(Reading time: 4 - 8 minutes)

18. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

லகத்தில் மிகவும் கொடிய நிலை என்று ஒன்று உண்டா?... அது நிஜம் தானா?...

அப்படி அது உண்டு எனில், அது நாம் மனதார காதலிக்கும் ஒருவருக்கு நம்மைப் பற்றிய நினைவுகளோ, அல்லது நம்மையே தெரியாதிருப்பது தான் என்று சொன்னால், மறுப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?...

விரல்விட்டு எண்ணிவிடலாமா?... அதுவும் ஒரு தோராயமான மதிப்பீடே…

இருவருக்கும் வந்தால் காதல்… ஒருவருக்கு மட்டும் வந்தால் ஒருதலைக்காதல்… சிறுவயதிலேயே அறியாப்பருவத்திலேயே வந்திட்டால் அது அறியாக்காதல்… படித்து முடித்து வேலைக்கு செல்லும் வயதில் வந்தால் பக்குவக்காதல்… நடை தளர்ந்து இளமை தேய்ந்து நரை கூடிய காலத்தில் வந்தால் அது முதுமைக்காதல்…

இப்படி பல வகைகள் காதல் பார்த்த்துண்டு… ஏன் இன்றும் பார்த்துக்கொண்டே இருக்கிறது… எனினும், கோடியாக அதனை பிரித்து வகைப்படுத்திட்டாலும், காதல் என்றுமே காதல் தானே…

அது ஒருநாளும் ஒருநொடியும் மாறிடப்போவதில்லையே… அறியாப்பருவத்தில் காதலானது முளைத்திட்டாலும், பக்குவமடைந்த வயதில் அது மேலும் வலுவடைந்து, உடல் தளர்ந்து முதுமை எட்டிய தருணத்திலும் மனதின் ஓரம் வந்து அமர்ந்திடுமே… அந்தக் காதல் உள்ளத்தினை விட்டு நீங்கிடுமா?... அதனை மாற்றிட முடிந்திடுவதும் சாத்தியம் தானா?...

ஆயிரம் பக்குவம் நாம் அடைந்தாலும், காதலின் முன் அனைத்தையும் இழந்தவராகி சரணடையவைத்திடுகிறதே…

எங்கிருந்து உதிக்கிறது இக்காதல்?... விடை சொல்ல முடிந்திடுமா யாராலும்?...

அருவியில் நீர் எங்கிருந்து விழுகிறது என்று கேட்டால், என்ன சொல்லிட முடியும்?... மலை உச்சியிலிருந்து நீர் விழுகிறது என கூறலாம்… அந்த மலை உச்சிக்கு நீர் எப்படி சென்றது எனக் கேட்டால்?... விடை இருக்கிறதா நம்மிடம்?...

இப்படித்தான் உலகில் சில விஷயங்கள் உண்டு… அதில் இக்காதலும் சங்கமம் தான்…

விழிகள் பார்த்து, இதயத்தில் சங்கமிக்கும் இக்காதலின் பிறப்பிடம் விழி என்போமா?... அல்லது இதயம் என்போமா?...

காதலின் நுழைவாயிலினையும் இதுவரை யாரும் கண்டதில்லை என்பது தான் உண்மையும் கூட…

எனில் விழி பார்த்து காதல் வருகிறதென்றால், விழியில் ஒளியை தொலைத்தவர்களுக்கு காதல் எப்படி சாத்தியம்?...

கேள்வி வருகிறதல்லவா?... ஆம்… விழி பார்த்து தான் காதல் வருகிறதென்றால், எனில் உணர்வுகளுக்கு அங்கே எவ்விடம் கிடைத்திடும்?...

மனதின் முகமானது விழியில் பிரதிபலித்திட, அங்கே நேர்கிறது காதல்… அதே மனமானது விழியினில் பிரதிபலிக்க இயலா தருணத்தில் அந்த மனமே நேரே உணர்வுகளை பரிமாறிக்கொள்கிறது… அதுதான் காதலின் சூட்சமமும்…

எவ்வழியில் யாரை அடைய வேண்டும் என அதற்கு நன்றாகவே தெரியும்… அவ்வழியில் அது நம்மை அடைந்திட நாமும் அதன் விளையாட்டிற்குள் கைப்பாவையாய் மாறுகிறோம்…

இங்கே ப்ரசனும், இஷிதாவும் காதலின் கைப்பாவையாய் மாறிட, ப்ரசனுக்கு உடனேயே அது புரிந்து போனது… ஆனால் வாழ்வே பறிபோனதாய் இருக்கும் அவள் நிலைமை அவளுக்கு அதனை புரியவைத்திட மறுத்திட்டது…

அன்று பார்த்தேனே அது நீ தானா?... என அவள் வாய்விட்டே கேட்டிட, அவனது ஏக்கத்தினை விளக்கிடவா வேண்டும்?...

ஆம்… அவனின் ஏக்கம் மிகுந்த பார்வை அவளை எட்டிட, அவளின் விழிகள் கூர்மையாகியது…

அதனை அவனும் இனம் கண்டு கொண்டானோ, சட்டென தன் காதலை விழிகளிலிருந்து மறைத்தவன், சாதாரணமாக அவளைப் பார்த்தான்…

“ஆமா… அது நான் தான்… ஒருநாள் அதுவும் சில நொடி கூட பார்த்திருக்க மாட்டோம்… என் முகம் உங்களுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை தான்…”

அவன் லேசான புன்னகையுடன் கூற, அவள் எதுவுமே பேசிடவில்லை…

“சரி வாங்க…” என அவன் அழைத்திட, சற்று நேரம் யோசித்தவள், அவனுடன் சென்றாள் பதில் பேசாமல்…

நீண்ட அமைதி காரினுள் நிலவ, அதனைக் கலைத்திடுவது போல் வந்திட்டது அந்நேரத்தில் ஓர் அழைப்பு..

போனை எடுத்து “ஹலோ…” சொன்னவனுக்குள், பல உணர்வுகள் அலைஅலையாய் மோதிட, அதனை அவன் முகமும் பிரதிபலித்திட்டதோ???… அவளும் அதனை பார்த்திட்டாளோ!!!…

“இப்பவே வரேன்ம்மா…” அவன் குரல் நடுங்கிட்டதோ…

“எதும் பிரச்சினையா?...” தடுமாறி எழுந்திட்டது அவளது குரலும் அவனது நிலையினைப் பார்த்தபடி…

எழில் பூக்கும்...!

Episode # 17

Episode # 19

{kunena_discuss:1122}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.