(Reading time: 13 - 26 minutes)

நாராயணன் கூறியது அமேலியாவிற்கு புரியவில்லை. அவளுக்கு புரியும்படி சைகையில் கூறவும் நாராயணனுக்கு கூச்சமாக இருந்தது. "போய் தூங்கு" என்றார்.

புரியாத பார்வையை நாராயணன் மீது வீசினாள் அமேலியா.

"தூங்குமா"

அமேலியாவிற்கு புரியவில்லை. 

"இது என்னடா வம்பா போச்சு. நடுநிசியில பாடம் எடுக்குறதா என் வேலை" என வெறுப்படைந்த நாராயணன், இறுதியாக, தூங்கு என்பது போல் சைகையில் கூறினார்.

அமேலியா சிரித்தாள். "முதலில் நீங்கள் உறங்குங்கள்" என்பது போல் சைகையில் கூறினாள்.

நாராயணனுக்கு புரியவில்லை.

"என்னது?"

"நீங்கள் தூங்குங்கள்" என மீண்டும் சைகையில் உரைத்தாள் அமேலியா.

"என்னவோ" என முணுமுணுத்த நாராயணன் படுக்கையில் படுத்தார்.

நாராயணனின் கால்களை மெதுவாகப் பிடித்துவிட்டாள் அமேலியா. 

திடுக்கிட்ட நாராயணன், "என்ன இதெல்லாம்? முதல்ல நீ இங்கிருந்து கிளம்பு" என கத்தினார்.

அவர் கூறியதை எதுவும் காதில் வாங்காத அமேலியா, ஆள்காட்டி விரலை தன் உதட்டில் வைத்து, 'பேசாமல் தூங்குங்கள்' என உரிமையோடு மௌனமாக கூறி கால்களை பிடித்துவிட்டாள்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக படுத்தார் நாராயணன். அவருக்கிருந்த உடல் களைப்பில் அமேலியா கால்களை பிடித்துவிட்டது சுகமாக இருந்தது. தன் விழிகளை அமேலியாவின் மேல் ஓடவிட்டார். அவளது ஆடையில் மஞ்சள் நிற சாயம் ஒட்டிக்கொண்டிருப்பதை கண்டார். அந்த வண்ணம் அப்பொழுதுதான் பூசப்பட்டிருக்கிறது என ஆடை மேலிருந்த ஈரப்பசை காட்டிக் கொடுத்தது.

'இந்த நேரத்துல என்ன வரஞ்சிட்டு இருப்பா?' என தனக்குள்ளாகவே கேள்வியைக் கேட்டுக் கொண்டார் நாராயணன்.

சில நிமிடங்கள் யோசனையுடனேயே விழித்திருந்த நாராயணன் .தன்னையறிமால் உறங்கத் தொடங்கினார். நாராயணன் முழுதாக உறக்கத்திற்குள் செல்லும்வரை கால் பிடித்து விட்டுக்கொண்டிருந்த அமேலியா, பின்னர் மெதுவாக அங்கிருந்து நழுவினாள்.

சமையலறைக்குச் சென்று சூடாக தேனீரை தயாரித்தவள், தேனீர் கோப்பையோடு மாடிக்குச் சென்று மீண்டும் ஓவியம் வரைய ஆயத்தமானாள். நடுங்கச் செய்யும் குளிரில், சூடான தேனீர் உடலிற்கு லேசான கதகதப்பைத் தந்தது மட்டுமில்லாமல் உறக்கத்தையும் கட்டுப்படுத்தி புத்துணர்ச்சியைத் தந்தது.

இமைகளை மூடி, தான் வரையப்போகும் ஓவியத்தை கற்பனை கலந்து கண் முன்னே கொண்டுவந்தாள். தூரிகையை எடுத்து அனாயசமாக ஓவியத்தை வரையத் தொடங்கினாள்.

திடீரென, கெட்ட கனவில் இருந்து மீண்டெழுந்த நாராயணன் மூச்சு வாங்கியபடியே எழுந்து அமர்ந்தார். "என்ன கண்றாவி கனவு இது" என தனக்குத்தானே கூறிக்கொண்டவர், தன் அறையைச் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, தான் கண்ட கனவை நினைவுபடுத்த முயற்சி செய்தார். திடீரென பதறி எழுந்ததால், கனவில் கண்டதை முழுமையாக நினைவுகூர முடியாமல் குழம்பினார்.

'வசந்த் ஏதோ ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தான். அந்தப் பெண்ணும் அவனுடைய காதலை ஏற்றுக்கொண்டாள். இருவரும் சிரித்தார்கள்'. ஆனால், கனவில் வந்த பெண் யாரென நினைவுக்கு வரவில்லை.

தன் அறையை விட்டு வெளியே வந்தவர், ஹாலில் இருந்த தொலைக்காட்சியை பார்த்தார். நீண்ட நாட்களாய் தொலைக்காட்சியைக் காணாதது போல் அவருக்குள் ஓர் உள்ளுணர்வு. தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்த மேஜையில் உள்ள டிராயரை திறந்து ஒரு பழைய பட சிடியை எடுத்து பிளேயரில் போட்டுவிட்டு சோபாவில் வந்தமர்ந்தார்.

அவரது விழிகள் ஹாலில் தனியாகப் படுத்திருந்த நிலாவை நோக்கின. குழந்தையை தனியாக விட்டுவிட்டு அந்த அமேலியா பொண்ணு எங்கே போயிருப்பா என மனதில் எண்ணியபடி தொலைக்காட்சியில் தன் கவனத்தை செலுத்தினார். சிறிது நேரம் மட்டுமே அவர் கவனம் நிலைத்திருந்தது. அவரது எண்ணம் முழுவதும் அமேலியாவையே சுற்றின.

அந்நேரத்தில், வீட்டிற்கு வந்த வசந்த், தன் அப்பா ஹாலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். நாராயணன் முகத்திலும் அதே அதிர்ச்சி ரேகைகள் படர்ந்தன. வசந்த் மாடியில் உறங்கிக்கொண்டிருப்பான் என நினைத்திருந்தவருக்கு, அவன் வாசல் கதவைத் திறந்து வந்தது ஆச்சர்யத்தை உண்டுபண்ணியது.

தொலைக்காட்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. 

"உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய்விட்டன. இரண்டும் சந்தித்தபோது பேசமுடியவில்லையே......"

உடனே, தொலைக்காட்சியை அணைத்த நாராயணன் வசந்தை நோக்கினார்.

"எங்கப்பா போயிட்டு வர? அதுவும் இந்த நேரத்துல?"

"தூக்கம் வரலைப்பா. சும்மா காபி சாப்பிட போனேன்"

"காபி சாப்பிட கோட் சூட்டுல தான் போணுமா?"

"புரியலப்பா"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.