(Reading time: 14 - 28 minutes)

12. தவமின்றி கிடைத்த வரமே - லேகா

Thavamindri kidaitha varame

னிதர்களுக்கு இடையில் உள்ள உறவு விசித்திரமானவை.  சுவாரசியமானதும் கூட.  சிலர் அருகில் இருந்தாலும் அயல் கிரகவாசிகளாக ஒதுங்கி நிற்பர்.  இன்னும் சிலரோ, அதற்கு நேர்மாறாக, தொலைவில் இருந்தாலும் என்றும் நமக்கு துணை நிற்பர்.  அத்தகையவர்கள் அனைவரின் வாழ்விலும் உண்டு.  ப்ரியாவிற்குமே.  அவள் தந்தை எப்போதுமே அவளிடம் அன்பு பாராட்டியதில்லை.  அவரின் அன்புக்கு ஏங்கியவள் அது கிட்டாதபோது ஏற்பட்ட ஏமாற்றத்தை முயன்று மறைத்தாளாயினும், வலிகள் மட்டும் வடுகளாய்.  இன்று அவள் அருகே இருப்பவன், அந்த வலிக்குத் தான் அறியாமலேயே மருந்திட்டவன்.  ஆனால், இப்போது?  அவளுடனான அவன் நிலைப்பாடுதான் என்ன? ஒன்றுமே அவள் கண்டறியக்கூடாது என்றே பாறை போன்ற இறுகிய முகத்தைக் கொண்டிருக்கிறான் போல.

‘என்ன நினைக்கிறான் இவன்?’ அனைவரையும் பிரிந்து வரும் துக்கத்திலிருந்து சிறிதளவு விடுபட்டவள் மனதில் அதன் பின் எழுந்த எண்ணம் இதுவே.  ஆனால், அவன் முகம் கண்டு அவளால் எதுவுமே அறிந்து கொள்ள முடியவில்லை அவளால்.

இப்போதேனும் அறிய முடிகிறதா? என்ற நப்பாசையில் மறுபடியும் அவனை நோக்கினாள் பெண்.  ம்ம்ஹூம்… கிரேக்கக் கடவுளே சிற்பமாக அமர்ந்திருந்தது போல் இருந்தது அவன் தோற்றம்.  சிற்பம் என்றே நினைத்திருப்பாள், ஸ்டியரிங்கை வாகாக திருப்பி ஓட்டும் கைகள் அசையாவிட்டால்.  அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அந்த மங்கை.

சிற்பமில்லை!! இவன் சிற்பமில்லை.  கண்டிப்பாக இல்லை.  அவை கூட ஏதேனும் உணர்ச்சியை வெளிப்படுத்துமே!  இவன் அதைக் கூட காட்டாமல் கல் போன்றல்லவா இருக்கிறான்?  ஆம்… அவன் கல்லே தான்!

தன் நிலையை நினைத்து வருந்தியவளுக்கு என்றோ எழுதிய

“உன் நேசம் என் மீது தோழமையாய்

என் நேசம் உன் மீது தோழமை என்னும் போர்வைக்குள்!!!”

கவிதை நினைவிற்கு வந்தது.  அவள் எண்ணமெல்லாம், அப்போது நினைத்ததுபோல அவன் நேசம் வாழ்நாள் முழுமைக்கும் நண்பன் என்னும் எல்லைக்கோட்டோடே நின்றிடுமா? என்றதிலேயே இருந்தது.

அவ்வாறானால்? வலித்தது அவளுக்கு.  நேசித்தவனோ அவள் அருகில், எல்லையில்லா காதலில் திளைக்கும் அவள் மனம்; ஆனால், அதன் காரணமானவனோ, என்ன செய்யப்போகிறான் என்றே அவள் அறியவில்லை.  காதலிப்பது ஒருபுறம் இருக்கட்டும், முதலில் அவளை மன்னிப்பானா?  என்ன இருந்தாலும், அவனைப் பற்றி எல்லோர் முன்னும் போட்ட பழி போட்டதுதானே!

