(Reading time: 12 - 23 minutes)

ககாகளகமேகககப்கபுகலகவகர்.... - தங்கமணி சுவாமினாதன்

(குழப்பம் வேண்டாம்..கதையின் கடைசியில் அடைப்புக் குறிக்குள் இருக்கும் விபரத்தைப் படிக்கவும்)

வர் சிறந்த ஆன்மிகவாதி.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளிடம் தீவிர பக்தி கொண்டவர். வேதவித்து.ஆசாரமும்,ஒழுக்கநெறியும்,இறை பக்தியும் அவரின் உயிர் மூச்சாக இருந்தது.மிகச் சிறந்த பண்பாளர்.அவரின் வாழ்க்கைத் துணைவியாரும் அவரின் மனதறிந்து நடக்கக் கூடிய குணவதி.கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.இருவரும் இணைந்து இல்லறத்தை நல்லறமாக நடத்திவந்தனர்.ஆனாலும் குறையொன்றும் இல்லாத கோவிந்தன் அவர்களுக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லாத குறையொன்றைக் கொடுத்திருந்தான்.குறையொன்றுமில்லாத கோவிந்தா,நாராயணா, வாமனா, ஸ்ரீதரா, மாதவா, மதுசூதனா, த்ரிவிக்ரமா, தாமோதரா, கேசவா,வரதராஜா, லெக்ஷ்மிநரசிம்மா,ராதே கிருஷ்ணா,வாசுதேவா,கிருஷ்ண..கிருஷ்ணா என்று கணவனும் மனைவியும் கோவிந்தனின் திருநாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பார்கள்.அவர்களின் அடிமனதில் குழந்தைப் பேறு இல்லாத வேதனை வாட்டியது.பக்தர்களின் வேதனையை நீக்கி வேண்டுதலை நிறைவேற்றக் தகுந்த காலத்தை எதிர் பார்த்துக் காத்திருப்பவனல்லவா இறைவன்?விளையாட்டை விளையாடிப் பார்ப்பவனுமவனே விதியை மாற்றுபவனுமவனே.வரதராஜன் மனது வைத்தால் நடக்காத செயலும் உண்டோ?ஆம்..இங்கேயும் அற்புதம் நடந்தது.குழந்தை பாக்கியம் இல்லாது வாடிய இவர்களுக்கும் காஞ்சி வரதராஜனின் அருளாள் நீண்டகாலத்திற்குப் பிறகு அப்பேறு கிட்டியது.மிக அழகான ஆண் குழந்தை இறையருளால் பிறந்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.தங்களின் குழந்தைக்கு காஞ்சி வரதராஜனின் பெயரான வரதன் என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்தார்கள்

மீண்டும் விளையாடிப் பார்க்க ஆசைப் பட்டானோ என்னவோ வரதராஜன் குழந்தை வரதனுக்கு நான்கு வயது வரை பேச்சு வரவில்லை.அம்மா எனும் முதல் வார்த்தைகூட சொல்லாமல் தங்கள் மகன் இருப்பது கண்டு தம்பதிகளடைந்த வேதனைக்கு அளவே இல்லை.இறைவனிடம் முறையிடுவதைத் தவிற வேறு என்ன வழி? ஒருவழியாய் குழந்தை வரதன் பேச ஆரம்பித்தபோது அவன் ஏனடா பேச ஆரம்பித்தான் என்ற எண்ணமே அவர்களுக்கு ஏற்பட்டது.அந்த அளவுக்கு குழந்தையாய் இருந்தபோதே எல்லாரிடமும் சண்டை யிடுவதும் கேவலமாய்ப் பேசுவதும் அடாவடியாய் நடப்பதுமென இருந்து யாருக்கும் பிடிக்காத ஒரு பையனாய் வளர ஆரம்பித்தான்.

