(Reading time: 23 - 45 minutes)

துஷ்யந்த் மீட்டிங்கை முடித்துவிட்டு மகிழ்ச்சியான மனநிலையில் வீடு நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்தான். போகும் போது மிகவும் பதட்டத்தோடு போனான். தன்னால் இந்த மீட்டிங்கில் பேச முடியுமா? என்றெல்லாம் யோசித்திருந்தான். உடன் சென்ற சூப்பர்வைசரும் ஐடியா கொடுக்கிறேன் என்ற பேரில் குழப்பினான்.

துஷ்யந்தின் தந்தை இருந்தவரைக்கும் இந்த எஸ்டேட்டில் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. ஆனால் அவர் காலத்திற்கு பின் துஷ்யந்து பொறுப்பேற்று கொண்ட பின், சென்னையில் உள்ள தொழிலில் தான் தன் கவனத்தை செலுத்தினான். அதிலும் நிறையவே சொதப்பி இருந்தான். இதில் குன்னூர் எஸ்டேட்டில் அவன் கவனம் செல்லவில்லை. அண்ணாமலையும் இங்கே வந்தால், அனைவரையும் அதட்டி உருட்டி வேலை வாங்குவது, கட்சி பிரச்சனையில் கட்ட பஞ்சாயத்து, மாலை ஆனால் மதுப்பழக்கம் இப்படி தான் காலத்தை ஓட்டுவார்.

அதனால் எஸ்டேட்டில் வேலை செய்யும் தொழிலாளிகள் அதிருப்தியோடு இருந்தனர். இதில் துஷ்யந்த் இங்கு வந்திருப்பதை பற்றி அரசல் புரசலாக கேள்விப்படவும் அவர்கள் யூனியனில் தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தினர்.

நீதிமன்றத்தில் சொத்து குறித்தி கேஸ் நடப்பதால், எந்த ஒரு சொத்தையும் விற்கவோ, அடமானம் வைக்கவோ மட்டும் தான் தடையே தவிர, அதில் வரும் லாபம் நஷ்டமெல்லாம் இப்போதைக்கு இவர்கள் தான் ஏற்க வேண்டும்.. இனியாவது இந்த எஸ்டேட்டில் கவனம் செலுத்தினால், நிறையவே லாபம் பார்க்கலாம்.. அந்த லாபத்தை முன்னிறுத்தி மற்ற தொழில்களையும் பண சிக்கல் இல்லாமல் பார்க்கலாம் என்றெல்லாம் துஷ்யந்த் யோசித்து வைத்திருந்தான். கங்காவிடமும் இதைப்பற்றி கூறியிருக்கிறான். அவளும் அவனுக்கு நிறையவே ஊக்கம் கொடுத்தாள்.

இருந்தும் மீட்டிங்கில் இதைப்பற்றி பேச மிகவுமே யோசனையாக இருந்தது. தன்னால் முடியுமா? என்ற தயக்கம் அதிகமாகவே வந்தது. இருந்தும் ஒரு முறை மூச்சை இழுத்துவிட்டவன், கண்களை மூடி கங்காவை கண்ணுக்குள் கொண்டு வந்தான். புது தைரியம் பிறந்தது. எதையும் மிகுதியாகவோ குறையாகவோ சொல்லாமல், தங்களின் இப்போதைய நிலவரத்தை உள்ளது உள்ளப்படியே சொன்னவன், எதிர்கால திட்டத்தையும் விளக்கி, அதில் தொழிலாளர்களின் தேவை எவ்வளவு முக்கியம் என்பதை புரிய வைத்தவன், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கால அவகாசம் கேட்டான். அதில்லாமல் வீடு கட்டிக் கொடுப்பது, தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பு, மருத்துவ வசதி இப்படியான சலுகைகள் கொடுக்கும் திட்டங்களை பற்றியும் கூறினான்.

துஷ்யந்த் பேசியதில் ஓரளவுக்கு தொழிலாளர்களுக்கு திருப்தி ஏற்பட்டது. அவர்களும் அவனுக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறினார்கள். துஷ்யந்தின் செய்கைகள் அவன் தந்தையை ஞாபகப்படுத்தியதால் தான் அவனது பேச்சுக்கு இறங்கி வந்தார்கள். இருத்தரப்பிலும் சமாதானம் ஆனதும் தான் சொன்ன விஷயங்களை எழுத்து மூலமாக எழுதி அதில் கையொப்பமும் இட்டான்.

இதையெல்லாம் கங்காவிடம் கூறி அவளை தூக்கி தட்டாமலை சுற்ற வேண்டும். அதன்பிறகு கங்காவை தன்னுடனே வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ? அதைப்பற்றி மாமாவிடம் பேசவேண்டும் என்றெல்லாம் முடிவு செய்துக் கொண்டான்.

ஆனால் எஸ்டேட் பங்களாவை அடைந்த போது கங்கா அவனை விட்டு சென்றுவிட்டாள் என்ற செய்தி அவன் தலையில் இடியை இறக்கியது. வந்த வேலை முடிந்தது, என்னை செட்டில் பண்ணி அனுப்புங்கன்னு அவள் அவசரப்படுத்தினாள். நீ வரும்வரைக்கு கூட அவளுக்கு பொறுமையில்லை. அடுத்து புதுசா கஸ்டமரை பிடித்துவிட்டாளோ என்னவோ என்று அண்ணாமலை கங்காவை மிகவும் கேவலமாக பேசினார்.

முதல்முறை அண்ணாமலை அப்படி பேசும்போது துஷ்யந்த் அதிர்ச்சியிலும் குழப்பதிலும் இருந்தான். ஆனாலும் இரண்டு நாட்களாக யோசித்ததில் கங்காவை அவனால் தவறாகவே நினைக்க முடியவில்லை. இரண்டு பேருக்கும் இந்த மூன்று மாதமாக கணவன் மனைவிக்கான உறவு உள்ளது. ஆனாலும் இவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அதே அறையில் அவள் உடை மாற்றும் போது அவன் விழித்துக் கொண்டால், அப்படியே துணிகளை சுருட்டிக் கொண்டு குளியலறைக்கு ஓடுவாள். அவன் முன் துணி மாற்ற கூச்சப்படுபவள், பல ஆண்களோடு பழக்கம் வைத்தவளாக இருப்பாளா? துஷ்யந்தால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

கங்காவிற்கு ஏதோ நிர்பந்தம், அதை பயன்படுத்தி மாமா அவளை இங்கே அழைத்து வந்திருக்கிறார். இப்போது அவன் கங்காவை விட்டு விலக வேண்டும் என்பதற்காக என்னன்னவோ சொல்கிறார். அவன் அவ்வளவு சீக்கிரம் கங்காவை விட்டுவிட மாட்டான் என்பதை அவர் அறிந்ததால் தான், அவனை அங்கே மீட்டிங்கிற்கு அனுப்பி விட்டு, இங்கே கங்காவை அவன் வருவதற்குள் அனுப்பி வைத்திருக்கிறார் என்பதை தெளிவாகவே புரிந்துக் கொண்டவன் உடனே கங்காவை பார்க்க நினைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.