(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 26 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

யாதவியின் சம்மதம் கிடைத்ததுமே அடுத்து வந்த ஒரு நல்ல முகூர்த்த நாளில் விபாகரன், யாதவியின் திருமணம் முடிவானது. பன்னீருக்கோ இல்லை ஒருவேளை முன்பணம் கொடுத்த படத் தயாரிப்பாளருக்கோ இந்த திருமண செய்தி தெரியக் கூடாது என்பதில் அனைவருமே தீர்மானமாக இருந்தனர்.

அர்ச்சனாவிடமும் மஞ்சுளா சொல்லி புரிய வைத்திருந்தார். அவளுக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லையென்றாலும், பிரச்சனைகளுக்கு அவள் காரணமாக இருக்கமாட்டாள் என்று மஞ்சுளாவிடம் அவள் உறுதி அளித்தாள்.

உள்ளூரிலேயே திருமணம் நடந்தால் யாராவது பார்த்து, அது பன்னீருக்கு தெரிந்துவிட்டால், ஒரு நல்ல காரியம் நடக்கும்போது தேவையில்லாமல் அவர் பிரச்சனை செய்வார் என்பதால், சென்னை கோவளத்திற்கு அருகில் உள்ள திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் திருமணத்தை நடத்தவும், பின் இங்கு வந்து ஒரு நல்ல நாளில் அனைவரையும் கூப்பிட்டு திருமண வரவேற்பு வைக்கலாம் என்றும்

விபாகரன் முடிவு செய்திருந்தான்.

பன்னீரிடம் கோவிலுக்கு செல்லப் போவதாக சொல்லிவிட்டு ரத்னா யாதவியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். இப்போதைக்கு யாருக்குமே திருமண விஷயத்தை சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்ததால், விபாகரன் பக்கத்து உறவினர்களுக்கும் சரி, அவன் நண்பர்களுக்கும் சரி, பாலா உட்பட யாரையும் அவன் அழைக்கவில்லை,

அதேபோல் தான் யாதவிக்கும், எப்படியோ பன்னீருக்கு தெரியக் கூடாதென்று உறவினர்களுக்கு சொல்லவில்லை, ஆனால் அவளது தோழிகளுக்கும் கூட இப்போது சொல்ல வேண்டாமென்று ரத்னா சொல்லியிருந்தார்.

அதனால் யாதவி, விபாகரன் இருவரோடு இருவரின் அன்னையர்களும், அர்ச்சனா என்று இந்த ஐவர் மட்டுமே கோவிலுக்கு வந்திருந்தனர்.

யாதவிக்காக விபாகரன் வாங்கிய பட்டுப்புடவையில் மணக் கோலத்தில் யாதவியும், பட்டு வேட்டி சட்டையில் விபாகரனும் அருகருகே அமர்ந்திருக்க, புரோகிதர் தேவையான சடங்குகளை நடத்திக் கொண்டிருக்க, அதை பார்த்துக் கொண்டிருந்த  ரத்னா இப்போது தான் நிம்மதியாக உணர்ந்தார். மகளது வாழ்க்கையில் இனி எந்த பிரச்சனையும் இருக்காது. விபாகரனுடனான அவளது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதாக அவர் நம்பியிருக்க, தன் வாழ்க்கையை தானே மகள் வீணாக்கி கொள்வாள் என்பது அவருக்கு தெரியவில்லை.

யாருக்குமே இப்போதைக்கு இந்த திருமணம் தெரிய வேண்டாம் என்று நினைத்திருக்க, அந்த நேரம் யாதவியின் தோழி சக்தி அந்த கோவிலுக்கு வந்து அங்கு யாதவியின் திருமணத்தை பார்த்தது யாருடைய துரதிர்ஷ்டம் என்று சொல்வது? யாதவிக்கா, இல்லை விபாகரனுக்கா? இல்லை ரத்னாவிற்கா?

செமஸ்டர் விடுமுறைக்கு சென்னையில் உள்ள தன் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்த சக்தி, திரும்பி பாண்டிச்சேரிக்கு தன் குடும்பத்தோடு தனியாக கார் எடுத்துக் கொண்டு கிளம்பியதால், அங்கங்கே நிறுத்தி கோவில், மகாபலிபுரம் என்று பார்க்க முடிவு செய்திருந்தனர். அதனாலேயே இப்போது அவள் இந்த கோவிலுக்கும் வந்திருந்தாள்.

அப்படி தான் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, அவள் கோவிலை சுற்றி வலம் வரும் போது, அங்கிருந்த மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதை பார்த்து, முதலில் யாருக்கோ என்று நினைத்தப்படியே வந்தவள், மணமக்களை பார்க்கும் ஆர்வத்தோடு அருகில் வரவும் தான், மணக்கோலத்தில் யாதவியை கண்டாள். அதுவும் அவள் பார்க்கும் போது தான் யாதவி கழுத்தில் விபாகரன் மஞ்சள் கயிறில் இணைத்த பொன் தாலியை கட்டிக் கொண்டிருந்தான்.

யாதவிக்கு திருமணம் முடிந்துவிட்டதா? என்று முதலில் அதைப் பார்த்து அதிர்ந்தாலும், பின் தோழிக்கு திருமணம் நடந்ததை நினைத்து சக்தி மகிழ்ந்திருக்க வேண்டும், உண்மையான மகிழ்ச்சி இல்லையென்றாலும் பரவாயில்லை, இனியாவது ஜகதீஷ் தன்னை திரும்பி பார்ப்பான் என்று நினைத்தாவது மகிழ்ந்திருக்கலாம்,

ஆனால் ஏனோ சக்தியால் யாதவியின் திருமணத்தை குறித்து மகிழ முடியவில்லை, அதற்கு பதிலாக அவளது மனதில் இப்போதும் வன்மமே அதிகமானது.

"யாதவியை விட நான் எந்த அளவில் குறைந்து போனேன், என்னைவிட அவள் அழகு என்பதாலா? அதனால் தான் ஜகதீஷ் என்னை மறந்து அவள் பின்னே சுற்றிக் கொண்டிருக்கிறானா? ஒரு சினிமா நடிகன் சாத்விக் சாதாரண யாதவியை காதலித்தது எதனால்? அவள் அழகு என்பதால் தானே, இதோ இப்படி கண்ணுக்கு லட்சணமான ஒருவனை கைப்பிடித்திருக்கிறாளே எதனால்? அவள் அழகி என்பதால் தானே..?" என்று நினைக்க நினைக்க மனதில் இருந்த வன்மம் அவளுக்கு அதிகமானது.

இங்கிருந்து செல்வதற்குள் அவளிடம் தனியாக பேசும் சந்தர்ப்பத்திற்காக சக்தி காத்திருக்க ஆரம்பித்தாள். அப்போதைக்கு யாதவி கண்ணில் படாதவள், அங்கிருந்து விலகி, தன் குடும்பத்தாரை விட்டும் தள்ளி வந்தவள், தன் கைப்பையிலிருந்த வாழ்த்து அட்டையை கையில் எடுத்தவள், அதை பார்த்து மனதில் அதிகமாகியிருந்த வன்மத்தோடு சிரித்துக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.