(Reading time: 9 - 17 minutes)

17. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

அனீமியா எனப்படும் ரத்தசோகை இதயத்தை பலவீனம் அடையச் செய்யும்

ந்த நள்ளிரவு நேரத்தில் ஊர் முழுவதும் இரவின் போர்வையில் உறங்கிக் கிடக்க அந்த மருத்துவமனையின் விளக்குகள் மட்டும் ஒளியை வாரி இறைத்துக் கொண்டிருந்தன.

இருப்பினும் இரவு நேரம் ஆகையால் அங்கும் ஒரு வித அமைதி தான் நிலவியது.

அப்போது மிக வேகமாய் ஒரு கார் அந்த மருத்துவமனை வளாகத்தில் நுழைய அதிலிருந்து லக்ஷ்மியும் ராமச்சந்திரனும் பதட்டமாய் இறங்கி மருத்துவமனையின் உள்ளே சென்றனர்.

ரிசப்ஷனில் இருந்த பெண்மணியிடம் கௌரி சர்வேஸ்வரன் என்ற பேஷன்ட்டைப் பார்க்க வேண்டும், தான் கௌரியின் சகோதரன் என ராமச்சந்திரன் கூற அந்த பெண்மணி யாருக்கோ போன் செய்தார். பின் மூன்றாவது தளம் ஐசியுவிற்கு செல்லும் படி வழிகாட்டினார்.

அங்கே ஐசியுவின் கண்ணாடி கதவின் வழியே தெரிந்த காட்சியில் அவர்களின் இதயம் சுக்கு நூறாக உடைந்தது.

அதற்குள் வெள்ளை கோட் அணிந்த ஒருவர் அவர்களை நோக்கி வந்தார்.

“டாக்டர் சிவகுமார்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

“டாக்டர் என் தங்கைக்கு என்னாச்சு” தவிப்புடன் கேட்டார் ராமசந்திரன்.

போனில் உங்கள் சகோதரி கௌரி மிகவும் சீரியசாக இருக்கிறார் உடனடியாக வரவும் என்ற தகவல் மட்டுமே கூறியிருந்தார் டாக்டர்.

ராமசந்திரன் லக்ஷ்மி இருவரையும் அருகில் இருந்த அவரது அறைக்கு அழைத்துச் சென்றார்.

“மிஸ்டர் ராமசந்திரன், உங்க மனதை நீங்க கொஞ்சம் திடப் படுத்திக்கணும். நான் இப்போ சொல்லப் போவது உங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கலாம். உங்களோட சிஸ்டர் என் கசினோட க்ளாஸ்மேட். அவங்களை என் கசினோட காலேஜ் போட்டோஸ்ல பார்த்திருக்கேன். அவங்க இங்க அட்மிட் ஆன போது அவர்களை அடையாளம் தெரிந்து கேட்க அவங்களும் உறுதி செய்தது நல்லாதாக போயிற்று. என் கசின் மூலமா உங்களோட கான்டேக்ட் கிடைத்து உங்களை வரவழைக்க முடிந்தது” விஷயத்தை நேரடியாக சொல்லாமல் நீண்ட முன்னுரையுடன் ஆரம்பித்தார்.

“டாக்டர்....” ராமசந்திரன் குரலில் தவிப்பு பன்மடங்கு எதிரொலித்தது.

“உங்க தங்கை இங்கே இரண்டு நாட்களுக்கு முன் மிகவும் சீரியசான நிலைமையில் அட்மிட் ஆனாங்க. அப்போ அவங்க எட்டு மாதம் கர்பமாக இருந்தாங்க. அவங்களுக்கு ஏற்கனவே இதயத்தின் வால்வில் சிறு பாதிப்பு இருந்திருக்கணும். பொதுவாக அது எந்த பிரச்சனையும் கொடுக்காம இருந்திருந்தாலும் கர்ப்ப காலத்தின் போது இதயம் பாதிப்பு ஏற்படுத்தும். உங்க சிஸ்டருக்கும் அப்படி தான் ஏற்பட்டிருக்கு. ஆனா அதை சரிவர கவனிக்கமால் சத்து குறைபாடுன்னு அலட்சியமா இருந்துட்டாங்க. அவங்களுக்கு எட்டு மாதத்திலேயே பிரசவ வலி ஏற்பட அங்கு கிராமத்தில் இருந்த ஹாஸ்பிடல் போகவும் அங்கிருந்த டாக்டர் நிலைமை சீரியசாக இருக்கவும் பெரிய ஹாஸ்பிடல் போக சொல்லியிருக்கார். இங்கே வந்து அட்மிட் ஆகவும் நான் அவங்களை அட்டென்ட் செய்தேன்”

டாக்டர் சொன்னதை கேட்டு ராமசந்திரன் லக்ஷ்மி இருவரும் மிகவும் உணர்ச்சிவசப் பட்டு போயினர். என்ன கேட்பது என்று கூட புரியாமல் அதிர்சசியில் உறைந்து போயிருந்தனர்.

“எனக்கு ஓரளவு உங்க சிஸ்டர் பத்தி அவங்க மேரேஜ் பத்தி என் கசின் மூலமா தெரிய வந்தது. உங்களோட நிலை எனக்கு நன்றாக புரியுது. ஆனா நீங்க இப்போ தைரியமா நிதர்சனத்தை எதிர்கொள்ள வேணும். இப்போ என்னோட வாங்க” என்று அவர்கள் இருவரையும் அந்த தளத்திலேயே மற்றொரு பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

அது பிறந்த குழந்தைகள் ஐசியு. அங்கிருந்த மருத்துவரிடம் இவர்களை சுட்டிக் காட்டி டாக்டர் சிவகுமார் ஏதோ சொல்ல அவர் நர்ஸிடம் இருவருக்கும் ஐசியுவிற்குள் செல்ல கேப் மாஸ்க் தரும்படி பணித்தார்.

அங்கே இன்குபேட்டரில் குறை மாதத்தில் பிறந்த பெண் குழந்தை ஒன்று சுருண்டு கிடக்க கௌரியின் குழந்தை என்று டாக்டர் சொல்லவும் சொல்லவும் லக்ஷ்மி ராமசந்திரன் இருவரும் சொல்லவொண்ணா உணர்ச்சிச் சுழலில் மூழ்கினர்.

அவர்களை மீண்டும் தனது அறைக்கு அழைத்து வந்தார் டாக்டர் சிவகுமார்.

“இங்கே வந்த போது உடனடியாக சிசேரியன் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனாலும் அவரது இதயம் மிகவும் பலகீனமாக இருக்கவும் மிகவும் ஆபத்தான ஆபரேஷன் என்றே தெரிவித்தோம். அப்போதும் அவங்க ஹஸ்பன்ட் எப்படியாவது அவர் மனைவியை பிழைக்க செய்ய சொல்லி மன்றாடினார். ஆனா உங்க சிஸ்டர் குழந்தையை காப்பாற்றுவதற்கு முக்கியத்துவம் தர சொல்லி மன்றாடினாங்க. இரு உயிர்களையும் காப்பாற்றவே நாங்க பெரு முயற்சி செய்தோம்”

“டாக்டர் என் தங்கை பிழைத்து விடுவாள் தானே. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இன்னும் பெரிய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும்னாலும் சொல்லுங்க” ராமசந்திரன் பரிதவிப்புடன் கேட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.