பெற்றவர்களின் மனம் பிள்ளையை நினைத்து மிகுந்த வேதனை அடைந்தது.மகனை வேதம் கற்க குருகுலம் அனுப்பினார் தந்தை.அங்கு சென்றால் அவனின் இயல்பு மாறுமென நம்பினார்.அவரின் நம்பிக்கை வீணானது.அங்கு சக மாணவர்களோடு பிரர்ச்சனை செய்வதாகச் சொல்லி திருப்பி அனுப்பப்படுகிறான் வரதன்.நொந்து போனார்கள் இருவரும்.தன் மகனுக்குத் தானே வேதாப்பியாசம் செய்ய ஆரம்பிக்கிறார் பக்தர்.ஓரளவு ஈடுபாட்டோடு பயிலும் வரதனுக்கு வேரொன்றில் திறமையும் நாட்டமும் இருப்பதைக் காண்கிறார் அவ்ர்.

Sri Ranganatharஆம்..அந்த சின்ன வயதிலேயே வரதனுக்கு தானாகவே பாடல் புனையவும் அவற்றை எழுத்தில் எழுதவும் ஆர்வமிருப்பதைக் காண்கிறார்.அவன் எழுதும் பாடல்கள்(கவிதைகள்) அர்த்தமுள்ளவைகளாகவே இருப்பதையும் காண்கிறார்.மகனின் இந்த திறமை கண்டு மகிழ்ந்தாலும் அவனின் சண்டைகுணமும் அடாவடித்தனமும் அவரைக் கவலை கொள்ளச் செய்தது.இனி அவனின் பெற்றவர்களாகிய தங்களோடு அவன் இருப்பது சரிவராது என்ற எண்ணத்தில் வரதனை ஸ்ரீரங்கம் திருவரங்கன் கோயிலில் மடப்பள்ளியில் சமையல்காரர்களுக்கு உதவியாளனாக சேர்த்து விட்டார்.

ங்கே கொஞ்சம் வாலைச் சுருட்டிக்கொண்டு இருந்த வரதன் சர்க்கரைப் பொங்கல்,புளியோதரை, இன்னபிற ..நைவேத்தியத்திற்கு தேவையானவற்றைச் செய்யும் முறைகளை கற்றுத் தேர்ந்தான்.

ஒரு சமயம் மடப்பள்ளி சமயல்காரர்கள் ஒட்டுமொத்தமாய் விடுப்பு எடுத்தபோது அன்றைய நைவேத்தியத்திற்கான் சர்க்கரைப் பொங்கல்,புளியோதரை ஆகியவ்ற்றை வரதன் மட்டுமாய் செய்யவேண்டி வந்தது.

டப் பள்ளியில் பெரிய பெரிய ஆளுயர குத்தடுக்குகளில் சர்க்கரைப் பொங்கலும்,புளியோதரையும் தயாராகிக்கொண்டிருந்தன.அவற்றிலிருந்து எழுந்த வாசனை பிரும்மண்டமான அந்த கோயிலின் பிரகாரங்கள் எங்கும் பரவி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களிலும் பரவியது.அன்று கோயிலுக்குப் பெருமாளை சேவிக்க வந்த பக்தர்களின் நாசியில் புகுந்த வாசனை அவர்களின் பசியைத் தூண்டி யது.இன்று எப்படியும் பிரசாதங்களை வாங்கிச் சாப்பிடவேண்டும் என்ற எண்ணத்தில் கோயிலைவிட்டுச் செல்லாமல் குழுமியிருந்தனர்.ஆயிற்று ரெங்கனாதருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலும் புளியோதரையும் பக்த்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.அடடா....அடடா...அடடா....சாப்பிட்டவர்களின் வாயும் கையும் மணத்தன.இன்னும் இன்னும் கிடைக்குமா?என்று  கை நீட்டினர்.ஆஹா..ஆஹா..வாழ்னாளில் இது போல் மணமும் ருசியுமாய் சர்க்கரைப் பொங்கலோ புளியோதரையோ சாப்பிட்டதே இல்லை என ஆளாளுக்குப் புகழ்ந்தனர். ரெங்கனாதருக்கும் வரதனின் கைப்பக்குவம் பிடித்துவிட்டதோ என்னவோ அவரின் முகம் கூடுதலான தேஜஸுடன் காணப்படுவதாக பக்தர்கள் வேடிக்கையாக பேசிக்கொண்டனர்.

