(Reading time: 14 - 28 minutes)

அறையை நோட்டம் விட்டவள், உடை மாற்ற எண்ணி மாற்றுடையை எடுத்து குளியலறைக்குள் சென்றாள்.

சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவள், ப்ரனிஷ் இன்னும் அறையினுள் வராதிருக்கக் கண்டு, அவனைத் தேடி வெளியே செல்ல அடியெடுத்து வைக்க, சரியாக உள்ளே நுழைந்தான் அவன்.

ப்ரியாவைக் கண்டு, “இன்னும் தூங்கலை?  காலையில் இருந்து டயர்டா இருப்ப.  போய் தூங்கு” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவள் தூங்க படுக்கையையும் தயார் செய்தான்.

“தூக்கம் வரலை” என சொல்லப்போன ப்ரியா,ப்ரனிஷின் செய்கை ஒவ்வொன்றையும் கண் இமைக்க மறந்து பார்த்தவாறு நின்றிருந்தாள் ப்ரியா.  ‘இப்போதுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறான்.  இப்போது எதுவும் பேச வேண்டாம். காலையில் பார்த்திக்கொள்ளலாம்.  ஆனால், இவன் செய்யும் ஒவ்வொன்றிலும் முன்பிருந்த அதே அக்கறை தெரிகிறதே!  நம்மேல் கோபமில்லையோ?’ என்று எண்ணம் கொண்டது காதல் கொண்ட மனம்.  அப்போதும் அவன் முகம் மட்டும் எந்த உணர்வையும் வெளிக்காட்டமாட்டாமலே இருந்தது.

ப்ரனிஷ் அழைக்க, தூக்கம் வரவில்லையென்றாலும் அவனுக்காக சென்றாள் ப்ரியா.  அவள் கண்மூடும் வரை அருகில் இருந்தவன், அந்த அறையிலேயே இருந்த பால்கனிக்கு சென்று கம்பிகளில் சாய்ந்தபடி நின்று இருளை வெறித்தான்.

இதுவரை எந்த உணர்வையும் காட்டாத அவன் முகம், இப்போது அத்தனையையும் காட்டியது.  என்ன உணர்வு அது?  குற்றவுணர்ச்சி!  அதுவே அவன் முகம் காட்டும் பாவம்!

அவன் மனமோ, அன்றில் இருந்து இன்று வரை நடந்ததை நினைத்துப் பார்த்தது.  வாருங்கள் நாமும் பயணிப்போம்.

ண்டாயுதபாணி ஐயா ஒரு வார்த்தை சொன்னால், அதுவே பின்பற்றப்படும்.  அத்தனை மதிப்பு மிக்கவர்.  அவரது ஆருயிர் மனைவி வள்ளியம்மாள்.  ஓருயிர், ஈருடல் என்பார்களே, அதனை இவர்களைப் பார்த்தே கண்டுபிடித்திருப்பர் என அடித்துக் கூறலாம்.  அந்த இணைபிரியா தம்பதிகளின் காதலுக்கு சான்றாக மூன்று மகவுகள் பிறந்தன, இரண்டு ஆண், ஒரு பெண்; விஷ்வநாதன், கைலாசநாதன் மற்றும் பார்த்தவி.

ஒரே பெண் என்பதால் மிகவும் செல்லம் பார்த்தவிக்கு.  பல வருடங்களாக மகள் வேண்டுமென்று கோவில் கோவிலாக சென்று வேண்டியதன் பலன் அல்லவா அவர்?  ஆம், பார்த்தவிக்கும் அவரது அண்ணன்கள் இருவருக்கும் ஏறத்தாழ பத்து, பன்னிரெண்டு வயது வித்தியாசம்.  அதனாலேயே, அவர்கள் இருவருமே பார்த்தவிக்கு அண்ணன்களாக மட்டுமல்லாமல், தந்தையைப் போலவே அவளைப் பார்த்து வந்தனர்.

பாராட்டி, சீராட்டி, பாசம் காட்டி நற்பண்புகளுடன் வளர்த்தவர்கள் தங்கள் பெண்ணிற்கு இந்த உலகத்தின் இயல்பைப் பற்றிக்கூறவில்லை.  அது எத்தகைய தவறென்று அவர்கள் அறிந்தபோது எல்லாமே கைமீறிப் போயிருந்தது.  ஆம்… காதலென்னும் வலையில் தன் பதினெட்டாவது அகவையில் வீழ்ந்தாள் பார்த்தவி.  அந்தக் காதல் அவரை தன் குடும்பத்தை விட்டும் ஊரை விட்டும் அவர் காதலித்தவனுக்காக அந்த அர்த்த ராத்திரியில் வெளியேற வைத்தது.

நடந்ததைப் பற்றி அறிந்து அவர் வீட்டினர் அவரைத் தேடத் துவங்கியபோது, அவர்களை விட்டு வெகு தொலைவிற்கு சென்றிருந்தார் பார்த்தவி, அவர்களுடனான உறவிலுமே!

தன் மகள் செய்த காரியத்தைத் தாங்கமுடியாத தண்டாயுதபாணி, அன்றே உயிரை விட்டார்.  அவரையே அச்சாரமெனக் கொண்டு சுழன்ற அந்த குடும்பம் உருக்குலைந்துதான் போனது.  ஒரு பக்கம் கணவனின் மறைவு, மறுபக்கம் பெண்ணைப் பற்றிய கவலை என இடிந்து போயிருந்தார் வள்ளியம்மாள்.  பெரியவரான விஷ்வநாதனும் என்ன தாயை எப்படி சமாதானப்படுத்துவது என்று ஒன்றும் புரியாமல் நின்றிருந்த வேளை,அன்னையை சமாதானப்படுத்தியதோடு, தந்தையின் திடீர் பிரிவால் ஏற்பட்ட அந்த தடுமாற்றத்தை சரி செய்ய இறங்கினது இளையவரான கைலாசநாதனே!

கைலாசநாதனைக் கண்டு அவர் குடும்பமும் மலைத்துதான் போனது.  ஏனென்றால், அனைவரை விடவும் பார்த்தவியின் மீது பாசம் வைத்தது அவர் தான்.  பார்த்தவிக்கும் அவ்வாறே.  அதனாலேயே அவரது இந்த மாற்றம் அனைவரையும் வியக்க வைத்தது.  அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து தந்தை விட்டுச் சென்ற பொறுப்பை சிறப்பாக நடத்த முனைந்தனர்.  அது வெகு விரைவில் அவர்களுக்கும் வசப்பட்டது.  ஆனால், கௌரவம், மரியாதை etc, etc?

சரியோ தவறோ, ஒன்று நடப்பதற்கென்றே காத்திருந்து அது நடந்ததும் பூதக்கண்ணாடி என்ன, அதிநவீன microscope கொண்டு தவறு எங்கேனும் இருக்குமா என ஆராயும் இந்த சமூகத்தில் பார்த்தவி செய்தது மன்னிக்க முடியாத குற்றமல்லவா?

‘அதிகம் செல்லம் கொடுத்தால் இதுவே நடக்கும்’ என ஒவ்வொரு முறையும் குற்றம் சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் அலைந்தது அவர்களைச் சுற்றி.  அவை நாளடைவில் புது காரணங்கள் வர கலைந்து போனாலும், அவர்கள் கூறியதெல்லாம் தேங்கியது கைலாசநாதனின் மனதில்.  மனதில் தேவையில்லாத குப்பைகள் சேர்ந்தால் வாழ்க்கை நரகமாகிவிடும் அல்லவா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.