(Reading time: 6 - 11 minutes)

சுவர்க்க நீக்கம்.... - தங்கமணி சுவாமினாதன்

ரு காலத்தில் குருஷேத்திரத்தில் முத்கலர் என்ற சிவனடியார் ஒருவர் இருந்தார்.அவர் பண்பும் அடக்கமும்,தர்ம சிந்தனையும் உடையவர்.அவருக்கு மனைவி மக்களுண்டு.முத்கலர் கடும் உழைப்பாளி நேர்மையாய் உழைத்து வரும் வருமானத்தில் தானும் தன் குடும்பமும் மட்டும் உண்டு மகிழாது தாமே அதிதிகளை அழைத்துவந்து அவர்களுக்கு வயிறார உணவளித்து மகிழ்வார்.

அதிதிகளுக்கு உணவளிக்காமல் ஒரு நாள் கூட அவர் உணவருந்தமாட்டார். முன்பின் அறியாத அதிதிகள் வயிறார உண்டு மகிழ்வதைக் காண்பதையே அவர் பெரும் பாக்கியமாகக் கருதினார்.

இப்படிப் பிறருக்கு உணவு  அளிப்பதிலேயே தனது உழைப்பால் கிடைக்கும் பொருள் அனைத்தும் செலவாவது பற்றி அவர் சிறிதும் கவலை கொள்ளமாட்டார்.அப்பொருள் அனைத்தும் பிறருக்குப் பயன்படுவதைக்கண்டு மிகவும் திருப்தி அடைவார்.எப்பொழுதும் நமசிவாய..நமசிவாய என்று பரம்பொருளின் பெயரை உச்சரித்துக்கொண்டே இருப்பார்.

Shivanசிவனுக்கு எப்பொழுதுமே தனது ப்க்தனை சோதித்துப் பார்ப்பதில் அப்படி என்ன சந்தோஷமோ தெரியவில்லை முத்கலரையும் சோதிக்க விரும்பினார் போலும்.

ஒரு நாள் மதியம் உண்ணும் வேளை.அதிதிக்காகக் காத்திருந்தார் முத்கலர்.பரமேஸ்வரனான சிவபெருமான் ஒரு முனிவரின் வேஷத்தில் முத்கலரின் வீட்டிற்கு வந்தார்.அதிதியின் வருகைக்காக காத்திருந்த முத்கலர் முனிவரின் வருகை கண்டு மகிழ்ந்தார்.முகம் மலர்ந்து அன்புடன் முனிவரை வரவேற்றார்.இன்முகத்தோடு உணவளித்து உபசரித்தார்.அவரது உபசரிப்பையும் விருந்தோம்பலையும் கண்டு மகிழ்ந்தார் முனிவரின் உருவில் வந்த சிவன்.மேலும் அவரை சோதிக்க விரும்பினார்.

மறுநாளும் முத்கலரின் இல்லத்திற்கு உணவருந்த வந்தார் அந்த முனிவர்.தனக்குக் கடும் பசியாய் இருப்பதாகக் கூறி முதகலரின் வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவு அனைத்தையும் தான் ஒருவரே உண்டார்.பசி நீங்கிய பிறகும் மீதமிருந்த உணவு அனைத்தையும் தன் உடலில் எடுத்து பூசிக்கொண்டார் முனிவர்.வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு சாப்பிட ஒரு பிடி உணவு கூட இல்லை.

முத்கலர் அதனால் சிறிதும் வருந்த வில்லை.மாறாக மகிழ்ச்சியே அடைந்தார்.

முனிவர் தினமும் முத்கலர் வீட்டுக்கு வருவதும் சமைத்த உணவு அனைத்தையும் தாமே உண்பதும் வாடிக்கையாயிற்று.இதுபோல் நான்கு நாட்கள் கழிந்தது.

ந்தாம் நாள் சமைத்த உணவு அனைத்தையும் உண்ட முனிவர் முத்கலரிடம் 'முத்கலரே நீங்கள் செய்யும் இந்த அறப்பணியால் நீர் பெரும் புண்ணியம் செய்தவராகிறீர்.உம்மின் இந்த புண்ணியம் உமக்கு சுவர்க்க சுகம் தரவல்லது.உமது புண்ணியத்தால் பெற்ற சுவர்க்க சுகத்தை அனுபவிப்பீர் என்று வரமளித்து மறைந்து விட்டார்.

முத்கலரை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தேர் ஒன்று வந்து நின்றது.தேரோட்டி முத்கலரை வணங்கி சுவர்க்கம் செல்லஅவரைத் தேரில் ஏறுமாறு வேண்டினான். முத்கலர் திகைப்படைந்தார். "மரியாதைக்குரியவரே! சுவர்க்கம் என்பது என்ன?அங்கு செல்வதால் என்ன பலன்?என்று தேரோட்டியிடம் கேட்டார்.

வணக்கத்திற்குரியவரே! தன்னலமற்று நீர் செய்த நல்வினைகள் அங்கு  புண்ணியமாக உருக்கொண்டு இன்பமாக மாறி உம்மை வந்தடையும்.சுவர்க்கத்தின் சூழ்நிலையும், காணும் காட்சிகளும், சுற்றியிருப்பவர்களின் அருகாமையும், உண்கின்ற உணவும் மிகுந்த இன்பத்தைத் தரும்.அங்கே துன்பத்திற்கு இடமே இல்லை.இதுவே சுவர்க்கமாகும் என்றார் தேரோட்டி.