மிக சீக்கிரத்திலேயே வரதனின் சமையல் இல்லாமல் கோயிலில்லை என்ற நிலைமை ஏற்பட்டது.

தூங்கிக்கிடந்த அவன் திமிரும் அடாவடித்த்தனமும் தலை தூக்க ஆரம்பித்தது.இவனின் குணத்தோடு ஒத்துப்போகாத மற்ற சமையல்காரர்கள் வேலையிலிருந்து நின்று கொண்டார்கள்.தனிக்காட்டு ராஜாவானான் வரதன்.அவன் வைத்ததுதான் சட்டம் என ஆயிற்று தளிகையைப் பொறுத்தவரை.

ஆரம்பமாயிற்று அவனின் அடாவடித்தனம்.

ஸ்ரீரங்கம் ரெங்கனாதரை தரிசிக்க நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம்.அப்படி வருபவர்களில் பலபேர் பெருமாளின் முன்னின்று மனமுருக மெய்யுருக தாங்கள் சொந்தமாகவே பாடல் புனைந்து பாடி சேவித்து மகிழ்வது வழக்கம்.சாதாரணமாக தரிசித்துச் செல்பவர்களை வரதன் எந்தத் தொந்தரவும் செய்யமாட்டான்.அனால் தாங்களாகவே பாடல் இயற்றிப் பாடி தரிசிப்பவர்களைக் கண்டால் வரதனுக்கு ஏன் பிடிப்பதில்லையோ தெரியவில்லை  அப்படி யாராவது பாடினால் அவர்களின் பின்னால் போய் நின்று கொள்வான்.கனைப்பான் இருமுவான் கேலியாய்ச் சிரிப்பான் குறுக்கே புகுந்து கேள்வி கேட்பான் எப்படியோ அவர்கள் பாடுவதைத் தடுத்து விடுவான்.இதுவே வாடிக்கையாயிற்று.பலபேர் கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டும் பயனில்லை.காரணம் எங்கே வரதனைக் கண்டித்தால் அவன் வேலையைவிட்டுச் சென்று விடுவானோ அப்புரம் கமகமக்கும் மணமணக்கும் சர்க்கரைப் பொங்கலும் புளியோதரையும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம்தான்.பெருமாள் கூட அதற்குப் பயந்துதான் சும்மா இருந்தாரோ தெரியவில்லை.

துபோன்ற நிலையில் ஒரு நாள் ஆந்திராவிலிருந்து வயதான பன்மொழிப் புலவர் ஒருவர் பெருமாளைத் தரிசிக்க கோயிலுக்கு வந்தார்.அவர் ரெங்கனாதனை உள்ளம் உருக கண்ணீர் பெருக பாட்டுப் பாடி ஆனந்தமாக சேவித்துக் கொண்டிருக்க வழக்கம்போல் வரதன் அவர் பின்னே வந்து நின்றுகொண்டு செருமுவதும் இருமுவதும் சிரிப்பதும் இடை இடையே புகுந்து கேள்விகேட்பதுமாக அவருக்கு பெரும் இடைஞ்சல் கொடுத்தான்.பாவம் அந்த வயதானவர் முழு திருப்தியோடு இறைவனை தரிசிக்க முடியாமல் கோயிலைவிட்டு வெளியே சென்றார்.

