(Reading time: 33 - 66 minutes)

ற்கனவே மரணத்தின் விளிம்புக்கு சென்று வந்தவளை நேரில் கண்டவராயிற்றே, இப்போது படுக்கையில் மயங்கி விழுந்திருந்தவளை பார்த்ததும், அவள் ஏதோ தவறான முடிவுக்கு சென்றிருப்பாளோ..?? என்று வாணி ஒரு நிமிடம் பயந்துவிட்டார்...

ஆனால் அருகில் சென்று பார்த்ததும் தான், அவள் மயங்கியிருக்கிறாள் என்று புரிந்தது... முகத்தில் கண்ணீர் வந்து காய்ந்த தடம், அவள் அழுதிருக்கிறாள்.. என்பதை வாணியால் அறிந்துக் கொள்ள முடிந்தது... முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தும், கங்காவிற்கு மயக்கம் தெளியவில்லை... பின் அவளை தட்டி எழுப்ப வாணி முயற்சித்தப் போது, அவள் தேகம் காய்ச்சலால் கொதித்தது...

"என்ன உடம்பு இப்படி நெருப்பா கொதிக்குது.." என்று புலம்பிய வாணிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.. கைகள் தானாக துஷ்யந்தின் அலைபேசிக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தது... ஆனால் இந்த நேரத்தில் துஷ்யந்தை அழைப்பது சரியல்ல, என்று உணர்ந்தவர், பின் இளங்கோவை அழைத்து விஷயத்தைக் கூறினார்.

"பதிப்பகத்துல இருந்து இப்போ தான் கிளம்பினேன் வாணிம்மா.. நான் வந்து கங்காவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகறது கஷ்டம்... பேசாம டாக்டரை கையோடு கூட்டிட்டு வரேன்.. பயப்படாதீங்க.." என்று இளங்கோ சொன்னதும், கங்காவை சரியாக கட்டிலில் படுக்க வைத்து, ஈரத் துணியால் அவள் முகத்தை நன்றாக துடைத்து விட்டார்.

துவரையில் தூங்குவது போல் கண்களை மூடியிருந்த நர்மதா, படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள்... அருகில் யமுனா இல்லை... சிறிது நேரத்திற்கு முன்பு தான் தன் அன்னை வந்து யமுனாவை, "நம்ம சொந்தக்காரங்களுக்கு நாம தான் தாம்புல பை கொடுக்கனும், அதெல்லாம் இப்பவே தயார் செஞ்சு வச்சா தான் சரியா இருக்கும்... அதனால கொஞ்சம் வர்றியாமா..??" என்று அழைத்தார்... அப்போதும் தூங்கவில்லையென்றாலும், இவள் கண்களை மூடியபடி தான் படுத்திருந்தாள்... "சீக்கிரம் தூங்கினா தான், கல்யாணத்துல ஃப்ரஷா இருக்க முடியும்.." என்று யமுனா தான் இவளை படுக்க சொல்லியிருந்தாள்... ஆனால் தூக்கம் தான் வரவில்லை... இருந்தும் யமுனா தன் அன்னையோடு வெளியே செல்லும்போது கண்களை மூடியபடியே படுத்திருந்தாள்... யமுனாவும் இவள் தூங்குவதாக நினைத்து, மல்லிகாவுடன் சென்றாள்.

படுக்கையில் இருந்து எழுந்து, தான் தங்கியிருந்த அறையிலிருந்து நர்மதா வெளியே வந்தாள்... பக்கத்து அறையில் பேச்சு சத்தம் கேட்டது... யமுனா, அம்மா எல்லோரும் இங்கே தான் இருக்கனும், என்று நினைத்தவள்... அறை கதவை மூடிவிட்டு அந்த அறை பக்கம் செல்லாமல், வரவேற்பு அறை பக்கம் வந்தாள்... அங்கே ஆள் அரவம் இல்லாமல் இருந்தது... சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தவள், யாரும் இல்லாததை உணர்ந்து, மெல்ல படிக்கட்டில் ஏறினாள்..

அதே நேரம் மாடியில் தனது அறையில் விட்டத்தை பார்த்தப்படி செல்வா படுத்திருந்தான்.. அவன் எந்த மனநிலையில் இருக்கிறான், என்பதை பார்ப்பவரால் உணர முடியாத ஒரு நிலையில் அவன் இருந்தான்... அப்போது அவன் அறை கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது... இந்த நேரத்தில் யார் கதவை தட்டுவது.." என்று யோசித்தப்படியே செல்வா கதவை திறந்தான்.

வாணியும் இளங்கோவும் தவிப்போடு நின்றிருக்க, அந்த பெண் மருத்துவர் கங்காவிற்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார்...

"டாக்டர்.. பயப்பட்ற மாதிரி ஒன்னுமில்லையே..??" வாணி பயத்தோடு கேட்டார்.

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லம்மா... அவங்க அழுததா சொன்னீங்கல்ல.. அவங்க ரொம்ப ஸ்டெரியின் பண்ணிக்கிட்டதால தான் ஃபீவர் வந்திருக்கு... இஞ்செக்‌ஷன் போட்ருக்கேன், கொஞ்ச நேரத்துல ஜூரம் விட்டுடும்... கூடவே ஸ்லீப்பிங் டோஸும் கொடுத்திருக்கேன்... நல்லா தூங்கட்டும், காலையில நார்மல் ஆகிடுவாங்க..." என்றவர்,

"காலையில் எழுந்ததும் கஞ்சியோ, இல்லை இட்லியோ.. சாப்ட கொடுத்து, இந்த ப்ரிஸ்கிரிப்ஷன்ல எழுதியிருக்க, டாப்லட்டை போடச் சொல்லுங்க.." என்று இளங்கோவை பார்த்துக் கூறினார்.

"ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்... இந்த நேரத்துல சிரமம் பார்க்காம வந்ததுக்கு.."

"இருக்கட்டும் மிஸ்டர்... இது தானே என்னோட ஜாப்... சரி அவங்களை பார்த்துக்கோங்க... திரும்ப எதுவா இருந்தாலும் இப்படி அழாம, அவங்களுக்கு யாராவது ஆறுதலா இருங்க.. சரி அப்போ கிளம்பறேன்.." என்று அவர் விடைப்பெற்றார்..

"மனசுல இவ்வளவு வேதனையை வச்சுக்கிட்டு... ஏன் தான் இந்தப் பொண்ணு இப்படியெல்லாம் செய்யறாளோ... இப்பவே இப்படி அழறா.. நாளைக்கு துஷ்யந்த் தம்பிக்கு கல்யாணம் முடிஞ்சா இவ அதை எப்படி தாங்கிப்பாளோ.." என்று வாணி புலம்பினார்..

ன் அன்னையும், அத்தையும் தன் அறை வாசலில் நின்றிருப்பதை பார்த்த செல்வா.. "என்னம்மா... இன்னும் நீங்க தூங்கலையா..?? 6-7.30 முகூர்த்தம் இல்லையா..?? இப்போ தூங்கனா தானே காலையில சீக்கிரம் எழுந்திருக்க முடியும்..." என்றவன், அவர்கள் ஒரு தவிப்போடு நின்றிருப்பதைப் பார்த்து,

"என்னம்மா.. ஏதாச்சும் பிரச்சனையா..??" என்றுக் கேட்டவன், உடனே தன் அத்தையை பார்த்து, "அத்தை என்னன்னு நீங்களாவது சொல்லுங்களேன்.." என்றான்.

உடனே கோமதியே பேச ஆரம்பித்தார்... "செல்வா.. உங்க அண்ணனை காணோம்டா.. சரி போன் பண்ணிப் பார்க்கலாம்னா.. அவன் செல்போனையும் வீட்லயே வச்சிட்டுப் போயிருக்கான்.. கார் கூட எடுத்துட்டுப் போகல... உன்னோட பழைய பைக்கை தான் எடுத்துட்டுப் போயிருக்கான்..."

"அம்மா.. அண்ணன் என்ன சின்னப் பையனா..?? எங்கேயாச்சும் போயிருக்கும், கொஞ்ச நேரத்துல வந்துடும்... கவலைப்படாதீங்க.."

"இல்லடா... விடிஞ்சா கல்யாணம், இந்த நேரத்துல அவனை காணோம்னா.. மனசு கவலைப்படாதா..??"

"அம்மா... நீங்க சொல்றத பார்த்தா... அண்ணனை இந்த கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தினீங்களா..?? இந்த கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சதுல இருந்தே பார்க்கிறேன்... அண்ணனோட முகமே சரியில்ல... என்னம்மா இதெல்லாம்..??"

"டேய்... ராஜாவை நான் கட்டாயப்படுத்த முடியுமாடா..?? அவனா தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்.. என்ன, நான் அவனோட மனசு மாறிடக் கூடாதுன்னு கொஞ்சம் அவசரமா கல்யாணத்தை வச்சிக்கிட்டேன்... அதுக்குள்ள என்னன்னமோ சொல்ற.."

"அப்புறம் ஏன்ம்மா பயப்பட்றீங்க..??"

"எல்லாம் இவளால தான்டா.. இந்த கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சதுல இருந்தே, கல்யாணம் எந்தப் பிரச்சனையில்லாம நல்லப்படியா நடக்கனும்னு புலம்பிக்கிட்டே இருக்கா.. ஏதாவது சின்ன விஷயம்னா கூட பயப்பட்றா... அந்த பயம் எனக்கும் தொத்திக்குது.." என்று விஜியைப் பார்த்தப்படியே அவர் பேசினார்.

"என்ன பிரச்சனை வரப்போகுதுன்னு இப்படி பயப்பட்றீங்க அத்தை.." என்று செல்வா, விஜியைப் பார்த்துக் கேட்க,

"ஒன்னுமில்ல செல்வா.. ரொம்ப நாள் கழிச்சு நம்ம வீட்ல நல்லது நடக்கப் போகுது... அது நல்லப்படியா நடக்கனும்ங்கிற கவலை தான்... வேற ஒன்னுமில்லப்பா.."

"அத்தை... நீங்கப் பயப்பட்ற மாதிரில்லாம் ஒன்னும் ஆகாது கவலைப்படாதீங்க... அண்ணன் எங்கேயும் போயிருக்காது... சும்மா தூக்கம் வரலன்னு வெளியப் போயிருக்கும்... ஒருவேளை வேலை சம்பந்தமா கூட யாராவது பேசியிருக்கலாம்... அது சம்பந்தமா கூட போயிருக்கலாம்... இருங்க நான் மேனேஜர்க்கிட்ட பேசிட்டு வரேன்..." என்று அலைபேசியில் நம்பரை அழுத்தியப்படியே கொஞ்சம் தள்ளிச் சென்று பேசினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.