(Reading time: 10 - 20 minutes)

 

ப்பா, இந்த மாதிரி ரூல்ஸ் எல்லாம் வச்சக் காரணமே யாரும் பயந்துண்டு தற்கொலைக்குப் போகக் கூடாதுன்னுதான்.   ஆனால் அதுக்கெல்லாம் நம்ம ஊருல யாரு பயப்படறா. ஒரு சின்ன தோல்வியைக் கூட தாங்க முடியாம உடனே தற்கொலை பண்ணிக்கறாவாதான் ஜாஸ்தியா இருக்கா. தெய்வாதீனமா ராமு மாமா பொழச்சு வரணும். நாளைக்கு நானும் உங்க கூட ஹாஸ்பிடல் வரேன்ப்பா.”

“நீ சொல்றதும் கரெக்ட்தான் ஹரி. நான் நாளைக்கு கார்த்தால போகப்போறேன். அப்போ நீயும் வா. அப்பறம் இந்த விஷயம் அம்மாக்கோ, கௌரிக்கோ தெரிய வேண்டாம். அம்மாக்குத் தெரிஞ்சா வீணா கவலைப் படுவா. கௌரிக்கு   ஃபைனான்ஸ் கம்பெனி மூடினது தெரியாததால இதுவும் தெரிய வேண்டாம். நல்ல காலம் அவ இப்போ ப்ராஜெக்ட் வொர்க்ல பயங்கர பிஸியா இருக்கா. இல்லைன்னா பேப்பர்ல ஒரு வரி விடாம படிச்சு விஷயத்தை தெரிஞ்சுண்டு இருப்பா. அவ பேப்பரோ, டிவியோ பார்க்காதது நமக்கு வசதியாப் போச்சு.”

“இல்லைப்பா நான் எதுவும் சொல்ல மாட்டேன். அதே மாதிரி நீங்களும் உங்க கஷ்டத்துல பங்கெடுத்துக்க நாங்க இருக்கோம் அப்படிங்கறதை ஞாபகம் வச்சுக்கோங்கோ. ராமு மாமா பண்ணினா மாதிரி எந்த தப்பான முடிவுக்கும் நீங்க போய்டாதீங்கோப்பா.”

“ஏண்டா அவன் பண்ணினதையே நான் பைத்தியக்காரத்தனம் அப்படிங்கறேன். அப்பறம் நான் எப்படி அந்த முடிவுக்குப் போவேன். வாழ்க்கைன்னா சந்தோஷம் மட்டுமா ஹரி. நிறைய கஷ்டங்களும் வரத்தான் செய்யும். அதை சவாலா எடுத்துண்டு அந்தக் கஷ்டத்துலேர்ந்து வெளில வரணும். அதே சமயத்துல குடும்ப ஒத்துழைப்பும் இதுல இருக்கு ஹரி. நான் பணத்தை தொலைச்சுட்டு வந்தோண்ண நீயும், அம்மாவும் பேசினது எனக்கு எத்தனை ஆறுதலா இருந்தது தெரியுமா. நீங்க என்னைக் கேள்வி கேட்டு இருந்தாலோ, இல்லைத் குத்திக் காட்டி இருந்தாலோ, ராமு மாதிரி முட்டாள்த்தனமான முடிவு எடுக்காட்டாலும் ரொம்ப கஷ்டப் பட்டுப் போய் இருப்பேன்.”, வானத்தை வெறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டு போனார் ராமன். ஹரி அவரை சமாதனப் படுத்த முயல, சிறிது இடைவெளி விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.

“அதே மாதிரி கமலா கொஞ்சம் ஆறுதலாப் பேசி இருந்தா அவன் இந்த முடிவுக்குப் போய் இருக்க மாட்டானோ என்னவோ. பத்து லட்சம் போனாத்தான் என்ன. திரும்பி சம்பாதிக்க முடியாதா. இல்லை அது இல்லாம இருக்க முடியாதா. இப்போ வாங்கப் போற வீட்டை இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு வாங்கிண்டாப் போச்சு. இதை எல்லாம் பொறுமையா யோசிக்கற அளவுக்கு அந்த நேரத்துல அறிவு வேலை செய்யறதில்லை. க்ஷண நேர முடிவு, எப்படி எல்லாம் ஆயிடுத்து. அந்தக் குழந்தைகளுக்காகவானும் நாளைக்குள்ள அவன் கண்ணு முழிக்கணும்.”

