(Reading time: 19 - 38 minutes)

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. ஆனா அப்பறம் பேசிக்கலாம்... இப்போ வீட்டுக்கு போகலாம் வா...”

“முடியாது திரும்பி நான் வீட்டுக்கு வர மாட்டேன்...” என்றாள் திடமாக..

“உளறாத கீர்த்தி... வீட்ல எல்லாரும் திரும்பி உன்ன காணும்னு வேதனை படணும்னு நினைக்குரியா...”

“ஆமா.. எல்லாரையும் நான் தான் அழவைக்குறேன் வேதனைப்படுத்துறேன்... என்னால தான் எல்லாரும் கஷ்ட்டப்படுறாங்க அதுனால தான் நான் போறேன்னு சொல்றேன்..” என்று கத்த துவங்கினாள்...

அவளது குரலில் ஒரு நொடி சுற்றி முற்றி பார்த்தவன்... “கத்தாத கீர்த்தி.. இந்த நேரத்தில் தெரிஞ்சவங்க உன்ன இந்த நிலமையில பார்த்தாங்கன்னா நல்லா இருக்காது” என்று பல்லை கடிந்து அடிக்குரலில் கூறிவிட்டு... கோவத்தை கட்டுபடுத்திக்கொண்டான்.

அவள் பேசாமல் அமைதியாய் நிற்கவும், அவனே தொடர்ந்தான்..

“சரி... வா எதுவா இருந்தாலும் வீட்டுல போய் பேசிக்கலாம்...” என்று அவன் அடியை எடுத்துவைக்க அவள் நகராமல் நின்றாள்...

“இப்ப என்னதான் பண்ணுற ஐடியால இருக்க...”

“நான் போகணும்..”

“எங்க???”

“எங்கயோ??”

“எங்கயோன்னா??? திரும்பி...” என்று கோவத்தில் ஆரம்பித்தவன் மீண்டும் நிறுத்தினான்...

ஒருநிமிடம் அவனுக்கு எப்படி தெரிந்தது என்ற அதிர்ச்சி தோன்ற... ஒருவேளை அன்னையே சொல்லி இருப்பாரோ.. அல்லது தங்கை... அவர்கள் வாய்விட்டு மற்றவர்களிடம் புலம்பும் அளவிற்கா அவர்களை வேதனையில் ஆழ்த்துகிறோம் என்று அதற்கும் ஒரு காரணம் கண்டது மூளை.. தானாக உடல் வேர்த்து நடுங்க... “ஆமா திரும்பி அந்த கேட்டவன் கைல தான் மாட்ட போறேன்.. போதுமா... இது தானே வேணும்.. எங்கயோ போறேன்.. என்னாவது ஆகுறேன்..” என்று பித்து பிடித்தவள் போல புலம்ப ஆரம்பித்தாள். அவளது நிலையை கண்டவனுக்கு தன் மீதே கோவம் வந்தது..

“சாரி... தப்புத்தா... சரி வா.. இப்படி நடுரோட்ல நிக்க வேண்டாம்.. அங்க பார்க்ள ஒக்காரு...” என்று பொறுமையாக கூட்டி சென்றான்.. அவன் கூறியபடியே பின்னால் சென்றவள் அங்கே அமர்ந்ததும் தன் எண்ணத்தில் இருந்து மாற கூடாது என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டாள்.

“இப்ப சொல்லு என்ன பிரச்சன...”

அவனை விநோதமாக பார்த்துவிட்டு “வாழ்க்கையே பிரச்சனை தான் விரேன்.. என்னால வாழ முடியல...”

“அது சீக்கரத்துல ஆருர காயம் இல்ல கீர்த்தி எனக்கு புரியுது.. ஆனா நான் கேட்குறது இந்த முடிவ..” என்று அவள் கையில் வைத்திருக்கும் பையை காட்டினான்.

அவன் குறிப்பிடுவதை பார்த்துவிட்டு அதனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு.. “எனக்கு போகணும் நான் வீட்ல இருக்க வரைக்கும் யாருமே நிம்மதியா இருக்க மாட்டாங்க..”

