(Reading time: 23 - 45 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 25 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

ஐந்து வருடத்திற்கு முன்பு

ன்று சாத்விக்கோடு பேசிக் கொண்டிருந்ததை பார்த்து யாதவியை ரத்னா அடித்து இழுத்து வந்ததோடு சரி, அதன்பின் யாதவி சாத்விக்கை பார்க்கவேயில்லை, அடுத்த ஐந்து நாட்கள் செமஸ்டர் தேர்வுக்கு படிப்பதற்காக விடுமுறை விட்டிருந்ததால் ரத்னா அவளை வெளியில் அனுப்பவில்லை, அடுத்து கல்லூரிக்கு வரும்போது அவனை பார்க்க முடியவில்லை, எப்போதும் கல்லூரிக்கு வரும்போதோ இல்லை கல்லூரி முடிந்து வெளியே வரும்போதோ அவளுக்காக காத்திருப்பவன், இப்போதெல்லாம் வராததால் யாதவி அவனை தேட ஆரம்பித்தாள்.

ரத்னா அடித்ததெல்லாம் அவளுக்கு பெரிய விஷயமே இல்லை, அவரால் ஏற்றுக் கொள்ள முடியாத தவறை யாதவி செய்யும்போது அடி பின்னியெடுத்துவிட்டு, பின்னர் அந்த வருத்தத்தில் அழுபவர், பின் அவளை கொஞ்சி பேசி சமாதானப்படுத்திவிடுவார்.

சாத்விக் விஷயத்திலும் அதுதான் நடந்தது. ஆயிரம் அறிவுரைகள் கூறி, இனி அவனை சந்திக்க வேண்டாம் என்று சொல்லி, பின் அடித்ததற்கு ரத்னா அவளிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டார். அதனால் வழக்கம் போல் அவரின் அறிவுரைகளை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டவள் சாத்விக்கை அதிகம் எதிர்பார்த்தாள்.

அவள் மனதில் எந்த சலனமுமில்லை, ஒருவேளை சாத்விக்கை காதலித்து அவனை தன் அன்னைக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக சந்திக்க வேண்டிய நிலை இருந்தால் மனதில் கள்ளத்தனம் வந்திருக்குமோ என்னவோ? ஆனால் சாத்விக்கோடு இத்தனை நாள் பழகிய வரை அவன் மேல் காதல் வந்ததா? என்றுக் கேட்டால், அவளிடம் பதில் இருக்காது. அதனால் தன் அன்னை கண்டித்தும் திரும்ப சாத்விக்கை பார்ப்பதில் அவளுக்கு தவறு இருப்பதாக தெரியவில்லை,  ஆனால் அவளை குழப்பவே அவளின் தோழிகள் கூட்டம் இருந்தது.

“என்னடி சாத்விக் இப்போல்லாம் உன்னை பார்க்கவே வருவதில்லை..” என்று ஒரு தோழி கேட்க,

“சாத்விக் அடுத்த பட டிஸ்கஷனுக்காக தான் இங்க வந்ததே, சும்மா டைம் பாஸ்க்கு யாதவி கூட சுத்திக்கிட்டு இருந்தான்.. இப்போ அவனோட வேலையை பார்க்க வேணாமா? அதான் போயிட்டான்..” என்று இன்னொரு தோழி சர்வ சாதாரணமாக கூறினாள்.

“ஹே அப்போ உனக்கும் சாத்விக்கிற்கும் நடுவுல ஒன்னுமே இல்லையாடி.. நான் கூட ஏதோ இருக்குன்னு நினைச்சேன்..” என்று ஒரு தோழி கூற,

“ஏதோன்னா என்னடி? காதலா? ஹே சாத்விக் சினிமா ஹீரோ, சாதாரண பணக்கார பசங்களே நம்ம மாதிரி பொண்ணுங்க கூடல்லாம் டைம் பாஸ்க்கு தான் பழகுவாங்க.. இதுல சாத்விக்ல்லாம் யாதவி போல சாதாரண பொண்ணை காதலிப்பானா? ஏதாச்சும் தெரிஞ்சு பேசுங்கடி.. ஏதோ ஜகதீஷ் போல ஆளுங்க மட்டும் தான் இவ பின்னாடி சுத்த முடியும், சாத்விக்கெல்லாம் சான்ஸே இல்லை..” என்று மனதிற்குள் இருந்த வன்மத்தை தீர்த்துக் கொள்ளவே சக்தி பேசினாள்.