“இதில் நம்ம தப்புதான்ப்பா நிறைய இருக்கு. எதுக்கு மொதல்ல தெரியாத ஒரு இடத்துல கொண்டு பணத்தைப் போடணும். போடும் போது எதைப்பத்தியும் கேக்கறதில்லை. அவன் காட்டற இடத்துல எல்லாம் ஆட்டோகிராப் போடறா மாதிரி கையெழுத்து போடறோம். அவன் அப்ளிகேஷன் நடுவுல ப்ரோநோட் வச்சு கையெழுத்து வாங்கினாக் கூட யாருக்கும் தெரியாது. நாம படிக்கக் கூடாதுங்கறத்துக்காகவே டிஸ்க்ளைமர் form அத்தனை சின்னதா அடிக்கறா.     அதுல நாளைக்கே அவன் கம்பெனி நஷ்ட்டப்பட்டுதுன்னா பணத்தைத் திருப்பி தரமாட்டோம் அப்படின்னு எழுதிக் கூட இருக்கலாம். அதைக் கூட தெரிஞ்சுக்கறதில்லை. 200 ரூபாய்க்கு ஒரு துணி வாங்க கடைக்காரன்கிட்ட ஆயிரத்தெட்டு கேள்வி கேக்கறோம். ஆனா இப்படி லட்சக்கணக்கா பணம் போடும்போது ஒண்ணும் கேக்கறது கிடையாது. வட்டி ஜாஸ்த்தியா வரதா, அப்போ போட்டுடலாம்ன்னு அதை மட்டும்தான் பார்க்கறோம்.”

“நீ சொல்றது கரெக்ட் ஹரி. நானுமே இந்தக் சிட் கம்பெனி பத்தி ஒண்ணுமே கேட்டுக்கலை. என்னோட ப்ரிண்ட்ஸ் சொன்னதை வச்சு அப்படியே போட்டுட்டேன். ஹ்ம்ம் இப்போ அவஸ்த்தைப்படறேன். நான் பண்ணின தப்பால இப்போ கௌரி கல்யாணம் கேள்விக் குறி ஆகிடுமோன்னு கவலையா இருக்கு. அம்மா வேண்டாம்ன்னு அப்போவே சொன்னா. நான்தான் கேக்கலை.”

“இனிமே கவலைப்பட்டு ஒண்ணும் ஆகப்போறதில்லைப்பா. இதில இருந்து மீண்டு எப்படி சமாளிக்கப்போறோம் அப்படிங்கறதுலதான் இருக்கு. கோபால் அண்ணாக்குத் தெரிஞ்சவாக் கூட போலீஸ் கமிஷ்னர் ஆபீஸ்ல இருக்கா. ஏதானும் வேணும்ன்னாக்கூட அவர்கிட்ட ஹெல்ப் கேட்டுக்கலாம்.”

“ஹ்ம்ம் சரிடா ஹரி. இப்போதைக்கு எதுவும் தேவை இருக்காது. அப்படி வேணும்ன்னாக் கேட்டுக்கலாம். அப்பறம் ஹரி எனக்கு ஆபீஸ்ல எதுவும் லோன் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டா, அதனால வெளிலதான் கல்யாணத்துக்குப் பணத்தைப் பொறட்டணும். இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு. அதுக்குள்ள பணத்தைப் பொறட்டி எல்லா வேலையும் முடிக்க முடியுமானு கவலையா இருக்குடா.”

“கவலைப்படாதீங்கோப்பா, எல்லாம் நல்லபடியா நடக்கும். நான் வர்ற சண்டே கோபால் அண்ணாவைப் போய் பார்த்து அவருக்கு தெரிஞ்சவா யாரானும் கடன் கொடுப்பாளான்னுக் கேட்டுப் பார்க்கறேன். ஏதானும் வழி கிடைக்கும். நாம ரொம்ப நேரமா பேசிண்டு இருக்கோம். அம்மாவும், கௌரியும் கவலைப்பட்டுண்டு இருப்பா. வாங்கோ கீழப் போகலாம்.”, என்று ராமனை அழைத்துக்கொண்டு கீழே சென்றான் ஹரி.

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:780}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.