட பெண்ணை கேட்டு வந்தபோது நானும் இப்படித்தான் யோசித்தேன்.  அவள் இன்னும் சின்ன பொண்ணு... இவ்வளவு சீக்கிறம் கல்யாணம் தேவையானு நினைச்சேன்.  ஆனா அதையும் தாண்டி நம்ம பிள்ளைகளோட விருப்பமும் முக்கியமில்லையா?”

ரவிகுமாரின் முகத்தில் யோசனையின் தீவிரம் அதிகரிக்க மேலும் தொடர்ந்தார் சந்திரசேகர்,

“ஜெய்யோட குணத்தைப் பற்றி உங்களுக்கு நல்லாவே தெரியும்.  மாப்பிள்ளைட்ட வேணும்னா கேட்டு பாருங்க.  தங்கமான பிள்ளை அவன்.  ஜெய், நாங்க பெற்ற பிள்ளை இல்லனாலும், அவனை எங்களோட மகனா தான் பார்க்கிறோம்.  அவனோட ஆசை என்னனு தெரிஞ்சு, அதை நிறைவேத்துவது எங்களோட கடமை.  இப்போ கூட அவனா வந்து எங்கட்ட இதைப் பற்றி சொல்லலை.  மைத்ரீ மூலமாத்தான் இந்த விஷயமே எங்களுக்கு தெரியும்”

“என்னதா நாங்க அவனை எங்க சொந்த மகனாவே பார்த்துக்கிட்டாலும், இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட இது வேணும் அது வேணும்னு அவன் கேட்டதே கிடையாது.  நாங்க சும்மா பேச்சுக்கு பெத்தவங்களா இல்லாம அவன் ஆசை பட்டதை செய்து கொடுத்து உண்மையான பெத்தவங்களா இருக்க ஆசை படுறோம்” 

தன் விளக்கத்திற்கு பின்னும் சம்மந்தி வீட்டாரின் அமைதி சந்திரசேகரின் பேச்சை நிறுத்தியது.

பெண்ணை பெற்றவர்கள் யோசிப்பது நியாமே என்பதால், வடிவு, “நீங்க வேணும்னா கலந்து பேசுங்க.  நாங்க இப்போ வந்துடுறோம்” என்றுவிட்டு தன் குடும்பத்தை உள்ளறைக்கு அழைத்து சென்றார்.

ரவிகுமார், மகன் மனைவியிடத்தில், “நீங்க என்ன சொல்றீங்க?”

“சஞ்சய் நல்ல பையன்தான்.  சரயூ எப்பவுமே அவனைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருப்பா.  அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தா நல்லாயிருப்பாங்க” 

தன் சம்மதத்தை சொல்லிவிட்டு சாரதா மகனிடம் திரும்பினார்.

“அம்மா சொன்ன மாதிரி சரயூ ஜெய்யை பற்றி பேசாத நாளே கிடையாது.  அது உங்களுக்குமே தெரியுமேபா.  சரயூக்கு அவனை ரொம்பவே பிடிக்கும்.  நாமெல்லாம் சேர்ந்து இப்படியொரு சர்ப்ரைஸ் கொடுத்தா அவள் அப்படியே துள்ளி குதிப்பா! எனக்கு நிச்சயமா தெரியும்.  ஆனா நீங்க என்னப்பா நினைக்கிறீங்க?”

ரவிகுமாரின் எண்ணம் அவசரமாக மகளின் மனதை அலசியது.

ஜெய்யை கண்ட நாள் முதல் அவனை பற்றி மகள் பேசாத நாளே கிடையாது.  அப்படி பேசும்போதெல்லாம் அவள் கண்களில் தெரியும் மின்னலும், முகத்தில் கூடும் மலர்ச்சியும் அடிக்கடி ரவிகுமார் கவனித்ததுண்டு.  ஆனால் அதை எப்போதுமே பெரிதாக நினைத்ததில்லை.  காரணம் மகளின் மீதிருந்த நம்பிக்கையே.  அப்படியே அது காதலாக மலர்ந்தாலும் அதை மறைக்காது தன்னிடத்தில் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அப்பா மகளுக்கிடையே நட்பும், அவள் வாழ்க்கையை முடிவெடுக்கும் முழு சுதந்திரத்தையும் கொடுத்திருந்தனர் பெற்றோர்.

ஆனால் இன்றோ... மகளின் நடவடிக்கையை புதிய கோணத்தில் பார்க்கும் போது அதிர்ந்து போனார் அந்த அன்பு தந்தை.

அப்படியென்றால் மகள் காதலிக்கிறாளா? அதுவும் அவளுடைய காதலை தன்னிடமிருந்து மறைத்து வைத்திருக்கிறாளா? மகளுக்கும் தனக்குமான நட்பு எப்போது உடைந்தது.  அது சரியான நிலையில் இருந்திருக்க சம்மந்தி வீட்டார் சொல்லி அவளின் காதலை தான் அறிய வேண்டியிருந்திருக்காது என்று வருந்தினார் ரவிகுமார்.  ஒருவேளை, இப்படியும் இருக்குமோ, தன்னுடைய காதலை அப்பாவிடம் பகிராதவாறு வெட்கம் தடுத்ததோ? இந்த நினைப்பே அந்த அன்பு நெஞ்சத்தை நெகிழ்த்தியது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.