(Reading time: 21 - 41 minutes)

வெளியே நின்றிருந்த பைக்கும், வாசலில் இருந்த செருப்பையும் பார்த்தே வந்திருப்பது இளங்கோ என்று துஷ்யந்த் அறிந்துக் கொண்டான்... அப்படி அதெல்லாம் இல்லையென்றாலும், கங்காவின் சிரிப்பு சத்தமே, வீட்டுக்குள் இருப்பது இளங்கோ என்பதை சொல்லாமல் சொல்லிவிடும்...

ஏனென்றால் கங்கா இயல்பாக இருப்பதே வாணியிடமும், இளங்கோவிடமும் தான்... அதிலும் இளங்கோவால் தான் கங்காவை இப்படி சிரிக்க வைக்க முடியும்... மற்றவரிடமெல்லாம் ஓர் எல்லைக்கு மேல் பழகமாட்டாள்...

அதுவும் இவன் இருக்கும்போது அவளை ஒரு உணர்ச்சியற்ற முகபாவனையோடு தான் பார்க்க முடியும்... அது கூட கடந்த மூன்று வருடங்களாக தான் அப்படி... அதற்கு முன்னரோ, இவனிடம் பல முறை அவள் காட்டுவது கோபத்தையும், வெறுப்பையும் தான்... ஆனால் அது தான் இவனுக்கு புரியவில்லை..??

இந்த ஆறு வருடத்தில் இவனை ஒரு நண்பனாக கூட அவள் ஏற்க மறுப்பதேன்..?? அந்த அளவிற்கு இவன் செய்த தவறு என்ன..?? இப்படி தனக்குள்ளேயே எத்தனையோ முறை கேட்டுக்கொண்டிருக்கிறான் துஷ்யந்த்.. ஆனால் அதற்கு விடை தான் தெரியவில்லை...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

என்னத்தான் கோபமும், வெறுப்பும் காட்டினாலும், உணர்ச்சியற்ற முக பாவனைகள் இருந்தாலும், சில சமயத்தில் இவனிடம் பேசும் அக்கறையான பேச்சும், மிக அரிதாக எப்போதாவது இவனை பார்த்தால் அவள் புன்னகைப்பதுமே அவனுக்கு பெரிய பொக்கிஷம், மத்தப்படி அவளுக்கு தெரியாமல் தான் அவளின் இயல்பை, இந்த சிரிப்பை ரசிக்க முடியும்...

அதுமட்டுமில்லாமல், இப்போது அவன் உள்ளே சென்றால், அவள் சிரிப்பதையும் நிறுத்திவிடுவாள்.. அதனாலேயே அவன் தயங்கி வெளியே நின்றான்...

சிரிப்பு சத்தம் அடங்கியதும், துஷ்யந்த் கதவை தட்டினான்...

"கதவு திறந்து தான் இருக்கு... யாரு.." என்று வாணி உள்ளிருந்து குரல் கொடுத்ததும்... கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் அவன்...

"அட நீங்களா... வாங்க தம்பி..." என்று வாணி வரவேற்க,

"துஷ்யந்த்... வாவ் சர்ப்ரைஸ்... உங்கள இப்போ பார்ப்பேன்னு நான் எதிர்பார்க்கல..." என்று எழுந்த இளங்கோ... துஷ்யந்திற்கு கை குலுக்கினான்... அதற்குள் ஒரு நாற்காலியை எடுத்து வந்து போட்டு வாணி துஷ்யந்தை அமரச் சொன்னாள்...

திடிரென அவன் வருகையை எதிர்பார்க்காத கங்கா பிரம்மித்து அமர்ந்திருந்தாள்... இனி பார்க்கவோ, பேசவோ கூடாது என்று சொல்லியும், அவன் வீடு வரைக்கும் வந்ததுக்கு கோபம் தான் பட வேண்டும்... ஆனால் அப்படி கோபப்பட அவளால் முடியவில்லை... ஆனால் அந்த உணர்ச்சியற்ற அந்த முகத்தில், அவள் நினைப்பது அவனுக்கு எப்படி தெரியும்... வாங்க என்று கூட சொல்லாமல் அவள் உட்கார்ந்திருக்கவே, இவன் வருகையை அவள் விரும்பவில்லை என்று தான் துஷ்யந்த் நினைத்தான்...

"தம்பி சாப்டீங்களா... இல்லை வாங்க சாப்பிடலாம்..."

"இல்லக்கா... நான் சாப்பிட்டேன்... கொஞ்சம் டீ மட்டும் தர்றீங்களா..."

"சரி தம்பி... இருங்க போட்டு எடுத்துக்கிட்டு வர்றேன்..." என்று வாணி சமயலைறை நோக்கிச் செல்ல...

"வாணிம்மா இருங்க... நான் போட்றேன்..." என்று கங்கா எழுந்து சென்றாள்..

கோபத்தால் தான் இங்கே உட்கார பிடிக்காமல் அவள் எழுந்து செல்கிறாளோ..?? என்று துஷ்யந்த் நினைக்க... இதற்கும் மேலே இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமோ..?? என்று தெரியாததால், அவள் கையால் அவனுக்கு டீ போடலாம் என்று நினைத்தே அவள் எழுந்துச் சென்றாள்..

அது துஷ்யந்திற்கு தெரியவில்லையென்றாலும், வாணி அதை அறிந்ததால், அவளுக்கு ஏதும் அவர் தடை சொல்லவில்லை..

"எப்படி இருக்க இளங்கோ... ஊருக்குப் போனதா கேள்விப்பட்டேன்... அப்பா, மத்த எல்லோரும் நல்லா இருக்காங்களா..??"

