(Reading time: 14 - 28 minutes)

அதன் எதிரொலி, கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அவர்கள் முகவரிக்கு வந்த பார்த்தவி என்னும் பெயரைத் தாங்கி ஒரு கடிதம் வந்தபோது தெரிந்தது.  அந்தக் கடிதத்தை சுக்குநூறாகக் கிழித்தெறிந்தவர், அன்னையிடமும் அண்ணனிடமும் பார்த்தவியுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளக்கூடாதென்று கண்டிப்பாகக் கூறினார்.

பின்பும் பலமுறை வந்த கடிதங்கள் பிரிக்கப்படாமலே குப்பைக்கூடைக்குச் சென்றது; அழைப்புகளுக்கும் அதே!  என்றேனும் அதனை எடுத்திருக்கலாமோ?

சில காலத்தில் அந்த அழைப்புகளும் நின்று போனது.  தமையன்கள் இருவருக்கும் திருமணமாகி பிள்ளைகளுடன் மகிழ்வாக வாழ்ந்தபோது அடுத்த இடியாகத் தாக்கியது தாய் வள்ளியம்மாளின் மறைவு.  இறுதி காரியங்கள் அனைத்தும் மகன்கள் இருவருமே செய்து முடித்துவிட்டனர்.

எத்தனையோ பேர் எவ்வளவோ எடுத்துக்கூறியும் தங்கைக்கு தகவல் சொல்ல மறுத்துவிட்டார் கைலாசநாதன்.  விஷ்வநாதனும் கூறியும் அவர் கேட்கவில்லை.  ஏனோ இந்த லட்சுமணனுக்கு தன் ராமனின் சொல்லை இரு விஷயங்களில் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

அதன்பின், விருப்பப்பட்ட வேலைக்கு அழைப்பு வர, மனைவி மகளுடன் நகரத்துக்கு வந்தார் கைலாசநாதன்.  இத்தனை வருடங்கள் ஆனபோதும் தங்கை செய்தது மன்னிக்க முடியாத குற்றமாய் அவர் மனதில் கனன்று கொண்டே இருந்தது.  அந்த தீயின் வெண்மை பிரியாவைத் தாக்கியது.

ஆம்… அதன் வித்து, ப்ரியா பிறந்த அன்று அவள் பாட்டி தன்னையறியாமலேயே கூறிய “நம்ம கண்ணம்மாவை (பார்த்தவியை செல்லமாக அழைக்கும் பெயர்) அப்படியே உரிச்சு வைத்த மாதிரியே இருக்கா என் பேத்தி” என்ற வார்த்தைகள் தாம்.

அவை எதார்த்தமாக கூறப்பட்ட வார்த்தைகள் என்று உணர முடியாமலும் தன் தங்கை செய்த துரோகத்தை மன்னிக்க முடியாமல் தவித்த அண்ணனாக இருந்த கைலாசநாதனால் அன்னையின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அவர் மனதில் சூழ்ந்து கொண்டது ஒரு பயம், எங்கே தன் தங்கையால் நடந்தவை யாவும் தன் பெண்ணாலும் நடக்குமோ என்று.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று கூறுவதுண்டு.  அன்றைய தினத்திலிருந்து ஒவ்வொன்றிற்கும் ப்ரியாவை பார்த்தவியுடன் ஒப்பிட்டுப் பார்த்தது அவர் மனம்.  அவர் நெஞ்சத்தில் குடிகொண்டிருந்த சஞ்சலத்தின் காரணமாக எவ்வளவு பாசம் தன் பெண் மீது இருந்தாலும் அதனைக் காட்டாமலேயே இருந்துவிட்டார்.  சூடு கண்ட பூனையின் ஒதுக்கம் அது!!

ஆனால், அவரும் மாறினார் தான்… எத்தனையோ வருடங்களாக தன்னோடே போரிட்டு, பயத்தை ஒதுக்கிவைத்து சிறிது சிறிதாக ப்ரியாவிடம் பழக ஆரம்பித்தார் அவர்.  அதுவும் பாழாகிப்போனது ப்ரியாவின் ஒரு செயலால்…!!!

