(Reading time: 14 - 27 minutes)

எல்லோருக்கும் பயப்பட வேண்டியிருக்கிறதே என்று தன்னைத்தானே நொந்துகொண்டான் ஹகீம். அவன் வர வேண்டிய இடத்திற்கு எப்படியோ வந்து சேர்ந்தாகி விட்டது. நேரம் சரியாக ஆறு இருபது. 'இன்னும் தன் உயிர் போக நாற்பது நிமிடங்களே உள்ளன. அதுவரை என்ன செய்வது? உடல் வேறு வலிக்கிறது'.

சாலையின் ஓரத்தில் அமர்ந்தான் ஹகீம். சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஹகீம் வேதனையோடு அவர்களை நோக்கிக்கொண்டிருந்தான். இதற்கு முன் இப்படி அமர்ந்து மக்களை அவன் பார்த்ததில்லை. தினமும் உழைத்து, வேகமாய் வீடு வந்து சேர்வது தான் அவனுக்கு தெரிந்தவரை ஒரே குறிக்கோள். எப்பொழுது தீவிரவாதிகளோடு கூட்டுசேர்ந்தானோ அதிலிருந்து அவன் நிம்மதி பறிபோய்விட்டது. சோர்வாக தன் தலையைத் தேய்த்துக்கொண்டான் ஹகீம்.

"தம்பி"

தலையை நிமிர்த்தினான்.

"தண்ணீர் குடிக்குறியா?" என்றார் அந்த பெரியவர். அவர் உடல் நரம்பதிர்வால் லேசாக ஆட்டம் கண்டது.  

ஹகீம் அவரை புதிராக பார்த்தான்.  

"ரொம்ப தூரம் அலைஞ்ச மாதிரி பரிதாபமா இருக்கியே. அதான் தண்ணீர் குடிக்குறியான்னு கேட்டேன்"

"வேணாம்"

"கொஞ்சம் குடி. உனக்கு அதிகமா மூச்சு வாங்குது"

'இந்த நேரத்துல இந்த பெரியவர் வேற' என நொந்துகொண்டே குடுவையை வாங்கி தொண்டையை நனைத்தான் ஹகீம்.

பெரியவர் அவன் அருகில் அமர்ந்தார். "நீ எந்த ஊருப்பா?"

ஹகீம் அமைதியாக இருந்தான்.

"எங்கிருந்து வர?"

வேண்டா வெறுப்போடு தனது ஊரை சொன்னான் ஹகீம்.

"இங்க எதுக்கு உட்கார்ந்துட்டு இருக்க?"

"எதுக்கோ இருக்கேன். தொண தொணன்னு பேசிட்டு இருக்காதிங்க"

"ரொம்ப கோவக்காரனா இருக்க"

ஹகீம் பதில் கூறவில்லை.

"எனக்கும் சின்ன வயசுல இருந்தே ரொம்ப கோவம் வரும். ஆனா இப்போ கோவம்னா என்னன்னே தெரியல. என் வயசு வந்தா உனக்கும் புரியும்"

"அதுவரைக்கும் நான் இருக்க மாட்டேன்"

"அதை நீ முடிவு செஞ்சா எப்படி?.அல்லா தானே முடிவு செய்யணும்"

"தாத்தா உங்க கிட்ட ஒண்ணு கேக்கலாமா?"

"என்ன?"

"மறுமைன்னு ஒண்ணு இருக்கா?"

பெரியவர் சிரித்தார். தனது நீண்ட வெண்ணிற தாடியை தடவியபடி ஹகீமிடம் எதையோ கூற விழையும் நேரத்தில், "தாத்தா எனக்கொரு பொம்மை வேணும்" என்றது ஒரு குழந்தை.

"இதோ வரேன்மா" என்று தள்ளாடி எழுந்து, அந்த பெரியவர் குழந்தை கேட்ட  சிறிய பொம்மையை எடுத்து கொடுத்து பணத்தை பெற்றுக்கொண்டார்.

மீண்டும் ஹகீமின் அருகில் அமர்ந்த பெரியவர், "என்ன கேட்ட தம்பி? மறுமை பத்தி தான?"

"ஆமா"

"முதல்ல மறுமையை பத்தி நீ என்ன தெரிஞ்சு வச்சிருக்க அதை சொல்லு"

ஹகீம் விழித்தான். "நான் என்ன சொல்லுறது? எதிரிகளை அழிக்க யாரெல்லாம் உயிரை கொடுக்குறாங்களோ அவங்க தான் மறுமையை அடைய முடியும்"

அந்த பதில் பெரியவரை திகைப்படைய வைத்தது.  

"உயிரை எடுத்தா மறுமையை அடைய முடியுமா? இல்லப்பா. உதவி செய்யணும், அன்பை கொடுக்கணும், சுத்தமான மனசு இருக்கனும். பாவமே செஞ்சிருக்ககூடாது. இதெல்லாம் தான் மறுமைக்கு போறதுக்கான வழி"

ஹகீம் அதிர்ந்தான். 'தீவிரவாதிகள் சொன்னதற்கும் இவர் சொல்வதற்கும் மலையளவு வித்தியாசமிருக்கிறது'

குண்டு வெடிப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது.ஹகீமிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுற்றி திரியும் மக்களை நோக்கினான். 'எதற்காக இவர்கள் தன்னுடன் சாக வேண்டும்? முதலில் நான் எதற்கு சாக வேண்டும்? இதிலிருந்து தப்பிப்பதற்கு வழியே கிடையாதா!'

ஹகீம் சுற்றும் முற்றும் நோக்கி அதிர்ச்சி அடைந்தான். தூரத்தில் நின்றிருந்த தீவிரவாதிகளில் ஒருவன் ஹகீமை கண்காணித்துக் கொண்டிருந்தான்.

இனி வேறு வழியில்லை. பஹீராவை மனதில் நிறுத்தி அவளிடம் மன்னிப்பு கோரினான். பிறகு தான் செய்யும் தீங்கிற்கு கடவுளிடம் பிரார்த்தனை செய்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு கையில் வைத்திருந்த ரிமோட்டை அழுத்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.