"எல்லோரும் நல்லா இருக்காங்க துஷ்யந்த்.. அப்பா உங்களையும் ரொம்ப விசாரிச்சாரு..."

"ம்ம் அப்பாவை பார்த்தே ரொம்ப நாளாச்சு.." என்றவன், தான் எடுத்த வந்த பையிலிருந்து ஒரு கவரை எடுத்து வாணியிடம் கொடுத்து...

"வாணிக்கா... உங்களுக்காக இந்த ஸ்வெட்டரும், ஷாலும் வாங்கிட்டு வந்தேன்... இந்தாங்க..." என்றுக் கொடுத்தான்...

அதைப் பிரித்து பார்த்தவர்... "தம்பி இது ரொம்ப விலையாய் இருக்கும் போலயே..." என்றார்...

"விலையெல்லாம் பத்தி ஏன்க்கா யோசிக்கிறீங்க..??"

"அதில்ல தம்பி... உங்க எஸ்டேட்ல வேலைப் பார்த்த... சாதாரண வேலைக்காரி நான்... எனக்கெதுக்கு தம்பி இவ்வளவு விலையில..." என்று வாணி சொன்னதும், சமையலறையில் இருந்த கங்காவிற்கு கோபம் வந்தது...

"அதற்கும் முன்னரே... " என்ன க்கா.. நீங்க ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க... நீங்க எங்க எஸ்டேட்ல வேலை செஞ்சது 6 வருஷத்துக்கு முன்னாடி... அப்பவே நான் அப்படியெல்லாம் நினைச்சதில்ல... இதை கங்கா கேட்டா... அவ மனசு ரொம்ப கஷ்டப்படும்... அவ உங்களை தன்னோட அம்மா ஸ்தானத்துல வச்சிருக்கா... அதை ஞாபகத்துல வச்சிக்கோங்க..." என்றான் துஷ்யந்த்..

"ஆமாம் வாணிம்மா... நாங்க யாரும் உங்களை அப்படியெல்லாம் நினைக்கறதில்ல... நீங்க ஏன் அப்படியெல்லாம் பேசறீங்க..." என்று இளங்கோவும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்...

"சரி... ஏதோ தெரியாம சொல்லிட்டேன்... மன்னிச்சுக்கோங்க தம்பி..."

"சரி விடுங்கக்கா... மன்னிப்பெல்லாம் எதுக்கு..." என்றவன்...

"அன்னைக்கு நான் கேட்டுக்கிட்டேன் என்பதற்காக... கங்காவுக்கு துணையா இருக்கீங்க... நீங்களும், இளங்கோவும் கங்கா கூட இருக்கறதால தான் நான் நிம்மதியா இருக்கேன்... அதுக்காக உங்க ரெண்டுப்பேருக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்..." என்று மனதில் நினைத்துக் கொண்டான்...

"ம்ம் இளங்கோ... இது உனக்காக வாங்கினேன்... இதை வாணி அக்காக்கிட்ட கொடுக்கலாமா... இல்லை உன்னை நேர்ல பார்க்கும் போது கொடுக்கலாமான்னு நினைச்சுக்கிட்டே வந்தேன்... நல்லவேளை இன்னைக்கே பார்த்துட்டேன்.." என்று காஸ்ட்லியான வாட்சை இளங்கோவிடம் கொடுத்தான்...

"அய்யோ துஷ்யந்த் எதுக்காக இதெல்லாம்... இவ்வளவு காஸ்ட்லியான வாட்செல்லாம் நான் கட்டுறதில்ல... எனக்கு வேண்டாம்..."

"இப்போ வாணி அக்காக்கிட்ட சொன்னதை தான் உன்கிட்டேயும் சொல்லனுமா...?? நான் ஒன்னும் உனக்காக ஸ்பெஷலா தேடி வாங்கல... என் தம்பி செல்வாவுக்கு வாங்கனப்போ... உனக்காகவும் வாங்கினேன்... நான் எத்தனை முறை சொல்லியிருக்கேன்... எனக்கு நீயும், என்னோட தம்பி செல்வாவும் ஒன்னு தான்..." என்றவன்... இளங்கோ கட்டியிருந்த பழைய வாட்சை கழட்டிவிட்டு... புது வாட்சை கட்டிவிட்டான்... இளங்கோவால் அதற்கு மேலும் அதை மறுக்க முடியவில்லை...

"அப்புறம் இளங்கோ... ஊர்ல என்ன விசேஷம்..??"

"ஒன்னுமில்ல துஷ்யந்த்... எல்லாம் வழக்கம் போல தான் போய்க்கிட்டு இருக்கு... நீங்க தான் ஏதாவது விசேஷம் இருக்கான்னு சொல்லனும்..." என்று இளங்கோ சொன்னதும்...

"இங்க மட்டும் என்ன விசேஷம்..." என்று துஷ்யந்த் ஏதோ சொல்ல வந்த போது...

"விசேஷம் இல்லாமையா... உனக்கு தெரியாதுல்ல இளங்கோ... உன்னோட ப்ரண்ட்க்கு இன்னும் 25 நாள்ல கல்யாணம்..." என்று கையில் டீயோடு சமயலறையிலிருந்து சொல்லிக் கொண்டே வந்தாள் கங்கா...

அதைக் கேட்டு இளங்கோ அதிர்ந்தான் என்றால், துஷ்யந்திற்கோ அவனின் சந்தோஷ மனநிலை மாறி... முகத்தை இறுக்கமாக்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.