(Reading time: 3 - 6 minutes)

வங்கி விபரம் குறித்த எச்சரிக்கை!!! - ஜான்சி

phone

ஹாய் பிரண்ட்ஸ்,

 உங்கள் அனைவரோடும் இந்த சம்பவத்தை பகிர்ந்துக் கொள்ளத் தோன்றியது. ஒருவேளை இதே மாதிரி சம்பவம் நிகழ்ந்தால் உங்களுக்கு அது குறித்த ஒரு எச்சரிக்கையாக இருக்கும் எனத் தோன்றியதால் பகிர்ந்துக் கொள்கின்றேன்.

ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி அளவில் நான் ஏ டி எம் சென்று வந்தேன். சரியாக 10.10 மணிக்கு தெரியாத நம்பரிலிருந்து எனக்கு கால் வந்தது .

 "மேடம் நீங்கள் ஏடிஎம் சென்று வந்த பின் உங்கள் கார்ட் லாக் ஆகிவிட்டது, நாங்கள் உங்களுக்கு உதவுவதற்காக போன் செய்தோம்" என்று சொன்னது. அந்த நபர் பேசிய முறையைப் பார்த்தால் வங்கியில் பணி புரிகிறவர் போல இல்லை. மிகவும் லோக்கல் மொழியில் அவர் பேச்சு இருந்தது.

நீங்கள் ஏடிஎம் சென்று வந்தீர்கள் என்றதும், நாம் சென்று வந்தது இந்த நபருக்கு எப்படித் தெரியும் என்கிற ஒரு விஷயம் தவிர அந்த நபர் வங்கியிலிருந்து பேசுகிறார் என்றுக் குறிப்பிடும் படி ஒன்றும் தோன்றவில்லை.

உடனே நான் நீங்கள் எந்த பேங்கிலிருந்து பேசுகிறீர்கள்? என்றேன்.

"நீங்கள் எந்த பேங்கிலிருந்து பணம் எடுத்தீர்களோ அந்த பேங்க் தான்" என்று பிடிக் கொடுக்காமல் பேசினார்.

இதே ரீதியில் கவுண்டமணி, செந்தில் வாழைப் பழ ஜோக் போல நான் "எந்த பேங்க்?" எனக் கேட்க , அந்த நபர் " அது அந்த பேங்க் தான்" என்று கொஞ்ச நேரம் உரையாடல் போயிற்று.

 பிறகு இவள் சொல்லாவிட்டால் விட மாட்டாளே என்று நினைத்தோ என்னமோ வாய்க்கு வந்த பேங்க் ஒன்றை அந்த ஆள் சொல்லி வைத்தார்.

ஆனால், அந்த பேங்கில் எனக்கு அக்கவுண்ட் கிடையாது. அதற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை. நீ என்ன ஃபிராட் செய்கிறாயா? உன் பேச்சை ரெகார்ட் செய்திருக்கிறேன், இப்போது போலீஸுக்கு செல்லப் போகிறேன் என்றுச் சொன்னதும்,

அந்தப் பக்கம் அந்த நபரும் என்னை மிரட்டும் விதமாக பேச ஆரம்பித்தார். " நான் உன்னை பெண்கள் ஜெயிலில் போட்டு விடுவேன் பார்" என்று அதிகாரமாக பேச ஆரம்பித்தார். 

நான் அதற்கு அப்புறமாக கால்-ஐ ரெகார்ட் செய்ய முயற்சித்தேன் சற்று நேரத்தில் கால் கட்டானது. அந்த கால் நிச்சயம் ஃப்ராட் செய்பவர்கள் செய்தது தான் எனப் புரிந்து விட்டது. ஆனால். கடைசி வரை அந்த ஆள் பயப்படவே இல்லை, மிகவும் துணிச்சலாக பேசிக் கொண்டிருந்தார். பிறகு அந்த கால்-ஐ ட்ரேஸ் செய்தால் அது ராஜஸ்தானிலிருந்து வந்திருப்பதாக தெரிய வந்தது. நாம் திரும்பவும் போன் செய்ய முடியாத வண்ணம் அந்த போன் நம்பர் அமைந்து இருந்தது.

 இந்த சம்பவம் எனக்கு உண்மையிலேயே மிகவும் அதிச்சிகரமாக இருந்தது. ஒரு மணி நேரத்தில் தகவல், என் மொபைல் நம்பர் முதலாக தெரிய வந்திருக்கிறது. என் பேங்க் விபரம் மட்டும் தெரியவில்லை, அதை தெரிந்துக் கொள்வதற்காகத் தானே அந்த நபர் போன் செய்தது.

 இப்போதெல்லாம், " யாராவது உங்கள் வங்கிக் கணக்கைக் கேட்டால் கொடுக்க வேண்டாம்" என்றுச் சொல்லி பேங்கிலிருந்து அடிக்கடி மெஸேஜ்கள் வருகின்றன. இப்படி ஃப்ராட் செய்பவர்கள் பேசுகிற விதத்தில் நம்பி யாரும் எந்த தகவலும் கொடுத்து விடாதீர்கள் நண்பர்களே.முதலில் உங்கள் வங்கியில் அது குறித்து விசாரித்துக் கொள்ளுங்கள்.

 அடிக்கடி புது புது App-களை டவுன்லோட் செய்கையிலும் பல நேரம் அது நம்முடைய போனில் உள்ள தகவல்களை அறிய அனுமதி கேட்கும் கவனித்து இருப்பீர்கள். அதனாலும் நம்முடைய தகவல்கள் வெளியில் செல்கின்றன என்றுச் சொல்கின்றார்கள். நாம் மிகவும் எச்சரிக்கையோடு இருப்பது அவசியமாகின்றது.

எச்சரிக்கை நண்பர்களே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.