“நீ இல்லாட்டி மட்டும் அவங்களால நிம்மதியா இருக்க முடியுமா...”

சிறிது நேரம் அனைவரும் கண்முன்னால் வந்து போக தொண்டையை சரிசெய்துக்கொண்டு “தெரியலை ஆனால் பழகிடும்.. நான் இல்லாட்டியும் மித்ரா இருக்கா.. இன்னைக்கு அம்மாவுக்கே என்ன பிடிக்கலை மித்ராவுக்கும் தான்.. ஏன் எனக்கே என்ன பிடிக்கல.”

“அப்படிலா இல்லப்பா... பாரு... உன் மேல அவங்களுக்கு அவ்வளவு அக்கறை இருக்கு உன்ன திட்டிட்டு அம்மா அவ்வளவு கஷ்ட்டபட்டாங்க.. நீ இப்போ போனால் அவங்க இன்னும் வேதனை படுவாங்க தானே.. என்று சிறு குழந்தைக்கு சொல்வது போல கூறினான்.

அவன் பேச பேச இனிமையாக தான் இருந்தது.. ஆனால் நம்முள் இருக்கும் தீய எண்ணங்கள் விட்டால் தானே... எவ்வளவு பேசியும் கடைசியாக வா வீட்டுக்கு போகலாம் என்று வரும் இடத்தில் முடியாது என்றே நின்றாள்.

அவள் பேச பேச தான் தன்னை பற்றி எவ்வளவு தாழ்த்தி நினைத்துக்கொண்டு இருக்கிறாள் என்று புரிந்தது... இப்போது வீட்டில் சென்று விட்டாலும் அவர்களுக்கு மீண்டும் ஒரு சுமையாக தான் இருக்கும்... பெண்கள் விடுதி என்றால் தெரிந்தவர் என்று சொல்லிக்கொள்ள பெரிதாக நல்ல பெண்கள் நட்பு வட்டாரம் யாரும் இல்லை... எல்லாம் தேவைக்கு பழகும் பெண்கள் தான் அதுவும் இவளது விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு இல்லை என்று தோன்றியது.

சிறிது நேரம் அங்கு அமைதியே நிலவியது... பொறுமையாக அன்னை கூறியதை நினைத்து பார்த்தான், என்ன புத்திமதி கூறினாலும் இப்போது அவளுக்கு புரியாமல் போகவும் வாய்ப்பிருக்கு என்று கூறியது நினைவு வர... ஒரு பெருமூச்சினை எடுத்தவன் எழுந்துக்கொண்டான்... “ஹ்ம்ம்.. சரி வா...”

அவன் அழைக்கவும் நாம் இத்தனை முறை தடுத்தும் வீட்டுக்கு அழைத்து செல்வதிலேயே இருக்கிறானே என்று கோவம் வர.. “என்னால வீட்டுக்கு வர முடியாது விரேன்...” என்று கொஞ்சம் கடுமையாக கூறினாள்..

“எம்மா தாயே... உன்ன உங்க வீட்டுக்கு கூப்பிடல... எழுந்திரி..”

“பின்ன எங்க??”

“அதை அங்க போய் தெரிஞ்சிக்கோ” என்று கையில் இருந்த பையை சட்டென இழுத்து வாங்கிக்கொண்டு முன்னே சென்றான்.

அவன் வேகமாக கூட இல்லை, சாதரணமாக இழுத்ததிற்கே கையில் இருந்தது போய்விட்டதே... அவ்வளவு தானா தெம்பு... நமக்காக தான் பொறுமையாய் இருந்தான் போலும் என்று நினைத்துக்கொண்டு அவனோடு நடந்தாள்.

வண்டியில் அவளை ஏற்றிக்கொண்டு பறக்கத்துவங்கிய நேரம் பாவம் விடிந்து போயிருந்தது.. பல கண்கள் பார்ப்பதை உணரும் மனநிலையில் ஏனோ இருவருமே இருக்கவில்லை.  

தொடரும்

Episode # 05

Next episode will be published as soon as the writer shares her episode.

{kunena_discuss:1082}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.