(Reading time: 10 - 19 minutes)

ன்னா நீங்க மணி சார் ஆத்துக்குப் போயிட்டு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆயிடுத்தே. அவர்க்கிட்ட இருந்து ஏதானும் தகவல் வந்ததா. கௌரிக்கிட்ட கேட்டா வேலை ஜாஸ்தி, நான் பேசவே இல்லைன்னு சொல்றா.”

“இல்லை ஜானகி. அவர்கிட்ட இருந்து ஒண்ணும் தகவல் வரலை. நானே இன்னைக்கு அவர்க்கு போன் பண்ணனும்ன்னு இருந்தேன். அவர் கிளம்பறதுக்குள்ள பண்ணிடறேன் இரு”

“ஹலோ, நான் கௌரியோட அப்பா ராமன் பேசறேன்.”

“தெரியுது. சொல்லுங்க சார். எப்படி இருக்கீங்க?”

“நாங்க நன்னா சந்தோஷமா இருக்கறது நீங்க சொல்லப் போற பதில்லதான் இருக்கு. அந்த சீட்டு கம்பெனி விவகாரத்துல ஏதானும் முன்னேற்றம் இருக்கா?”

“இது வரைக்கும் அதே மாதிரிதான் இருக்கு. இன்னைக்கு எனக்கு கமிஷ்னர் கூட மீட்டிங் இருக்கு. அதுலதான் மீடியாக்கிட்ட விஷயத்தை சொல்லி எஸ்கலேட் பண்ற விஷயத்தைப் பத்தி பேசப் போறேன். அவர் சொல்ற பதிலை வச்சுத்தான் மேல என்ன நடவடிக்கை எடுக்கறது அப்படின்னு முடிவு பண்ண முடியும்.”

“அவர் முடியாதுன்னு சொல்லிட்டா என்ன பண்ணப் போறேள். அவனைப் பிடிக்க இருக்கற ஒரு வழியும் அடைப்பட்டு போய்டுமே. பிரஷர் இருந்தாலே இந்த ஆளுங்களை எல்லாம் நெருங்கறது கஷ்டம்”

“ராமன் சார் அது மட்டுமே வழி கிடையாது. நாங்க மத்த வழி எல்லாமும் யோசிச்சு வச்சிருக்கோம்.   நானே சாயங்காலம் வந்துட்டு உங்ககிட்ட பேசறேன்”, என்று கூறி பாலு வைக்க, ராமன் அவர் சொல்லிய விஷயத்தை ஜானகியிடம் விளக்கினார்.

“ஜானகி நான் ஆபீஸ் கிளம்பறேன்.   இன்னும் கல்யாணத்துக்கு அஞ்சு வாரம்தான் இருக்கு. இந்த வாரம் போய் முக்கியமா கூப்பிட வேண்டியவாளை எல்லாம் கூப்ட்டுட்டு வந்துடலாம். அடுத்த வாரத்துல இருந்து கௌரியும் ப்ரீ ஆயிடுவா. ஷாப்பிங் பண்ண வசதியா இருக்கும். ஆமா நீ ஏன் ரெண்டு மூணு நாளா ஒரே வருத்தமா இருக்க?”

“எனக்கு கௌரிக்கு இப்போப் போடறதா சொன்ன நகையைப் போட முடியலையேன்னு வருத்தமா இருக்குன்னா. என்னதான் ஒரு ஆறு மாசம் கழிச்சு நாம போடப்போறோம் அப்படின்னாலும், அதை கல்யாணத்தன்னைக்கு அவளால போட்டுக்க முடியாதே. ஒரே செட்டையே திரும்பத் திரும்ப போட்டுக்கப் போறாளேன்னு கஷ்டமா இருக்கு.”

“என்ன பண்றது ஜானு. கடன் எங்கயானும் கிடைக்கும்னா இப்போக் கூட வாங்கிப் பண்ண நான் ரெடியாதான் இருக்கேன். கௌரி வெளில கடன் வாங்க வேண்டாம்ன்னு சொன்னாலும் இன்னமும் எல்லா இடத்துலயும் கேட்டுண்டுதான் இருக்கேன். பார்க்கலாம், பகவான் நம்ம மேல பரிதாபப்பட்டு யார் மூலமானும் பணத்தைக் கடனா கொடுத்து விடறாரான்னு”, என்று ஜானகியிடம் விடை பெற்று கிளம்பினார் ராமன்.

ன்று சாயங்காலம் போன் செய்த பாலு மீடியாவிடம் சொல்வதற்கு மேலிடத்தில் அனுமதி கிடைத்து விட்டதாகக் கூறி, முதலில் அந்த அரசியல் கட்சிக்கு எதிரான தொலைக்காட்சிக்கு மட்டும் நியூஸ் கொடுக்கப் போவதாகக் கூறினார்.   தொலைக்காட்சிக்கு மட்டும் முதலில் நியூஸ் கொடுத்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்து செய்தித்தாளிற்கு நியூஸ் கொடுக்கவிருப்பதாகவும் கூறினார். பின்னர் ராமன் பாலுவிடம் தான் பத்துவிடம் பேசிவிட்டு மறுநாள் அவரை வந்து பார்ப்பதாகக் கூற, அவரும் மணி வீடிற்கு மதியம் ஒரு பன்னிரண்டு மணி போல் வரக் கூறினார்.