அடுத்த மூன்று நாட்களும் அவருக்கு இதே அனுபவம்தான் கிடைத்தது.நான்காம் நாள் எப்படியும் பெருமாளை மன நிறைவோடு தரிசித்து விடுவது அதுவரை வரதனின் கண்ணில் படாமல் வெகு ஜாக்கிரதையாக இருப்பது என்ற எண்ணத்தோடு கோயிலுக்கு வந்தார் அந்த ஆந்திர பெரியவர்.இங்கும் அங்கும் பார்த்தபடி பிரகாரத்தில் நடந்துவந்தவர் வரதனின் கண்களில் படாமல் இருக்கவேண்டும் என பெருமாளை வேண்டிக்கொண்டே வந்தார்.விளையாட்டு ஒன்றை ஆடிப்பார்க்கும் எண்ணத்துடன் காத்திருந்த பெருமாள் தனக்குள் சிரித்துக்கொண்டார்.பயந்து கொண்டே நடந்து வந்த பெரியவரின் பார்வையில் வரதன் அவருக்கு எதிர் திசையில் வருவது தெரிந்தது.அவ்வளவுதான் பயந்து அதிர்ந்து போனவர் சட்டென பெரிய தூண் ஒன்றின் பின்னால் வரதன் தன்னைப் பார்த்துவிடாதவாறு ஒளிந்து கொண்டார்.ஆனாலும் வரதன் அவரைப் பார்த்துவிட ஆரம்பமாயிற்று விளையாட்டு.

ஆரம்பித்தான் வரதன்.என்ன பெரியவரே...என்ன தூணுக்குப்பின்னாடி பதுங்குகிறீர்..?வாரும் வெளியே....

யந்தபடியே வெளியேவந்தார் பெரியவர் தன் விதியை நொந்தபடி..

பன் மொழிப் புலவராமே நீர்...நான் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பீரா..?

பிரகாரம் சுற்றி வந்தவர்கள் இவர்கள் இருவரும் எதிரெதிரே நிற்பதைப் பார்த்து நின்றுவிட கூட்டம் கூடிவிட்டது.

கூட்டத்தைப் பார்த்ததும் வரதனுக்கு வெகண்டை(கேலி செய்யும் குணம்) அதிகமாகிவிட பெரியவரை கிடுக்கிப்பிடி போடுவதைப் போல் இடக்கு மடக்காக கேள்விகள் கேட்க ஆரம்பிக்க அவர் பெருமாளைத் தரிசிக்க வந்த இடத்தில் தனக்கு எப்பேர்ப்பட்ட அவமானம் காத்திருக்கிதோ என வருந்தினார்.ரெங்கனாதா..ரெங்கனாதா இது என்ன சோதனை என வாய்விட்டு அரற்றினார்.  பக்தனைப் புலம்ப வைத்து விட்டு படுத்துக்கிடக்க ரெங்கனாதனால் முடியவில்லை.

கோயில் அமைந்திருக்கும் தெருவின் கடைசியில் வேத பாடசாலை ஒன்று இருந்தது.அதில் கோதண்டம் எனும் மாணவன் வேதம் பயின்று வந்தான்.அவனை வரதன் நன்கு அறிவான்.அந்தக் கோதண்டத்துக்கு வயது பதினான்கு இருக்கும்.இப்போது ரெங்கனாதப் பெருமாள் கோதண்டத்தைப் போலவே உருவம் மாரி வரதனும் அந்த ஆந்திரப் புலவரும் இருக்கும் இடத்திற்கு வந்தார்.வரதனின் கேள்விகளால் திக்குமுக்காடிக் கொண்டிருந்தார் அந்த பெரியவர்.சட்டென இடையில் நுழைந்தார் பெருமாள்.அண்ணா..அண்ணா..வரது அண்ணா...திரும்பிப் பார்த்த வரதன் கோதண்டம் தன்னை அழைப்பதைக்  கண்டு..

என்ன...பேசிக்கொண்டிருப்பது தெரியவில்லை உனக்கு?...

அண்ணா...தெரிகிறது...ஆனாலும் அவரை விடுங்கள்..கிடக்கிறார்..எனக்கு ஒரு சந்தேகம்..அதற்கான பதிலை நீங்கள் சொல்லுங்களேன்...

வரதன் கேள்வியைக் கேள் என்று சொல்வதற்குள் பட்டென யாராலும் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியைக் கேட்டு விடுகிறார் கோதண்டத்தின் உருவில் இருந்தபெருமாள்.

