(Reading time: 23 - 45 minutes)

மாலை முடிந்து இருள் ஆரம்பித்திருந்தது. அண்ணாமலை வழக்கத்திற்கு முன்பாகவே மது அருந்த ஆரம்பித்துவிட்டார். நினைத்ததை வெற்றிக்கரமாக செய்துவிட்ட சந்தோஷமே காரணம். மேனேஜரும் கங்காவை பற்றி எஸ்டேட் ஓனரிடம் சொல்லிவிட்டு, கனகாவின் மருமகளை கைகாட்டி விட்டதால், எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டால், அதில் தனக்கு கிடைக்கும் லாபத்தை நினைத்து மகிழ்ந்தவன், அவனும் மது அருந்த ஆரம்பித்திருந்தான். வேண்டா வெறுப்பாக அவர்களுக்கு பதார்த்தங்களை கொடுத்துவிட்டு வந்த வாணி கங்காவை பற்றிய கவலையில் மூழ்கியிருந்தார்.

அப்போது வாணியை தேடி வந்த துஷ்யந்த், அவரிடம் கங்காவை உடனே பார்க்க வேண்டும் என்று கூறி, அவளின் இருப்பிடத்திற்கு அழைத்து போகச் சொன்னான்.

“தம்பி விளையாட்றீங்களா? உங்க மாமாவுக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சா அவ்வளவு தான், என்னை உண்டு இல்லன்னு செஞ்சுடுவார். அதெல்லாம் வேணாம் தம்பி..”

“அக்கா அதான் நான் இருக்கேன் இல்ல.. இங்க பாருங்க மாமாவை நினைச்சு பயப்பாடாதீங்க.. அவர் இப்போதைக்கு ரூமை விட்டு வரமாட்டார். எனக்கு உடனே கங்காவை பார்த்து பேசனும், ப்ளீஸ் என்னை கூட்டிட்டு போங்க.. என்ன பிரச்சனை வந்தாலும், நான் பார்த்துக்கிறேன்..” என்று கெஞ்சினான். அதற்கு மேல வாணியால் மறுக்க முடியவில்லை. கங்காவை பற்றிய உண்மையை தான் தன்னால் சொல்ல முடியாது.. வேறு வகையிலாவது கங்காவிற்கு ஏதாவது உதவி செய்யலாம் என்ற எண்ணத்தில் கங்கா வீட்டிற்கு துஷ்யந்தோடு செல்ல முடிவெடுத்தார்.

கனகா வீட்டு வாசலிலேயே குட்டி போட்ட பூனை போல நடமாடிக் கொண்டிருந்தார். எஸ்டேட் ஓனரின் ஆட்கள் வருவதற்காக காத்திருந்தார். அவர்கள் இருக்கும் இடம் வரை கார் வர வாய்ப்பில்லை. மற்ற வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் எப்படி கங்காவை அழைத்து செல்வார்கள் என்ற கேள்வியோடு அவர்களின் வரவை எதிர்பார்த்தப்படி காத்திருந்தார்.

கங்கா வீடு இருக்கும் பகுதிக்கு வந்ததும் அங்கே கார் நுழைய முடியாததால், காரை நிறுத்திய துஷ்யந்தும் வாணியும் நேராக வீடு நோக்கிச் சென்றனர். ஆள் அரவம் உணர்ந்து தான் எதிர்பார்த்த நபர்கள் வந்துவிட்டார்கள் போல் என்று கனகா பார்க்க, அங்கே வந்த இருவரையும் பார்த்து ஒரு நொடி அதிர்ந்து விட்டார். பின் சுதாரித்துக் கொண்டவர்,

“எதுக்காக வந்திருக்கீங்க?” என்று இருவரிடமும் ஒரு அதட்டலோடு கேட்டார்.

“கங்காவை பார்க்கனும்..” துஷ்யந்த் சொன்னதும்,

“கங்கா இங்க இல்ல” என்றார்.

“கங்கா வீட்டுக்கு தான வந்தா.. அவ எங்கன்னு சொல்லுங்க.. நான் உடனே கங்காவை பார்க்கனும்..”

“எனக்கு தெரியாதுங்க.. வந்தவ தன்னோட தங்கச்சியை கூட்டிக்கிட்டு போயிட்டா.. இனி இந்த ஊர்ல இருக்கமாட்டேன்னு சொல்லிட்டா..” என்ற கனகாவின் பேச்சில் இருவரும் அதிர்ந்தார்கள்.