போனை வைத்த ராமன் ஜானகியிடம் திரும்பி அவர் பாலுவிடம் பேசிய விவரங்களைக் கூறிக் கொண்டிருக்கும்போதே அலுவலகத்திலிருந்து கௌரியும், கல்லூரியிலிருந்து ஹரியும் திரும்பினார்கள்.

“என்னடி இது ஆச்சர்யம், இன்னைக்கு மழை கொட்டதான் போறது. ஆறு மணிக்கெல்லாம் ஆத்துக்கு வந்துட்ட”

“எனக்கு ஒரே தலைவலிம்மா. அதுதான் ஏழு மணி கால் ஆத்துலேர்ந்து எடுத்துக்கலாம்ன்னு சீக்கிரமே கிளம்பிட்டேன். அப்பா, இன்னைக்கு மணிக்கிட்ட பேசினேன். அவர், அவரோட மாமனார் இன்னும் விஷயம் ஒண்ணும் சொல்லலைன்னு சொன்னார்”

“இல்லை கௌரி இப்போதான் நான் பாலு சார்கிட்ட பேசினேன். அவரோட மேலிடத்துல மீடியாக்கு நியூஸ் சொல்ல ஓகே சொல்லிட்டாளாம்.   மத்த டீடெயில்ஸ் எல்லாம் நாளைக்கு நேர வந்துப் பேசறேன்னு சொல்லி இருக்கேன்”

“ஓ அப்படியா, சரிப்பா. எந்த சேனல்க்கு அவா நியூஸ் கொடுக்கப் போறாளாம்”, என்று ஹரி கேட்க, ராமன் சேனல் பெயரைக் கூறினார்.

“அப்பா, என் கூட படிக்கற சந்தோஷோட அண்ணா அங்கதான் வேலைப் பண்றார். நியூஸ் டிவிஷனான்னு தெரியாது. எதுக்கும் நாளைக்குக் கேட்டுப் பார்க்கறேன். அவர் வழியா இன்னும் வேற ஏதானும் பண்ண முடியுமான்னு ட்ரை பண்ணலாம்”

“சரிடா, நீ உடனே கேக்க வேண்டாம், நாங்க முதல்ல நாளைக்குப் போயிட்டு வரோம். அப்பறம் பாலு என்ன சொல்றாரோ, அதை வச்சுண்டு மேல்கொண்டு என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கலாம்.   கௌரி நாளைக்கு ஆபீஸ் போகப் போறியா?”

“இல்லைப்பா ஒரு ரெண்டு மணிநேர வேலை மட்டும் இருக்கு, அதை ஆத்துலேர்ந்தே பண்ணலாம்ன்னு இருக்கேன். நான் கார்த்தாலயே அந்த வேலையை முடிச்சுடுவேன்ப்பா. அதனால நானும் உங்களோட வரேன்”

“சரிம்மா, நான் பத்துகிட்டையும் பாலு சொன்னதை சொல்லிட்டு, அவரும் நாளைக்கு வராறான்னு கேட்டுக்கறேன்”

“சரிப்பா. அப்பறம் அம்மா, நோக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம்.   இன்னும் ஒரு வாரம்தான் நான் ஆபீஸ் போகணும். அப்பறம் முழுக்க வீட்டுலேர்ந்தே வேலை பார்க்க ஒத்துண்டுட்டா எங்க ஆபீஸ்ல. இதோட சிங்கப்பூர் போய் புது கம்பெனி சேர்ற வரைக்கும் ஆபீஸ் போக வேண்டாம்”

“ஓ ரொம்ப சந்தோஷம் கௌரி. இனி வேலை எல்லாம் மடமடான்னு பண்ணிடலாம். நானே மாபிள்ளையை நினைச்சுக் கவலைப்பட்டுண்டு இருந்தேன். உனக்கு வெந்நீர் வைக்கக்கூட தெரியாதே.   அங்கப் போய் என்னப் பண்ணப் போறியோன்னு. இனி வீட்டுல இருக்கற நேரத்துல ஒழுங்கா சமைக்க கத்துக்கோ”

“ஏம்மா எனக்கு வெந்நீர் போடத் தெரியலைன்னா என்னைப்பத்திதானே கவலைப்படணும், அது எதுக்கு கௌஷிக்கை நினைச்சு கவலைப்படற?”

“ஏன்னா நீ வைக்கப்போற வெந்நீரைக் குடிக்கப் போறவர் அவர்தானே, அதுதான்...”, என்று ஜானகி கலாய்க்க, கௌரி சிணுங்க, ராமனும், ஹரியும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:780}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.