திணறித் தவித்துப் போனான் வரதன்.அந்த கேள்விக்கான பதில் அவன் அறிவுக்கெட்டிய வரை தெரியவில்லை அவனுக்கு.ஐயோ...என்ன செய்வது இதற்கான பதிலைச் சொல்லவில்லை என்றால் இதோ இந்த ஆந்திராக்காரரின் முன் அசிங்கப் பட நேரிடுமே அத்தோடு இல்லாமல் கூடி நிற்கும் கூட்டதிற்கு முன்னும் அவமானப் பட வேண்டியிருக்குமே அப்புறம் நம்மை யாரும் மதிக்கமாட்டார்களே அதன் பின் நாம் யாரையும் பரிகாசம் செய்தல் முடியாதே என்றெல்லாம் தவித்துப் போனான் வரதன்.இந்த இக்கட்டிலிருந்து எப்படி தப்பிப்பது?ரெங்கனாதா என்னைக் காப்பாற்று மனதிற்குள் கதறினான் வரதன்.தவிக்கும் அவனின் மனதை அறியாதவரா பெருமாள்.

தினமும் மணமும் சுவையுமாய் நைவேத்தியங்களைத் தயார் செய்து படைக்கும் அவனையும் அவமானப் படாமல் காக்க வேண்டியது தனது கடமை என்று எண்ணினாரோ என்னவோ பெருமாள் அதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.

ரதா...வரதா..எங்க போய்ட்ட...பெருமாளுக்கு அலங்காரம் முடிஞ்சிடுத்து நைவேதியங்களைக் கொண்டுவா..சீக்கிரம் வா..வரதனைச் சத்தமாக் கூப்பிட்டார் கோயில் பட்டாச்சாரியார்.அவர் கூப்பிடும் குரல் வரதனுக்கு மட்டுமல்ல அங்கே கூடியிருந்த அனைவரின் செவிகளிலும் விழுந்தது.

அடுத்த நொடி அங்கிருந்து நகர என்ன வழி என்று யோசித்துக்கொண்டிருந்த வரதன் மிகப் பரபரப்பாகி

அடடா...அடடா..மறந்தே போய்ட்டேன் பெருமாளுக்கு நேவேத்தியம் வைக்காம பேசிண்டிருக்கேனே..ஒன்னோட கேள்விக்கு வந்து பதில் சொல்றேன் என்று கோதண்டமாய் நிற்கும் பெருமாளிடம் சொல்லிக்கொண்டே தப்பித்தோம் பிழைத்தோம் என்று அந்த இடத்தைவிட்டு ஓடினான்.

இப்படி நடக்க வேண்டும் என்று நினைத்த பெருமாள் சிரித்துக்கொண்டார்.தனது இரு பக்தர்களையும் இக்கட்டிலிருந்து காப்பாற்றிய நிம்மதி அவருக்கு.

நைவேதியங்களைக் கொண்டுவந்து வைத்த வரதனின் மனம் கொல்லனின் உலைக்களம் போல் கொதித்துக்கொண்டு இருந்தது.கோதண்டத்தின் மீது கடும் சினம் ஏற்பட்டிருந்தது அவனுக்கு.மனம் கருவிக்கொண்டிருந்தது அவனை ஒரு வழி பண்ண.என்ன தைரியம்?பத்துபேருக்கு முன்னாடி என்னைக் கேள்வி கேக்க?இதோ வரேன்..ஒன்ன என்னபாடு படுத்தறேன் பாரு..நெஞ்சம் கொதித்தது கோவத்தால்.பிரசாதம் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப் பட்டது.

அடுத்த நொடி வரதன் ஓட்டமும் நடையுமாக கோதண்டம் பயிலும் வேத பாடசாலைக்குச் சென்றான்.

ஹேய்..பாஷ்யம் ஐயங்கார்வாள்..பாஷ்யம் ஐயங்கார்வாள்..இங்க வாங்கோ கொஞ்சம்....வேத பாட சாலையின் உபாத்தியாயர் பாஷ்யம் ஐயங்கார்.

வாசலில் நின்று வரதன் கத்துவதைக் கேட்ட பாஷ்யம் வெளியே வந்தார்.