கவலையும் கலக்கமுமாய் கண் மூடியவள், பற்பல எண்ணங்களில் மூழ்கிப்போனாள் ப்ரனிஷ் அவளை அழைக்கும்வரை.

ப்ரனிஷின் குரலில் கண் திறந்தவள், அவர்கள் சேரவேண்டிய இடம் வந்துவிட்டது என்று நினைத்து பதைப்பதைத்து எழுந்தாள்.  அவளை ஆசுவாசப்படுத்தியவன், “இங்கே சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு செல்லலாம்” எனக் கூற, அதற்கு உடன்பட்டு அவனுடன் சென்றாள்.

சிறிது நேரத்தில் இருவரும் வீட்டை அடைந்தனர்.  அவர்கள் இருவரையும் வரவேற்றதோ, பூட்டிய கதவுகளே!  வீட்டில் யாரும் இல்லையாதலால் வேலையாட்களுக்கு விடுமுறை அளித்திருக்க, ஒருவருமே இல்லை அங்கே.  அதுவுமே ஒரு வகையில் இப்போது வசதியே என்று தோன்றியது இருவருக்கும்.  தற்போது எந்த உபசாரத்தையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள், முக்கியமாக அவன் இல்லை!!!

கதவுகளைத் திறந்தவன் “வா…!” என்ற ஒற்றைச் சொல்லோடு உள்ளே சென்றான்.  அவனுக்குப் பின்னே தன் வலது கால் எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்த ப்ரியாவின் மனம் வாடியது, இவ்வாறு புகுந்த வீட்டினுள் நுழைய வேண்டியதை எண்ணி.

எப்பொழுதும் கவுண்டர் கொடுக்கும் ப்ரியாவின் அந்த துடுக்குத் தனமான சைட் இவ்வளவு நேரம் தான் கொண்டிருந்த மௌன விரதத்தைக் கைவிட்டு, மீண்டும் லைட்டாக கடுப்படித்தது அவளை, “நீ செய்த காரியத்துக்கு அவன் என்ன செய்வானோன்னு நான் பயந்துட்டு இருக்கேன்.  நீ என்னமோ ஆரத்தி எடுக்கலைன்னு கவலைப்படறே!” என்று.

“என்னென்ன நடக்கப்போகிறதோ!” என்று நினைத்துவிட்டு, சிறு பயத்துடனும், அதையும் தாண்டிய எதிர்பார்ப்புகளுடனும் அவனை நோக்கினாள்.

அப்போது ப்ரனிஷ் இருவருடைய பைகளையும் சுமந்துகொண்டு மாடியேறிக்கொண்டிருந்தான்.  உடனே அவன் பின்னே ப்ரியாவும் தொடர, அவர்கள் சென்று சேர்ந்தது, ப்ரனிஷின் அறை.  அங்கே பைகளை ஓரமாக வைத்தவன், “நாளை வேலைக்கு ஆளை வரச் சொல்லி ரூம் ரெடி பண்ண சொல்றேன்.  இன்னைக்கு இங்கேயே தங்கிக்கோ.  நான் இதோ வந்துவிடுகிறேன்” என்று அவளுக்குத் தனிமை கொடுத்து விலகிச் சென்றான்.

அவன் தன்னை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டானோ?? என்று எண்ணினாள் அவள்.  ஆனால், அவள் மூளையோ, காலையில் திடீரென்று ப்ர்னிஷுக்கு அதிர்ச்சி, அதனைத் தொடர்ந்து திருமணம் என தான் தந்தவைகளைக் கடந்து அவனும் சிந்திக்க சிறிது அவகாசம் வேண்டும் என்று அறிவுறுத்தியது.  அதன்படி, அவன் மனம் தெளிவடையும்வரை அவசியமானதற்கன்றி அவனைத் தொந்தரவு செய்யாதிருக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.  இவ்வாறு அவள் கொண்ட எண்ணம் இன்னும் இரண்டு நாளில் காற்றில் பறக்கும் என அவள் அறியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.