(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 17 - மீரா ராம்

thaaba poovum naan thaane... poovin thagam nee thaane

காரை ஓட்டிக்கொண்டிருந்த கௌஷிக்கின் எண்ணங்கள் நில்லாமல் ஓடிட, அவனால் சாலையில் கவனம் பதித்திட இயலவில்லை கொஞ்சமும்…

திரும்ப திரும்ப மனமானது அந்த ஓரிடத்திலேயே வந்து நிற்க, அவனுக்கு கோபம் தலைக்கேறியது வெகுவாகவே…

காரினை சாலையின் ஓரமாக நிறுத்துவிட்டு, மூச்சை அழுந்த இழுத்து வெளிவிட்டபடி கண்களை அவன் திறக்க, சற்று முன் நிகழ்ந்திட்ட நிகழ்வு அவனது நினைவலையில் வந்து தஞ்சம் புகுந்திட்டது…

தீபனைத் தேடி அவன் வீட்டிற்கே கௌஷிக் செல்ல, அங்கே திறந்திருந்த வாசல் ஓரத்தில் இருந்திட்ட அழைப்பு மணியை அவன் அழுத்த நினைக்கையில் கேட்டது அந்த சத்தம்…

“ஸ்டாப் இட் தீபா…”

என்ற சாருவின் பயங்கர சத்தம் அவன் செவிகளை எட்டிட, அழைப்பு மணியினை அழுத்த நினைத்தவன், அதிலிருந்து கைகளை எடுத்திட்டான் மெல்ல…

இருவருக்கும் எதோ வாக்குவாதம் என அறிந்து கொண்டவன், அங்கிருந்து செல்ல நினைக்கையில் தான், “செத்துடுவேன்…” என்றாள் அவள்…

நடக்க நினைத்த அவனது கால்கள் அப்படியே தரையில் பதியாமல் நிற்க, அவனுக்கு அவள் சொல்லிவிட்ட வார்த்தையின் தாக்கம் வலித்தது என்றே கூறலாம்…

“அவங்க யாரு நமக்கு?...” என தீபன் சாருவிடம் வினவுகையில், “அம்மா…….” என சொல்ல அவள் பட்ட கஷ்டத்தையும் உணர்ந்தவன், தீபனின் தெளிவான விளக்கத்தையும் உள்வாங்கிக்கொண்டு அவள் சொன்ன அந்த ஒற்றை வார்த்தையினையே யோசித்தவனாய் அந்த வீட்டை விட்டு வெளியேறினான் கௌஷிக்…

ஆயிரம் பிரச்சினைகள் இருக்கட்டுமே, அதற்காக, அப்படி ஓர் வார்த்தையை சொல்லலாமா?...

அவன் மனம் முரண்டு பிடிக்கையிலேயே, புத்தியோ, தீபனிடம் அவ்வாறு பேசாவிட்டால் அவனை சரி செய்ய முடியாதென்றே உரைக்கவும் செய்ய, அவன் அவளை அப்பிரச்சினையிலிருந்து விடுபட வைக்க உதவ வேண்டும் என்றெண்ணினான்…

எண்ணிய மாத்திரமே, அவளது “அம்மா…..” என்ற குரல் அவன் செவிகளில் விழ, அவனது எண்ணத்தை அது பின்னுக்கு தள்ளியது சட்டென…

இருவேறு எண்ணங்களுக்குள் ஆட்பட்டவனாய் அவன் வீடு வந்து சேர்கையில், அவன் வருகைக்காக காத்திருந்தார் கல்யாணி…

தாயைப் பார்த்ததும் புன்னகைத்தவனிடம், “தீபன் கிட்ட பேசினியாப்பா?...” என கலக்கத்துடன் கேட்டார் அவர்…

“இல்லை…” என தலையசைத்தவனது செய்கையே, அவரது கலக்கத்தைப் போக்கிற்று அக்கணமே….

“கண்ணா… நான் பயந்தே போயிட்டேன்ப்பா… நல்லவேளை…”

அவர் சொல்லிக்கொண்டே மூச்சை இழுத்து வெளியேவிட, அவன் அவரின் முகத்தையே நின்று நிதானமாக பார்த்தான் ஒருமுறை…

“கண்ணா?... என்னப்பா?...”

“எல்லாமே உங்களாலன்னு பழியை தூக்கி உங்க மேல போட்டுக்கிட்டீங்களே… ஆனா அது அத்தனையும் என்னால தானம்மா?..”

அவன் சட்டென்று குரல் மாறாமல் கேட்டிட, கல்யாணியின் முகத்திலோ உணர்ச்சிகளின் பிரவாகம் நிறைந்திருந்தது…

“என்னை மன்னிச்சிடுங்கம்மா…” அவன் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டிட,

சட்டென்று அவனது கரங்களைப் பிடித்துக்கொண்டார் அவர்..

“கண்ணா… என்ன காரியம் செய்யுறப்பா நீ?... நீ என்ன தப்பு பண்ணின உன்னை நான் மன்னிக்கிறதுக்கு?... எல்லா தப்பும் செஞ்சது நான் தான்….”

அவர் குரல் கம்ம பேச, அவன் அவரின் விழிகளையே ஆதங்கத்துடன் பார்த்திட, அவர் தொடர்ந்தார்…

“என்னால தான் உனக்கு எதுவுமே கிடைக்காம போச்சு… இப்பவும் கிடைக்காம போயிட்டிருக்கு….”

அவர் எதனை சொல்கிறார் என உணர்ந்தவனாய், அவனின் பிடியை தளர்த்தியவன்,

“என்னம்மா கிடைக்கலை… எனக்கு?... எல்லாமே கிடைச்சிருக்கு…. உங்களையும் சேர்த்து… இதுக்கும் மேல எனக்கு என்னம்மா வேணும்?...” என தன்மையாய் கேட்டிட, அவர் அவனின் முகம் பார்த்திட்டார்…

“சாதிக்கணுங்கிற ஆசையை எனக்குள்ள விதைச்சது நீங்க… இன்னைக்கு இந்த சமூகத்துல எனக்குன்னு ஒரு அடையாளம் இருக்குன்னா, அதுக்கு காரணமும் நீங்க… எனக்கு எப்பவும் என்னைக்கும் நீங்க மட்டும் என்னோட இருந்தா போதும்மா… நான் சந்தோஷமா இருப்பேன்…”

“உங்க மகன் என்ற உரிமையில நான் கேட்குறதெல்லாம் இந்த ஒன்னு தான்… யார் எங்கூட இருந்தாலும், இல்லைன்னாலும், நீங்க என்னோட இருக்கணும் நான் சாகுற வரைக்கும்… இருப்பீங்களாம்மா?...”

அவன் கண்களில் தெரிந்திட்ட பரிதவிப்பும், குரலில் தெரிந்திட்ட கவலை கலந்த கெஞ்சலும், அவருக்கு புரிந்த மாத்திரத்தில்,

“கண்ணா….” என்றழைத்தபடி மகனை அணைத்துக்கொண்டார் அவர் வாஞ்சையுடன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.