என்ன வரதா எதுக்குக் கத்தர?

ஐயங்கார்வாள்..கூப்புடுங்க்கோ..கோதண்டத்த..அவனண்ட கொஞ்சம் பேசனும்...இன்னிக்கு என்ன காரியம் பண்ணிட்டான் அவன்?ம்ம்ம்...அவன சும்மா விட மாட்டேன்..கூப்புடுங்கோ அவன...

என்னது கோதண்டமா...அவன் என்ன செஞ்சான்?..அவந்தான் ஊர்லயே இல்லியே ஒரு வாரமா....

என்னங்காணும்..ஒளருறீர்..அவன் ஊர்ல இல்லியா..ஏன் இப்பிடி பொய் சொல்றீர்..?பாஷ்யம் ஐயங்கார் மீது கோவப்படான் வரதன்.

நெசமாத்தான் சொல்றேன் வரதா கோதண்டம் ஊர்ல இல்ல அவ்னோட தாயார் தவறிப்போய்ட்டதா சேதி வந்து அவன் ஊருக்குப் போய் ஒருவாரம் ஆச்சு..இன்னும் ஒருவாரம் கழிச்சுதான் திரும்புவான்.

தூக்கிவாரிப் போட்டது வரதனுக்கு.அவனால் நம்ப முடியவில்லை.அதேசமயம் உள்ளேயிருந்து வந்த இரு மாணவர்கள் ஆசிரியரின் கூற்றை உண்மை என்று சொல்ல குழம்பிப் போனான் வரதன்.

ப்படியானால் கோதண்டத்தின் உருவில் வந்தது யார்?மின்னலென அவன் மனது விடை சொன்னது அவனுக்கு..அடுத்த நொடி ஸ்ரீரெங்கா..ரெங்கனாதா..பள்ளிகொண்ட பெருமாளே..ஆபத் பாந்தவா அனாத ரட்சகா..வைகுண்ட வாசா..ரெங்கா..ரெங்கா..என கத்திக்கொண்டே கோயிலை..நோக்கி ஓடிய வரதன் ரெங்கனின் சன்னதியில் அனந்த சயனத்தில் பள்ளிகொண்டபடி உலகத்தின் கோடான கோடி ஜீவராசிகளுக்கும் படியளந்து பசி போக்கி பிணி நீக்கி உயிர் காக்கும் அந்த பக்தவத்சலத்தின் அந்த ரெங்கனாதப் பெருமாளின் முன் நெடுஞ்சாண்கட்டையாக விழுந்தான்.பெருமாளே கோதண்டத்தின் உருவில் வந்து என் அகந்தையை அகற்றி என் அடாவடி குணத்தை அடக்கி என்னை ஒரு நல்லமனிதனாக ஆக்கிவிட்டாய் பரந்தாமா..என்று அவன் கதறினான்.சயனித்தபடி தன் பக்தனைப் பார்த்து மெலிதாய் முறுவலித்தார் திருவரங்கன்.. அந்த வைகுந்தவாசன்.

இக் கதையை படித்த உங்களுக்கு நன்றி. இதில் வரும் கதா பாத்திரம் வரதன் பின்னாளில் மாபெரும் ......னாகப் போற்றப்பட்டார். நீங்கள் அனைவருமே அது யார் என்று கணித்திருப்பீர்கள்.அல்லது ஒரு சிலராவது கண்டுபிடித்திருப்பீர்கள். இக்கதையின் தலைப்பில் அவரது பெயர் ஒளிந்திருக்கிறது..

"க" னா பாஷையில் தந்திருக்கிறேன் அவர் பெயரை..கண்டு பிடித்துவிட்டால் தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்களேன். அவரைப் பர்றி எனக்கும் முழுமையாகத் தெரியாது.ஒரு நூல் (கயிறு) கிடைத்தது என் கற்பனையால் அதில் பூ கட்டிவிட்டேன்.தவறு எனில்  என்னை மன்னிக்கவும்.) ..நன்றி.

சின்னக் க்ளூ:- ஒரு சொல்லில் இரு பொருள்........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.