(Reading time: 12 - 23 minutes)

21. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

ஜெல்லி மீன்கள், தட்டை புழுக்கள் போன்ற இன்னும் சில உயிரனங்களுக்கு இதயம் என்றொரு உறுப்பு கிடையாது

சுமித்ரா வர்ஷினியை அங்கிருந்த ஓர் அறைக்குள் அழைத்துச் சென்று நெடுநேரமாகியும் அந்த அறையின் அருகிலேயே குட்டிப் போட்டப் பூனை போல குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தான் கணேஷ் ராம்.

அங்கே வந்த ரவிசங்கர் மகனின் தவிப்பைக் கண்டு சிரிப்பை அடக்கிக் கொள்ள பெரும் பாடு பட்டார்.

“அப்பா உங்களுக்கு என்னை பார்த்தா காமடி பீஸ் போல இருக்கா” ராம் முறைத்தான்.

“நீ பிறக்கும் போது டெலிவரி ரூம் வாசலில் தான் என் வாழ்நாளிலேயே நான் டென்ஷனாக இருந்தது. வேறு எந்த சமயமும் உன் அம்மா இருக்கும் போது டென்ஷன் என்ற பேச்சுக்கே இடம் இல்லாம போச்சு. ஏன்னா உன் அம்மா எந்த வித சிக்கலான பிரச்சனைக்கும் சுலபமா தீர்வு கண்டு பிடிச்சிருவா. உன் அம்மா இருக்க நீ ஏன் கவலை படுற. வா போய் பங்க்ஷனை என்ஜாய் செய்வோம். உன் வருங்கால மச்சானை கொஞ்சம் கலாய்ப்போம்”

“அப்பா...நீங்க இருக்கீங்களே” தந்தையின் தோளில் செல்லமாய் அடித்து அவரை அணைத்துக் கொண்டான் கணேஷ் ராம்.

“நல்ல வேளை அம்மு உன்னை மாதிரி இல்லாம கலகலன்னு ஜாலியா இருக்கா. என் மருமகளும் நானும் கூட்டணி அமைச்சு உங்க அம்மா பையன் கூட்டணிக்கு சவால் விடுறோம் பாரு” ரவிசங்கர் சொல்ல கணேஷ் மிகவும் மகிழ்ந்து போனான்.

வாழ்க்கையில் மிகப் பெரிய ஆசீர்வாதம் நல்ல பெற்றோருக்கு மகனாய் மகளாய் மகிழ்ச்சியை நிறைவை தருவது.

அந்த வகையில் தான் எத்தனையோ பெருமைகளை தேடித் தந்தும் தன் பெற்றோருக்கு ஏதோ ஒரு குறை இருப்பது போலவே கணேஷ் எப்போதும் உணர்வான். இன்று தான் தன் பெற்றோர் இருவரிடமும் ஒரு நிறைவைக் கண்டான்.

அதற்கு காரணம் வர்ஷினி தான் என்பதையும் உணர்ந்தான்.

அதே நேரம் சுமித்ரா அங்கு வர்ஷினியிடம் அவளது பயத்திற்கு காரணத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“ராம் ரிசர்ச் செய்து சொன்னானா, எனக்கொண்ணும் புரியலையே” சுமித்ரா வர்ஷினியிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

வர்ஷினி அன்று அந்த பார்ட்டியில் கணேஷ் தனது ஆராய்ச்சி கட்டுரை குறித்து சொற்பொழிவு ஆற்றியதைக் கூறி அதில் இதய நோய் பரம்பரையாக வரும் என்று சொன்னதாக சுமித்ராவிடம் கூறினாள்.

மேலும் தான் கூகுள் செய்து பார்த்ததில் அது உண்மை தான் என்று கண்டறிந்ததாகவும் கூறினாள்.

சுமித்ரா மருத்துவர் என்பதால் மகனின் ஆராய்ச்சி கட்டுரைகள் அனைத்தையும் படிப்பார். வர்ஷினி குறிப்பிட்ட அந்த கட்டுரையை சுமித்ரா அறிந்தே இருந்தார்.

“ராம் அன்னிக்கு பேசினதை நீ முழுசா கேட்டியா அம்மு” சுமித்ரா வெகு இயல்பாக அம்மு என்றழைக்கவும் வர்ஷினி அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

“இல்லை அத்தை எனக்கு நிறைய புரியவும் இல்லை. ராம் பேசும் போது அந்த லைன் மட்டும் தெளிவா கேட்டுச்சா. எனக்கு என்னவோ பண்ணுச்சு. பயமா இருந்தது. அங்கிருந்து நான் உடனே கிளம்பிட்டேன்”

“நீ ஏன்மா ராம் கிட்ட கேட்டிருக்கலாம் இல்லையா. அவன் உனக்கு விளக்கமா சொல்லியிருப்பானே”

“இல்லை அத்தை ராம்க்கு என்னை ரொம்ப பிடிக்கும் அத்தை. அது என் அப்பாவுக்கும் என் அம்மாவை ரொம்ப பிடிக்குமாம். அதுனால தான் என் அம்மாவை நான் கொன்னுட்டேன்னு என்னை வெறுத்துட்டார்” வர்ஷினி கண்கள் கலங்கி விட்டிருந்தன.

சுமித்ரா ஓர் நொடியில் அவளது பயத்தின் முடிச்சினை அறிந்து கொண்டார்.

“அம்மு நீ ராம் சொன்னதை முழுசா கேக்கல. கேட்டிருந்தா இவ்வளவு குழப்பம் உனக்கு வந்திருக்காது”

“இல்ல அத்தை நான் கூகுள்ல கூட பார்த்தேன்னு சொன்னேனே”

“நான் கூட ராம்க்கு நீ கட்டின மாதிரியே ஹாஸ்பிடல் கட்டலாம்ன்னு இருக்கேன். எதுக்கு இஞ்சினியர் எல்லாம். கூகுள் பார்த்து கட்டிட்டா போச்சு”

“ஐயோ அத்தை ஹாஸ்பிடல் கட்டுவது அவ்வளவு ஈசி எல்லாம் இல்ல. நான் சின்ன வயசில் இருந்தே மாமா கூட சைட் எல்லாம் போவேன். அப்புறம் ஆர்கிடேக்ச்சர்ல கோல்ட் மெடல் வாங்கிருக்கேன். யுஎஸ் போய் ஸ்பெஷல் ப்ராஜக்ட் எல்லாம் செய்திருக்கேன். அதுக்கு அப்புறம் தான் நம்ம ஹாஸ்பிடல் கட்டினேன். அதெல்லாம் கூகுள் பார்த்து காட்ட முடியாது”

சுமித்ரா எதற்காக திடீரிய பேச்சை மாற்றி இவ்வாறு சொன்னார் என்று ஆலோசிக்காமலே வெகுளியாய் கூறினாள் வர்ஷினி.

சுமித்ராவிற்கோ வர்ஷினியை எண்ணி பெருமையாக இருந்தது. நம்ம ஹாஸ்பிடல் என்று அவள் கூறியது அவர் கவனத்தில் பட்டது. இருப்பினும் அவள் இன்னும் குழந்தையாகவே பல விஷயங்களில் இருக்கிறாள் என்றே உணர்ந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.