(Reading time: 5 - 9 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?

ன்ன சார்.?. பத்து நாள் லீவ் போல.. ஏதாவது சம்மர் டூரா.?. கேட்டபடியே வந்தார் அவர்.

இல்லைங்க. பசங்களுக்கு லீவு விட்டாச்சு. கொண்டுபோய் ஒரு மாசம் எங்க அப்பா, அம்மாகிட்டே விட்டுட்டு வரலாம்னு இருக்கேன். அப்படியே நானும் பத்துநாள் தங்கிட்டு வரலாம்னு. ஊருக்குப் போய் நாளாச்சே.?.. பதிலளித்தார் இவர்.

அட என்ன சார் நீங்க.? உங்க ஊரே ஒரு கிராமம். வசதிகள் குறைவு. சிட்டி லைப்லேயே வாழ்ந்த பசங்க உங்களுக்கு. அவங்களுக்கு அங்க செட்டாகுமா.? போரடிக்காதா.? அப்பா, அம்மாவை இங்க வரவச்சிட்டு, ஜாலியா இருக்கறதை விட்டுட்டு.. என்றார் அவர்.

வசதியெல்லாம் மனசைப் பொறுத்ததுதாங்க. மனசு சந்தோஸமா இருந்தா போதுங்க. அதுவுமில்லாம, ஊர்ல சொந்தக்காரங்க எல்லோருக்கும் நம்ம பசங்களையும், நம்ம பசங்களுக்கு அவங்களையும் முழுசா தெரிய வேணாமா.? எல்லாரையுமா இங்க வரவழைக்க முடியும்.?.. கேட்டார் இவர்.

சார்.. பையன் பத்தாவது எழுதியிருக்கான். அடுத்து கோச்சிங் கிளாஸ், கான்ஸன்ட்ரேஷன் கிளாஸ், யோகா கிளாஸ்னு ஏகப்பட்ட விஷயமிருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, ஊருக்குப் போய் பசங்களோட எதிர்காலத்தை வீணாக்குறீங்க சார்.. என்றார் அவர்.

நீங்க சொன்ன அத்தனை கிளாசும் கூட்டுக் குடும்பத்துலேயே இருந்ததுங்க. அதை விட்டுட்டு பொழைக்க தனியா வந்ததிலதான், இப்போ எல்லாத்துக்கும் கோச்சிங் கிளாஸ் தேட வேண்டியிருக்கு.. என்றார் இவர்.

காம்பெடிஷன் அதிகம் சார். இப்போலேர்ந்தே எல்லாத்துக்கும் பசங்களை தயார் பண்ணணும். அதுக்குத்தான் சொல்றேன்.. என்றார் அவர்.

தன்னம்பிக்கையும், தைரியமும் தரதே நம்ம உறவுகள்தான் சார். அதை இழந்துட்டு, எதைக் கத்துக்கிட்டும் பிரயோஜனமே இல்லை சார்.. என்றார் இவர்.

புரியலை சார்.. என்றார் அவர்.

 

பிரச்சனையே அதான். இங்கே நிறைய பேர் தன் பசங்க எல்லாத்தையும் கத்துக்கணும்னு நெனக்கறாங்களே தவிர, வாழக் கத்துக் குடுக்கறதே இல்லை.

சொந்தக்காரங்க ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி சார். அத்தனை பேரையும் பசங்களுக்கு எப்படி சமாளிக்கறது, எப்படி பழகறதுன்னு தெரிஞ்சாதான், நாளைக்கு வெளி உலகத்துல எப்படி எல்லோர்கிட்டேயும் பழகறதுன்னு தெரியும். அதுவுமில்லாம, நமக்காக இத்தனை பேர் இருக்காங்க அப்படின்ற தைரியமும் வரும். நாம தப்பு செஞ்சா இத்தனை பேர் கேட்பாங்கன்ற பயமும் இருக்கும்.

இதையெல்லாம் தாண்டி, வருஷத்துல இந்த ஒரு மாசத்தை எதிர்பார்த்து வருஷம் பூரா காத்திட்டிருக்கற வயசானவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. பணம் சம்பாரிக்க, படிக்க, பிழைக்கன்னு ஏதாவது ஒரு காரணத்தால பிரிஞ்சு கிடக்கிற குடும்பம், இந்த ஒரு மாசம் இணைஞ்சிருக்கறதால அவங்க அடையற சந்தோஷத்தை, நீ என்ன விலை கொடுத்து, எதை வாங்கித் தந்தாலும் கிடைக்காது.

