(Reading time: 8 - 16 minutes)

17. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval

ரூபனையும் , அனிக்காவையும் பின்தொடர்ந்தவன் உடனே அவர்களுடைய தகவல்களை சேகரிக்க எண்ணியவனாக தான் எடுத்த அவர்களின் புகைப்படங்களையும், ரூபனின் கார் நம்பரையும் தான் பிரத்யேகமாக அணுகும் டிடெக்டிவ் ஏஜென்சிக்கு அனுப்பி வைத்தான்.

டிடெக்டிவ் ஏஜென்சியிலிருந்து ரூபனைக் குறித்த முழுமையான தகவல்கள் வந்துச் சேர நான்கைந்து நாட்களாவது ஆகக் கூடும். அது வரையிலும் கூட அவர்களை பின்தொடராமல் அவனால் இருக்க முடியவில்லை. தான் முற்றிலும் அழித்து விட்டதாக எண்ணிய ஒருவன், இனிமேல் தலை நிமிரவே முடியாது என்று எண்ணுகிறபடிக்கு முழுமையாய் மனதை ஒடித்துப் போட்ட ஒருவன் எப்படி இவ்வளவு மேலெழுந்திருக்க முடியும்? தீவிரமாய் யோசிக்க, யோசிக்க மறுபடியும் ஆத்திரத்தில் நெறிந்தன அவன் பற்கள். ரூபனால் சிதைக்கப்பட்ட நான்கு பற்களின் மாற்றுகளும் அவற்றுள் அடக்கம்.

அவன் பெயர் ஆதித்யன், ஆதித்யன் க்ரூப் ஒஃப் கம்பெனீஸின் இளைய தலைமுறை வாரிசுகளில் ஒன்றாகிய விக்ரமாதித்யன். தலைமுறை தலைமுறையாக இருக்கும் பணக்காரக் குடும்பத்திலொருவன். பணப்பற்றாக்குறையோ , வறுமை தட்டுப்பாடு என்றோ வாழ்வில் ஒருபோதும் அணுவளவும் அறிந்திராதவன்.

எண்ணிக்கையிலடங்கா தொழில்கள் குடும்பத்தின் கைவசம் இருக்க அதை திறம்படச் செய்து பணத்தை பெருக்கும் அவனை விட பெரியவர்களும் இருப்பதனால் உழைக்க வேண்டும் , திட்டமிட்டு செயல்பட்டே ஆக வேண்டும் என்கிற வரையறைகளுக்கு ஒருபோதும் உட்படாதவன். உழைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் செலவழிப்பதற்கு எத்தனை ஆகுமோ அத்தனை வழிகளையும் அறிந்திருப்பதுவும், அவற்றைச் செயல்படுத்துவதுவும் தான் அவனுடைய தற்போதைய உழைப்பு என்றேக் கூறலாம்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

தன்னுடைய அண்ணன் கலந்துக் கொள்ள வேண்டிய ஏற்றுமதியாளர் சந்திப்பிற்கு அவனுக்கு வேறு வேலை வந்து விடவே விக்ரமை அனுப்பி வைத்திருந்தனர். வேண்டா வெறுப்பாக அவனும் வந்து பார்வையை இங்கும் அங்குமாக சுழற்றிக் கொண்டு அமர்ந்திருக்க அப்போதுதான் அவன் கண்ணில் பட்டான் முன் வரிசையில் அமர்ந்திருந்த ரூபன்.

தன் பகையை பாதியில் விடாதாம் பாம்பு, அது போல ரூபனைக் கண்டதிலிருந்து மறுபடியும் சீற்றம் காட்டிக் கொண்டு இருந்தான் விக்ரம். தான் கலந்துக் கொள்ளுகின்ற அதே மீட்டிங்க்கில் அவனும் சமதையாய் கலந்துக் கொள்ளுகின்றானென்றால்……………..மறுபடியும் நறு நறுவென கடிப்பட்டன அவன் பற்கள்.

அவன் எனக்கு சமதையா? ……………………………நாய்.. வக்கிரமாய் மொழிந்தது அவன் குரல். இதற்காகத் தானே அவனை நான் ஓட ஓட விரட்டினேன். அவனிடம் வேறு யாரையும் நட்புக் கொள்ளாமல் விலக்கி வைத்தேன். முறிய முறிய மீண்டும் வளர விடாமல் அவன் சிறகுகளை ஒடித்து வைத்தேன். அப்படியிருந்தும் அவன் எழுந்து விட்டானா?

