(Reading time: 12 - 23 minutes)

வாணி எதற்காக இந்த நேரத்தில் தன் தங்கையை பார்க்கச் சென்றார் என்பது கங்காவிற்கு புரியவில்லையென்றாலும், இப்போது அவர் சென்றது கூட நல்லதுக்கு தான் என்று அவள் நினைத்தாள்...

வீட்டில் உள்ள விளக்குகளையெல்லாம் அணைத்துவிட்டு, படுக்கையறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்தாள்... இப்போது அவளுக்கு தனிமை அவசியமான ஒன்றாக இருந்தது... விடிந்தால் துஷ்யந்திற்கு திருமணம்... இவள் தான் அவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாள்... ஆனால் அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் நடக்கப் போகிறது என்பதில் இவளுக்கு எவ்வளவு வருத்தம்... அதை மனசுக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டவளுக்கு, தன் வேதனையை கண்ணீரால் கரைக்க, தனிமையின் அவசியம் இப்போது தேவைப்பட்டது...

இதுவே இந்த ஆறு வருடத்தின் ஆரம்பக்காலங்களில் துஷ்யந்திற்கு திருமணம் என்று அவனே வந்து சொல்லியிருந்தாலும், அவனுக்கான பாதையை அவன் முடிவெடுத்துவிட்டான், என்று நினைத்து நிம்மதி அடைந்திருப்பாள்... இவள் பாதையில் இனி குறுக்கிடாமல் இருந்தால், சந்தோஷம் என்றுக் கூட நினைத்திருப்பாள்...

ஆனால் இப்போதோ அப்படி இவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை... தனக்கு வரப்போகிற கணவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணுக்கும் எவ்வளவு கற்பனைகள் இருக்கும், அந்த கற்பனைகளின் ஒட்டு மொத்த உருவமாக தான் துஷ்யந்த் திகழ்கிறான்... இப்போது கூட இவள் மனதை அவனுக்கு தெரியப்படுத்தினால், எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு இவளுக்காக வந்துவிடுவான்... அந்த அளவுக்கு இவளுக்காக அவன் மனதில் உள்ள இடம் தெரிந்தும், அவனை வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறாள்... இதுக்கெல்லாம் காரணம் இவளுடைய கொள்கையும், அதை மீறக்கூடாது என்ற உறுதியும் தான்...

அந்த மன உறுதி ஒன்று மட்டும் தான் பெரிது என்று நினைத்தவள், சில நாட்களுக்கு முன்பு வரை தன்னைப் பற்றி மட்டுமே யோசித்திருக்கிறாள்... எவ்வளவு நாள் இப்படியே இருப்பான்... அவன் மனதும் ஒருநாள் மாறும், அவன் வாழ்க்கையை பற்றி அப்போது யோசிப்பான்.. என்று தான் துஷ்யந்தைப் பற்றி இவள் நினைத்திருந்தாள்... அவனுடைய அன்னை இவளை தேடி வரும் வரையிலும்...

மூன்று வருடங்களுக்கு முன்பு போல், "என்னோட பிள்ளையை விட்டு விலகிடு... இந்த ஊர்லையே இருக்காத.." என்று துஷ்யந்தின் அன்னை அதிகாரமாக பேசியிருந்தாலோ... இல்லை துஷ்யந்தின் அத்தை போல் இவளை அவமானப்படுத்தியிருந்தாலோ.. "உங்க மகனை நான் பிடிச்சு வச்சிருக்கல... உங்க பிள்ளையோட மனசை மாத்தி, அவருக்கு கல்யாணம் செய்வது, உங்கப் பொறுப்பு.. இதுல என்கிட்ட பேச என்ன இருக்கு.." என்று கோபமாகவே அவர்களிடம் பேசி அனுப்பியிருப்பாள்... ஆனால் அவர்கள் இவளிடம் பேசிய முறையே வேறு...

"என்னோட மகன் மனசுல என்ன இருக்குன்னு... என்னால புரிஞ்சுக்க முடியுது... அவனுக்கு நீதான் வேணும்னு எனக்கு தெரியும்... அதுக்காக என்னோட பையனை கல்யாணம் பண்ணிக்கோன்னு.. உன்கிட்ட கேக்க எனக்கு மனசு வரல... சரி இந்த 3 வருஷத்துல நீங்களாவே ஏதாவது முடிவு எடுப்பீங்கன்னு நான் காத்துக்கிட்டு இருந்தேன்... அப்படியும் நீங்க எந்த முடிவும் எடுத்ததா தெரியல..

நம்ம நாட்டு பொண்ணுங்க இந்த காலத்திலேயும் தாலிக்குரிய மரியாதையை தெரிஞ்சு வச்சிருக்காங்க... அதை மதிக்கிறாங்க... நீ தாலிக்கு எந்த அளவுக்கு மரியாதை தரேன்னு எனக்கு தெரியல.. ஆனா உன்னோட கழுத்துல இருக்க தாலியை நீ மதிக்கிறேன்னு தான் தெரியுது.. வேற ஒருத்தன் கட்டின தாலியை இன்னும் நீ கழட்டாம இருக்கன்னா... நீ எப்படி என்னோட மகனை கல்யாணம் செஞ்சுக்க முடியும்...

நான் சொன்னமாதிரி தான் நீயும் நினைக்கிறேன்னா... அப்போ என்னோட பையனை விட்டு ஏன் விலக மாட்டேங்குற... நீ என்ன நினைக்கிற... என்னோட பையன் உன்னையே நினைச்சுக்கிட்டு, தன்னோட வாழ்க்கையே அழிச்சுக்கனுமா..?? உனக்காக அவன் காத்திருக்கனுமா..?? நீயும் அவன்கிட்ட அதையே தான் எதிர்பார்க்கிறீயா..?? என்று அவர் கேட்டதும்,

ஒருவேளை அவர் சொன்னது போல் தான் இவள் எதிர்பார்க்கிறாளோ..?? அவனுக்காக இவள் கொள்கையையும் கைவிட மாட்டாளாம்... அப்படியிருக்க அவன் வாழ்க்கையை பற்றி யோசிக்காமல் சுயநலமாக இத்தனை நாள் இருந்திருக்கிறாளே.. என்று நினைத்துப் பார்த்தவள், அவனுக்காக அந்த நொடி யோசித்தாள்... பின்பு தான் அவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதாக அவன் அன்னையிடம் தெரிவித்தாள்... அதில் வெற்றியும் கண்டாள்... ஆனால் இந்த நொடி  தனக்கு கடவுள் கொடுத்த வரத்தை தவறவிட்டதாக தான் நினைத்தாள்.

ஓடும் நீரில் ஓர் அலை தான் நான்...

உள்ளே உள்ள ஈரம் நீ தான்...

வரம் கிடைத்தும் நான் தவறவிட்டேன்...

மன்னிப்பாயா... அன்பே...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.