“என்ன சொல்றீங்க கங்கா எங்க போனா.. எந்த ஊருன்னு ஏதாச்சும் சொன்னாளா.. சீக்கிரம் சொல்லுங்க..” என்று பரபரத்தான்.

“ இங்கப்பாருங்க அதான் எனக்கு தெரியாதுன்னு சொல்றேன் இல்ல.. அவ இங்க இல்ல அவ்வளவு தான் சொல்ல முடியும்..” என்றவர், அவர்கள் சீக்கிரம் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டார்.

என்னவோ கங்கா இங்கே அவனுக்கு அருகில் இருப்பது போல் துஷ்யந்திற்கு தோன்றியது. அவளுக்கு ஏதோ பிரச்சனை போல் உள் மனது சொல்லியது. இதில் கனகா சொன்னதை உண்மையென்று நம்பிய வாணியோ, “கங்கா ஊரை விட்டு போயிட்டாளா? எங்க போய் என்ன கஷ்டப்பட்றாளோ என்று வேதனைப்பட்டவர்,

“ தம்பி அதான் கங்கா இங்க இல்லையே.. இதுக்கு மேல இங்க எதுக்கு நிக்கனும் வாங்க” என்று அவனை அழைக்க, அவன் தயங்கியப்படியே அங்கே நிற்கும் போது தான், வீட்டின் உள்ளே ஏதோ விழும் சத்தம் கேட்டு அப்போதைக்கு அங்கிருந்த ஜன்னலை திறந்து பார்த்தான். அதில் தெரிந்த காட்சியில் அவன் மூச்சே நின்று போனது போல் இருந்தது. அங்கே அந்த அறையில் கங்காவை தாங்கியிருந்த ஸ்டூல் கீழே விழ, கங்கா கயிற்றில் தொங்கியப்படி காலை உதைத்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.

“கங்கா..” என்று கத்தியவனுக்கு அடுத்த நொடி எப்படி தான் உடலில் வலிமை வந்ததோ, வீட்டு வாசலை அடைந்தவன், கனகா சாத்திய கதவை ஒரே உதையில் உடைத்தான்..  அடுத்து கனகா தடுத்தும் அவரை தள்ளிவிட்டு கங்கா இருந்த அறையையும் உடைத்தவன், நேராக சென்று கங்காவின் கால்களை பிடித்துக் கொண்டான். அதற்குள் வாணியும் அந்த காட்சியை பார்த்துவிட்டு துஷ்யந்தின் பின்னாலேயே வந்தவர், கங்காவை பிடித்துக் கொள்ள, கீழே சாய்ந்திருந்த ஸ்டூலை நிமிர்த்தி அதன் மேல ஏறியவன், கங்காவின் கழுத்துக்கு கயிற்றிலிருந்து விடுதலை கொடுத்தான். அதற்கு அவள் தலை தொங்கியது. அதை பார்த்து ஒரு நொடி உறைந்து போனாலும் அடுத்த நொடியே அவளை தூக்கியவன் கார் நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு விரைந்தான்.

கனகாவோ முற்றிலும் அதிர்ச்சியில் உறைந்து போனார். தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொண்டதாக பயந்தார்.

கங்காவை தாங்கிக் கொண்டு வாணி பின் சீட்டில் இருக்க, எவ்வளவு வேகம் எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக துஷ்யந்த் வண்டியை இயக்கினான். “கங்கா எனக்காகவே கடவுள் உன்னை அனுப்பி வச்சிருக்காரு.. என் வாழ்க்கையில் எனக்கு கிடைச்ச வரம் கங்கா நீ.. உனக்கு ஒன்னும் ஆகாது.. உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்.. அப்படி ஏதாச்சும் ஆனா அதுக்குப்பிறகு நான் உயிரோட இருக்க மாட்டேன்.. கடவுள் நிச்சயமா என்னை கைவிட மாட்டார்.. எனக்காகவாவது உன்னை மீட்டுக் கொடுத்திடுவாரு..” என்று புலம்பியப்படியே துஷ்யந்த் காரை ஓட்டினான்.

 

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 38

Episode # 40

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.