(Reading time: 14 - 28 minutes)

"பரவாயில்லப்பா, மேகலாவை டாக்ஸில அனுப்பிடு"

"சரிப்பா"

"வா போகலாம்" என்று அமேலியாவை அழைத்தாள் மேகலா.

'ஒரு நிமிடம்' என்பது போல் சைகை காட்டிவிட்டு உள்ளே சென்று, தான் கொண்டுவந்த வில்லியம்ஸின் ஆல்பத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்.

"நல்ல படியா ஊருக்கு போயிட்டு வாங்க. கண்டதையும் சாப்பிடாதிங்க. உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க. மருத்துவர் கொடுத்த மருந்துகளை வேளா வேளைக்கு சாப்பிடுங்க. நான் சொல்லுறது உங்களுக்கு புரியாதுனு தெரியும், இருந்தாலும் சொல்லணும்னு தோணுச்சு" என்றாள் அமேலியா கலங்கிய கண்களுடன்.

அமேலியாவின் பாஷை புரியாதபோதும் தன் மேல் அக்கறை காட்டும் பாசத்தை எண்ணி நாராயணன் மனதிற்குள் நெகிழ்ந்தார். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

நிலாவிற்கு முத்தத்தை கொடுத்து அவளிடமிருந்து விடைபெற்றாள் அமேலியா. அந்த வீட்டை விட்டு செல்வதற்கு அவளுக்கு மனமே இல்லை. ஆனாலும், வேறு வழி இல்லையென்பதால் அழுதபடி வீட்டு வாசலைத் தாண்டினாள் அமேலியா.  

வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி இருக்க மாலிகா மட்டும் தன் பாட்டி இறந்ததைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளின் நிலையை எண்ணி சுற்றியிருந்தவர்கள் வருத்தம் கொண்டனர்.

"பாட்டி இறந்தது கூட புரிஞ்சுக்காம இந்த மாலிகா பொண்ணு இப்படி விளையாடிட்டு இருக்கா"

"எதையும் புரிஞ்சிக்குற வயசும் மனசும் அந்த பொண்ணுக்கு இல்லையே"

"அந்த குழந்தைக்கு யார் துணையா இருப்பா? நினைச்சாலே கஷ்டமாயிருக்கு"

இது போன்ற பேச்சுக்கள் வந்தவர்களிடமிருந்து ஆங்காங்கே எதிரொலித்தன.

எல்லாவற்றையெல்லாம் பார்த்தபடி ஓரமாய் நின்று கொண்டிருந்தாள் பஹீரா. அவர்கள் பேசியதில் பாதி விஷயம் புரியவில்லை என்றாலும் ஒன்று மட்டும் அவளுக்கு புரிந்தது, இனி பாட்டி எழப்போவதில்லை. தன் தந்தை தாய் விஷயத்தில் ஏமாந்த பஹீரா அதை சில மாதங்களிலேயே புரிந்துகொண்டாள். அவளும் முதலில் தாய் தந்தை இறக்கவில்லையென்றே எண்ணினாள். அப்படி ஏமாற்றப்பட்டு தான் வளர்ந்து வந்தாள்.

'அப்பா அம்மா ஊருக்கு சென்றிருக்கிறார்கள், இன்று வந்துவிடுவார்கள் நாளை வந்துவிடுவார்கள்' என்ற பொய் சொற்களே அவளை சாந்தப்படுத்தின. ஆனால், ஒரு காலகட்டத்தில், ஊர் மக்கள் சுமந்து செல்பவர்கள் திரும்பி வருவதில்லை என்ற உண்மையைப் புரிந்துகொண்டாள். 

"பஹீரா, எங்க வீட்டுக்கு எவ்வளவு சொந்தகாரங்க வந்திருக்காங்க பாத்தியா? ஆனா இந்த பாட்டி பாரு அவங்க கூட பேசவே மாட்டுது"

பஹீரா அமைதியாக இருந்தாள்.

"வா விளையாடலாம்"

"நான் வரலை மாலிகா"

"உனக்கு மிலிட்டரி மாமா கொடுத்த சாக்லேட்ஸ் தரேன்"

"எனக்கு வேணாம்"

"வா விளையாடலாம்" என்று அடம்பிடித்தாள் மாலிகா.

அவளை சாந்தப்படுத்த பஹீராவும் அரை மனதோடு விளையாட சம்மதித்தாள். வெளியில் சென்று இருவரும் விளையாடினார்கள்.

"மாலிகா, இப்போ நீ பாட்டி கூட இருக்கணும்" என்றாள் பஹீரா.

"ஏன்?"

"அப்படி தான் மாலிகா.  பாட்டி திரும்பி வரமாட்டாங்க"

"அவங்க எங்கே போறாங்க?"

"அது தெரியல, ஆனா வரமாட்டாங்க"

"என்னை விட்டுட்டு பாட்டி எங்கயும் போனதில்லை. அப்படியே சொந்தகாரங்க கூட்டிட்டு போனாலும் பொழுது போறதுக்குள்ள வீட்டுக்கு வந்திடுவாங்க"

மாலிகாவுக்கு எப்படி புரியவைப்பது என்று பஹீராவுக்கு தெரியவில்லை. வேண்டா வெறுப்போடு அவளுடன் விளையாடினாள். "பஹீரா!" அதட்டல் குரல் அவள் விளையாட்டை தடுத்து நிறுத்தியது. கோப விழிகளோடு ஹக்கீம் வந்துகொண்டிருந்தான். 

"பஹீரா, விளையாடுற இடமா இது?"

"மாலிகா தான் அண்ணா கூப்பிட்டா"

"என் கூட வா" என தன் தங்கையை மாலிகா வீட்டிற்கு அழைத்து சென்றான் ஹக்கீம். 

பாட்டியின் உடலுக்கு சடங்குகள் செய்யத் தொடங்கினார்கள். சிறிது நேரத்தில் சடங்கு முடிந்ததும் உடலை தூக்கிக்கொண்டு ஊர்வலமாக சென்றார்கள். நடப்பவற்றை மாலிகா அமைதியாக வேடிக்கை பார்த்தாள்.

'எதுக்கு பாட்டியை தூக்கிட்டு போறாங்க?' என அவளுக்குள்ளாகவே கேட்டுக் கொண்டாள்.

நீண்ட நேரமாகியும் பாட்டி வராதது மாலிகாவை வருத்தம்கொள்ள செய்தது. உடலை அடக்கம் செய்துவிட்டு திரும்பி வந்தவர்களிடம், "பாட்டி எங்கே? பாட்டி எங்கே?" என கேட்டாள். யாரும் அவளுக்கு பதில் சொல்லவில்லை.

அவள் அழுது கொண்டே இருந்தாள். இரவு தாண்டியும் அந்த அழுகுரல் நிற்கவே இல்லை. மாலிகா தன் பாட்டி வரும் வரை அழுதுகொண்டே இருக்க முடிவு செய்தாள். அக்கம் பக்கத்தினர் அருகிலிருந்தும் தனிமை அவளை பயமுறுத்தியது. அதற்கும் சேர்த்து அழுதாள். பயத்தில் அழுதாள், பாசத்தில் அழுதாள், சோகத்தில் அழுதாள்.

மாலிகா அழுதுகொண்டே இருந்தாள்.

தொடரும்...

Episode # 29

Episode # 31

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.