இந்த வயசுல எங்க அப்பாவுக்கு நான் அடங்கி நடக்கறதையும், எங்க அம்மா மடில நான் படுத்து தூங்கறதையும் எம் பிள்ளை பார்த்தாலே போதும். பாசம்னா என்னன்னு புரிஞ்சுப்பான். என்னை கொண்டாட ஆரம்பிச்சுடுவான். இதையெல்லாம் கோச்சிங் கிளாஸ் சொல்லிக் குடுக்காது.

பசங்களுக்கு எல்லாம் தெரியணும்கறதைவிட, நல்லது தெரியணும்கறதுதான் முக்கியம்.

எம் பசங்க நிறைய சம்பாரிக்கறான்.. பெரிய அதிகாரி.. அப்படின்றது எனக்குப் பெருமையில்லை. எம் பையன் என்னை நல்லாப் பார்த்துக்கறான்னு முழுமனசோட நான் கடைசி காலத்துல சொல்லணும். எங்கப்பா என்னை நல்லா வளர்த்தார்னு அவன் சொல்லணும். அதுதான் முக்கியம். அதுக்கு நான் அதுமாதிரி நடந்து காட்டணும். ஏன்னா, எம் பசங்களுக்கு நான்தான் ஹீரோ. நான் செய்யறதுதான் சரின்ற நம்பிக்கை வரணும். அதை  எங்க அப்பாகிட்டே  நான் நடந்துக்கற முறை கத்துக் குடுக்கும்.

நமக்கும் வயசாவும். நாளைக்கு எம் பையனும் அப்பா ஆவான். அவன் வாழ்க்கைலையும் இதேபோல சம்மர் லீவுன்னு ஒண்ணு வரும். அப்போ அவன் என்னைத் தேடணும். அவனுக்காக மட்டுமில்லை.. அவனோட பசங்களுக்காகவும். அதுக்குத்தான் இவ்வளவும்... என்றார் இவர்.

 

அது வந்து.. என இழுத்தார் அவர்.

 

இதோ பாருங்க நண்பரே.. எம்மேல பாசமா இருப்பான்னு எம் பையன் என்னைக் கேட்கலை. ஆனா, நான் இருக்கேன். அதேமாதிரி, எம்மேல பாசமா இருப்பான்னு நான் அவனை கேட்க மாட்டேன். ஆனா, அவன் இருப்பான். அதுக்கு, பாசம், குடும்பம், உறவுன்னா அவனுக்குத் தெரியணும். ஒரு அப்பாவா நான் தெரிய வைக்கிறேன். எனக்கு எங்கப்பா கத்துக் குடுத்ததை நான் கத்துக்குடுக்றேன். இதுதான் இப்போதைக்கு தேவையான கோச்சிங் கிளாஸ்.

நாம விதைச்சது பெரிய மரமாகறது முக்கியம்னு சில பேர் எண்ணம்.

அது விஷமரமா யாருக்குமே பயனில்லாம போயிடக் கூடாதுங்கறது என் எண்ணம்.

தலைமுறைங்கறது நாம மட்டுமே இல்லை. நமக்கு முன்னாடி இருந்ததுங்கறதை நாம நிரூபிக்கறோம். நமக்குப் பின்னாடியும் இருக்கணும். அதையும் நிரூபிக்க வைக்கணும். அதுக்கு குடும்பம், உறவுகளை விட சிறந்த  பல்கலைக்கழகம் எதுவுமே இல்லை.

சரி விடுங்க. நீங்க சம்மர் டூர் எங்க போறீங்க. ? கேட்டார் இவர்.

 

சிறிது நேர மௌனத்திற்குப் பின் சொன்னார் அவர்..

என் தலைமுறையை எம் பசங்களும் புரிஞ்சுக்கற இடத்துக்கு. நானும் புரிஞ்சுக்கணுமே...

வெளியேறும்போது அவர் மனதில் நிறைவு நடையிலேயே தெரிந்தது.

உறவுகளோடு வாழ்வதைவிட, வேறெதையுமே வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்க்கப் போவதில்லை.

ஏனெனில்,

உறவுகள்தான் வாழ்வின் படிப்பினை..

அனுபவம் கற்றுத்தரும் ஆசான்.

இன்றைய நன்னாளுக்கான வாழ்த்துகளும்...........

படித்ததில் பிடித்தது

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.