(Reading time: 6 - 12 minutes)

நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..! - சஹானி

Miracles

ற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

  1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.
  2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
  3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.
  4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.
  5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)
  6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.
  7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.
  8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
  9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.
  10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

ன்னொரு சம்பவம் Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatrice என்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.