அது ப்ரியா பதினொன்றாவது படித்தபோது நடந்தது.  அவள் வகுப்புகள் முடிந்து தோழிகளுடன் அரட்டையடித்துக்கொண்டிருந்த போது, அனைவரும் ஒரு புதுவிதமான விளையாட்டை விளையாடலாம் என்று விளையாடத் தொடங்கினர்.

எது தன் வாழ்க்கையில் உண்மையோ, அதற்கு நேர் எதிராக உரைக்க வேண்டும்.  அதாவது, ஒருவர் மற்றவரைப் பார்த்து கேட்கும் கேள்விக்கு பதில் கூறுபவர் எதிர்மறையாக பதிலளிக்க வேண்டும்.  உதாரணமாக, ‘நீ நாளை பள்ளிக்கு வரமாட்டாயா?’ என்ற கேள்விக்கு வருவேன் என்றால் ‘வரமாட்டேன்’ என்றும், வரமாட்டேன் என்றால் ‘வருவேன்’ என்றும் கூறவேண்டும்.

ப்ரியாவிடம் அவளது திருமணம் எப்படி நடக்கும் என்று கேட்கப்பட்டபோது, கண்டிப்பாக அது பெற்றோர் நிச்சயித்த திருமணமாகவே இருக்கும் என்ற வகையில், “கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்வேன்” என்று கூறினாள்.  அவள் அவ்வாறு கூறியது, சரியாக அவளை அழைத்துசெல்ல வந்த அவள் தந்தை காதிலா விழவேண்டும்?  அவர் அதன் பின் ஒரு நொடி கூட அங்கு நிற்காமலா திரும்ப வேண்டும்?  அவ்வாறு தாமதித்திருந்தால் தெரிந்திருக்குமே இது வெறும் விளையாட்டென்று.  இதுதான் விதி என்பதா? 

ஒருவர் மீது வைத்த பாசத்தால் ரணமாகியவர், அதன் வடுவால் தன் பெண்ணின்மீது கொண்டுள்ள பாசத்தை மறைத்து வைத்திருந்தவர், அது தவறென்று உணர்ந்து தன்னை சரிசெய்ய முயலும் சமயத்தில், ‘நானும் அப்படியே’ என்பதுபோன்று ப்ரியாவின் செய்கை அமைந்துபோனது.  அதன்பின் ப்ரியாவிடம் இன்னும் இறுகிப்போனார் கைலாசநாதர்.

இன்னும் தெளிவாக சொல்லப்போனால், நம் அன்றாட வாழ்வில் இதுபோல கண்டிருப்போம்.  ஒன்றுமே இல்லாதவற்றை பெரிதுபடுத்தி, அதனை மனதில் வைத்துக்கொண்டு வாழ்பவர் பலபேர்.  அதேபோல, தன் தங்கையைப் போல ப்ரியாவும் இருக்கிறாள் என்று தாயார் யூகமாக கூறியது கைலாசநாதரின் மனதில் ஒரு சந்தேகத்தை உண்டுபண்ணியது ‘இவள் தங்கையின் மறு உருவமோ?’ என்று.  ப்ரியா வளர வளர, அவரது சந்தேகமும் வளர்ந்து அவரைத் தன்னுள் சுரக்கும் பாசத்தை வெளிகாட்டவிடாமல் தடுத்துவந்தது.  ஒருகட்டத்தில், மகளை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது தவறென்று தானே திருந்தி அவர் தன்னை மாற்ற முயற்சித்த நேரத்தில், ப்ரியாவின் பேச்சு, அவரது யூகம் சரியே என்று அவரை நினைக்க வைத்தது.  அன்று வரை சிறிதளவேணும் ஒதுக்கம் காட்டாமல் இருந்தவர் அதிலிருந்து முற்றிலும் விலகிப் போனார் அவளிடமிருந்து. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.