ண்முன் நிழலாடியது 6ம் வகுப்பு நிகழ்வு. வருடாந்திர சிறந்த மாணாக்கருக்கான பரிசுகள் வழங்கும் விழா. ஏற்கெனவே ரூபனை தீண்டத்தகாதவன் போல ரூபனை அவன் தன்னுடைய பணக்காரத் திமிரில் ஒதுக்கியே வைத்திருந்தாலும் அன்றைய தினத்தினின்று மேலுமாய் விக்ரமின் கண்ணில் தூசியாய், உறுத்தலாய் மாறியிருந்தான் ரூபன்.

வழக்கம் போல ஒவ்வொரு பாடத்திலும் பார்டரில் பாஸாகியிருந்தான் விக்ரம், இருந்தாலும் அவனை விட்டுக் கொடுக்காத அன்பான தாயும் தகப்பனுமாய் அவன் பெரும் பேறு பெற்றவன் தான்.

வரிசையாக பரிசுகள் அறிவிக்கப் பட மெரும்பாலானவைகளில் முதன்மை நிலையில் இருந்தான் ரூபன். அரங்கமே கைதட்டல்களால் ஆரவாரித்தது. பரிசுகள் பெற்றவன் முகத்திலோ சலனமே இல்லை. வீட்டிலிருந்து தான் பரிசுகள் பெறுவதை காண, தன்னை தட்டிக் கொடுத்துப் பாராட்ட ஒருவரும் வராமலிருக்க எங்கிருந்து வருமாம் அவன் முகத்தில் மகிழ்ச்சி?!.

அதுவரையிலும் கூட விக்ரமின் உள்ளத்தில் அவன் குறித்த துவேஷமில்லை. தன்னுடைய அப்பா அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தது அந்த கரகோஷத்திற்கிடையிலும் அவன் காதில் விழுந்தது தான் விஷமாய் போயிற்று.

“பார்த்தியா மீனு இந்தப் பையன் இங்கே சேர்ந்த ஒரு வருஷம் தான் ஆகுது. அதுக்குள்ள எவ்வளவு நல்லா படிக்கிறான். நாமளும் தான் ஆசைப் படறோம்…… ம்ஹீம்…… என்னும் இருவரின் பெருமூச்சு இவனை நெருப்பு தனலாய் சுட்டது. அவ்வளவு சிறியவனின் உள்ளத்தில் இத்தனை வன்மம் இருக்கும் என்பதை அவன் பெற்றோரே அறிவார்களோ என்னவோ? அதன் பின் அவன் ரூபனை வருத்த வேண்டுமென்றேச் செய்த செயல்கள் எண்ணிலடங்காதவை.

தானாக அவன் முன் எதிரியாக ஒருபோதும் நில்லாமல் , பிறரை தூண்டிவிட்டு அவர்கள் மூலமாக அவன் தன்மானத்தைக் குதறிக் கொண்டு இருந்தான். ஒவ்வொரு முறையும் எதிர்க்கவும் இயலாமல், கேட்ட வார்த்தைகள் அனைத்து வன்மையாய் மனதைக் குதறிப் போட செயலறியாமல் திகைக்கும் அவன் சுருங்கிப் போன முகத்தை பார்ப்பதே விக்ரமுக்கு தனி இன்பம் கொடுக்கும்.

யாருமற்றவனாய், நிராயுதபாணியாக அவனைப் பார்த்து பார்த்து மகிழ்ந்திருக்க, அவனை கடைசி முறையாக கல்லூரி இரண்டாம் வருட பரீட்சை எழுதுவதற்காக வந்தபோது இன்னுமாய் அவனை பேசி கூனி குறுகச் செய்து இருக்க அவன் இத்தனை வருடங்களில் மனநிலை பிறழ்ந்தவனாகவோ? இல்லை வேலை வெட்டி செய்யாமல் வாழ்வை வீணடித்தவனாகவோ பார்த்திருந்தால் ஒருவேளை மகிழ்ந்திருப்பானோ? என்னமோ? ஆனால், தன்னுடைய 4 பற்களை உடைத்தவன் , தன் முக அழகை சீர்குலைத்து பிறர் முன் கேலிப் பொருளாக மாற்றியவன் மகிழ்வாக இருப்பதா? அதனால் தான் கண்ட அவமானங்கள் எத்தனை எத்தனை?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.