அங்கே குறை ஏதும் உண்டா?சொல்வீர் எனக் கேட்டார் முத்கலர்.

சிறிது யோசித்த தேரோட்டி..முத்கலரே..குறையே இல்லாத இடமே சுவர்க்கம் ஆனாலும்...

ஆனாலும் என்ன? .... சொல்வீர்..மரியாதைக்குரியவரே...

முத்கலரே...சுவர்க்கத்தில் நாம் இன்பம் அனுபவிக்கும் போது எந்த அளவு இன்பம் அனுபவிக்கிறோமோ அந்த அளவு அந்த இன்பத்தைத் தந்த நாம் செய்த புண்ணியத்தின் அளவு குறையும்.புண்ணியம் குறைவது நமக்குத் தெரியாது...நம்மை சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்ற நாம் செய்த புண்ணியம் முற்றிலும் தீர்ந்ததும் நாம் சுர்வக்கத்திலிருந்து கீழே உருட்டித் தள்ளப் படுவோம்.அந்த வீழ்ச்சி பெரும் துன்பம் தரும்.அப்போது இந்த தேர் வராது.பெற்ற இன்பம் விலகும் போது ஏற்படும் துன்பதிற்கு ஈடானது வேறொன்றுமில்லை.இது ஒரு குறை.மற்றொன்று சுவர்க்கத்தில் இன்பம் குறையாதபடி அவ்வப்போது புண்ணியம் செய்ய எந்த வழியும் இல்லை.

அதனால் புண்ணியம் குறைவதைத் தடுக்க இயலாது.எனவே மீண்டும் கீழே வந்து துன்பம் அனுபவிக்கவே நேரிடும்.சுவர்க்கத்தின் இன்பம் நிலையானது அல்ல என்றார் தேரோட்டி.

மரியாதைக்குரிய நண்பரே! நான் சுவர்க்கத்திற்கு வரவில்லை.அங்கு பெரும் இன்பத்தை நான் ஒருவன் மட்டுமே அனுபவிக்க முடியும்.என் சுற்றத்தார்களுக்கோ,அதிதிகளுக்கோ அதனைப் பகிர்ந்தளிக்க முடியாது.பிறருக்காக உழைப்பதிலும் அதனால் கிட்டும் பொருளைப் பகிர்ந்து கொளவதிலும்தான் நான் இன்பம் காண்கிறேன்.பிறரின் மகிழ்ச்சியில்தான் எனக்கு பேரின்பம் கிடைக்கிறது.உழைபால் கிடைக்கும் பொருள் செலவானால் இங்குதான் மீண்டும் உழைத்துப் பொருளீட்டி அதனைப் பிற்ருக்குகாக செலவு செய்து அதனால் கிடைக்கும் இன்பத்தைப் பெற முடியும்.சுவர்க்கத்தில் இன்பம் ஒரு நாள் நம்மை விட்டு விலகிவிடுமே என்று அச்சப் படவேண்டும். ஆனால் இங்கு அந்த பயம் இல்லை.சுவர்க்கத்தில் கிடக்கும் நிலையில்லா இன்பத்தைவிட இங்கே பிறருக்காக உழைத்து அதனைப் பகிர்ந்தளித்து அதனால் கிடைக்கும் புண்ணியமும் அந்த புண்ணியத்தால் கிடைக்கும் இன்பமுமே பெரியது.எனவே எனக்கு சுவர்க்கம் வேண்டாம்.இங்கேயே இருந்து இறைபணியும், பிறர் பசிபோக்கும் அறப்பணியும் செய்து வாழ்வதையே பெரிதாக நினைக்கிறேன்.ஆகவே நீர் செல்வீராக என தேரோட்டியிடம் கூறினார் முத்கலர்.

ட்டென தேரோட்டி தேரோடு மறைந்தார்.வானில் ஒரு அசரீரி கேட்டது.முத்கலரே! உம்மை சோதிக்க அனுதினமும் நீவிர் வணங்கும் சிவனாகிய நானே முதலில் முனிவராகவும் பின்னர் தேரோட்டியாகவும் வந்தேன்.சுவர்க்கத்தின் இன்பத்தைக் கூட பிறருக்குப் பகிர்ந்தளிக்காது அனுபவியேன் என்ற உம்முடைய தர்ம சிந்தனையையும் எம்மீது நீர் கொண்டுள்ள பக்தியையும் கண்டு மகிழ்ந்தேன்.நீர் விரும்பும் வரை இப்பூமியில் வாழ்ந்து அறப்பணி செய்வீராக.பின்னர் எப்போது விரும்பினாலும் நிரந்தர இன்பம் தரும் திருக்கைலாயம் வந்து என்னுடன் கலப்பீராக... என்ற சிவபெருமானின் குரல் ஒலித்தது.குரல் வந்த திசை நோக்கிக் கைகளைக் கூப்பினார் முத்கலர்.

சிவாயநம: சிவாயநம: நமசிவாய.. நமசிவாய..என்று உச்சரித்தது அவரது நாவு.

கடவுள் ஒருவர் இருக்கிறார்.அவர் நம் செயல்களைப் பார்க்கிறார்.நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பிரத்யட்சமான பலனுண்டு.பின்னால் வரக்கூடிய பலனுமுண்டு.இறந்தபின் மறு பிறவி உண்டு.அந்த மறு பிறவியும் நாம் செய்த வினைகளுக்கேற்ப தொடரும்.நல்லதே நினைப்போம்.. நல்லதே செய்வோம்.......நன்றி...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.