“இல்லடி.. அன்னைக்கு நம்மளையெல்லாம் பார்க்க சாத்விக்  வந்தப்போ அவனோட கண்ணை பார்த்தேன் டீ.. அவன் யாதவியை பார்க்கும் போதெல்லாம் அவனோட கண்ணுல அப்படியே காதல் வழிஞ்சது தெரியுமா?” என்று அந்த தோழி சொல்ல,

“அப்போ இப்போ ரிலீஸாயிருக்க படத்தில் சாத்விக் அந்த ஹீரோயினை என்னம்மா உருகி உருகி காதலிக்கிறன்.. பார்வையிலேயே காதல் வழியுதே, அப்போ அது உண்மையா? அது நடிப்பு தானே, சாத்விக் ஒரு ஆக்டர், அவனுக்கு காதல் பார்வை பார்க்க கத்துக் கொடுக்கணுமா என்ன? கொஞ்ச நாள் யாதவியோட சுத்திட்டு, சான்ஸ் கிடைச்சா மேட்டரை முடிச்சிட்டு போலாம்னு பார்த்திருப்பான்.. அதுக்கு சான்ஸ் கிடைக்காம போகவே எஸ்கேப் தான்..” என்று சக்தி மீண்டும் சொல்ல,

“அய்யோ யாதவி சாத்விக் உன்னை காதலிச்சா என்னையே காதலிச்சது போலன்னு நினைச்சேனே.. இப்படி ஏமாத்தி போயிட்டானே.. ஐயஹோ..” என்று அந்த தோழி பழைய கதாநாயகிகள் போல ஆக்‌ஷனோடு பேசவும், அங்கே எல்லோரும் சிரித்தனர். ஆனால் யாதவி மனதில் தேவையில்லாத சலனத்தை ஏற்படுத்தியதை அவர்கள் அறியவில்லை.

இத்தனை நாட்கள் அவனோடு பழகிய போது எதுவும் இப்படியெல்லாம் அவள் யோசித்து பார்த்ததில்லை, இப்போதோ சாத்விக் தன்னை காதலித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்க்கும் போதே அவளது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அன்று அந்த பண்ணை வீட்டில் அவனை யாரென்று தெரியாமல் எதைச்சையாக தான் பேசினாள். ஆனால் அதன்பின் அவளை தேடி வந்தது சாத்விக் தானே, மனதில் ஒன்றும் இல்லாமலா காண வந்திருப்பான்? ஆனால் இப்போது திடிரென காணாமல் போய்விட்டானே, அப்போது சக்தி சொன்னது போல் பொழுது போக்கிற்காக தான் பழகினானா? இப்படி ஒன்றும் சொல்லாமலேயே கிளம்பிவிட்டானே, அவனை மட்டும் திருமணம் செய்வதாக இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும், தமிழ்நாடே அறிந்து வைத்திருக்கும் பிரபலத்தின் மனைவி என்றால் சும்மாவா? ஆனால் அம்மா திட்டியதற்கே சென்று விட்டானே, ஒருவேளை அவசரமாக ஏதாவது விஷயம் என்று சென்று விட்டானா? திரும்ப என்னை காண வருவானா? என்றெல்லாம் அவள் மனம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டது. எப்படியும் சாத்விக் வருவான் என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் அவனுக்காக அவள் மனம் காத்திருக்கவும் செய்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.