(Reading time: 11 - 21 minutes)

பாண்டுரங்கன் பக்தர்கள் கதை – 01 - கோராகும்பார் - தங்கமணி சுவாமினாதன்

Gora Kumbhar

கோராகும்பார் மண் பாண்டம் செய்யும் குயவர் குடியில் பிறந்தவர்.பாண்டுரங்கன் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.பண்டரிபுரத்திற்கு அருகாமையில் இருந்த தோடகி என்னும் கிராமத்தில் வசித்து வந்த இவரின் பெற்றோர் பண்டரினாதனிடம் பெரும் பக்தி கொண்டு மண்பாண்டம் செய்யும்போது சரி..ஒழிந்த நேரத்திலும் சரி சதா விட்டலனைப் பாடுவதிலேயே இருப்பர் என்பதால் கோராகும்பாருக்கும் அவரது தம்பி எற்றண்ணாவுக்கும் இயல்பாகவே பாண்டுரங்கனிடம் பக்தி உண்டாயிற்று.சிறு வயதில் உண்டான பக்தி இவர்கள்  வளர வளர அதிகமானதே தவிர குறையவில்லை.

கோராகும்பருக்குத் திருமண வயதாயிற்று.பத்மாவதி எனும் குணவதியைக் கைபிடித்தார் கோராகும்பார்.இருவரும் மிகுந்த ஒற்றுமையுடன் இல்லறம் நடத்தினர்.பத்மாவதியும் கணவரைப் போலவே இறை பக்தி மிகுந்தவராகவே இருந்தார்.மூத்தவனுக்குத் திருமணம் செய்து வைத்த திருப்தியில் கோராக்கும்பாரின் பெற்றோர் கண்களை மூடினர்.

கும்பாரின் தம்பி எற்றண்ணா அண்ணன் கும்பாருக்குத் தொழிலில் மிகவும் உதவியாக இருந்தார்.

ஆனால் திருமணத்தில் அவருக்கு நாட்டம் இல்லை.ஒரு நாள் எற்றண்ணா சூளை போடுவதற்காக..செய்து வைத்திருந்த மண் பானைகளையெல்லாம் வரட்டிகளை அடுக்கித் தீமூட்டி அதில் வைத்தார்.அப்பானைகளில் பூனைக்குட்டிகள் சில படுத்து உறங்குவைதை கவனிக்கவில்லை.

அக்குட்டிகள் தீயில் கருகி இறந்தன.பூனைகள் தாம் மூட்டிய தீயில் இறந்தது கண்டு தம்பி எற்றண்ணாவுக்கு மிகுந்த வருத்தம்.பாபம் செய்து விட்டேனே..பாபம் செய்து விட்டேனே என அழுதார் அவர்.செய்த பாபம் தொலைய கங்கையில் சென்று முழுக  வேண்டும் என எண்ணி தனியாகவே கங்கை நோக்கி நடந்து சென்றார்.

இப்படித் தம்பி எற்றண்ணா தனியாகவே கங்கைக்கு நடந்து செல்வது கும்பரை மிகவும் பாதித்தது.

எப்போதும் வருத்தத்தோடே இருந்தார்.கருவுற்றிருந்த மனைவியைக் கூட கவனிக்கவில்லை. 

ஆனாலும் நாளுக்கு நாள் பாண்டுரங்கன் மேல் அவர் கொண்டிருந்த பக்தி அதிகமாயிற்று. 

த்மாவதி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.கோராக்கும்பாரோ தனது பிள்ளையாகிய அக்குழந்தையைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை.அக்குழந்தை மீது பாசமே வரவில்லை. ஊர் மக்களெல்லாம் பெற்ற மகனிடம்  கூட பாசமற்றிருக்கும் அவர் துறவியாகிவிட்டார் என பேசிக்கொண்டனர்.அதற்கேற்றார்ப் போல் அவரும் சதா மண்ணை மிதித்து மிதித்து இளக்கி மண்பாண்டம் செய்வதும் அப்படி மண்ணை மிதிக்கும் போதெல்லாம் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டபடி பண்டரினாதனைப் பற்றிப் பாடுவதுமாகவே இருந்தார்.மனைவியையும் குழந்தையையும் கவனிப்பதே இல்லை.

குழந்தை தவழும் பருவத்தை அடைந்தான்.ஒரு நாள் கும்பார் வழக்கம் போல் பண்டரினாதனைப் பாடிக்கொண்டே காலால் மண்ணை மிதித்துக் கூழாக்கிக் கொண்டிருந்தார்.அவர் மனம் அவரிடம் இல்லை.அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே அவர் அறியாதிருந்தார்.பாண்டுரங்கனிடம் அவ்வளவு பிரேமை.

குழந்தை மெள்ள மெள்ள அவர் மண்ணை மிதித்துக் கொண்டிருக்கும் இடம் நோக்கித் தவழ்ந்து வந்தது.உள்ளே வேலையாய் இருந்த பத்மாவதி இதைக் கவனிக்க வில்லை.குழந்தை அருகில் வருவதைக் கும்பாரும் கவனிக்கவில்லை.அவர் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.

மெள்ள அவ்விடம் நோக்கித் தவழ்ந்து வந்த குழந்தை மிதிபடும் மண்ணின் சேற்றுக் குழம்பில் இறங்கியது.குழந்தை தாம் மிதிக்கும் மண்ணில் வந்து அமர்ந்ததைக் கூட அறியாமல் பாண்டுரங்கனைப் பற்றி கண்கள் மூடியபடி கைகளை மேலே உயர்த்தி பாடியபடி அப்பாடலுக்கேற்ப தன் கால்களை ஆட்டி ஆட்டி நடனமாடியபடி மண்னை மிதித்துக் கொண்டிருந்த கும்பாரின் கால்களில் மிதிபட்டு மிதிபட்டுக் கத்திக் கத்தி அழுதழுது கூழாகி உயிரை விட்டது குழந்தை.

உள்ளே வேலையில் இருந்த கும்பாரின் மனைவி பத்மாவதி குழந்தையைத் தேடி வெளியேவர கணவரின் கால்களால் மிதிபட்டுக் கூழாகி இறந்துவிட்ட மகனைப் பார்த்துக் கதறி அழுதாள்.... அலறினாள்...

மனைவியின் அலறும் குரல் கேட்டு சுயனினைவுக்கு வந்த கும்பார் நடந்ததை அறிந்தார்.ஆனால் அவர் சிறிதும் வருந்தவில்லை மகன் தன் காலடியில் மிதி பட்டு இறந்தானே என்று...ஏன் குழந்தையை இங்கு வரவிட்டாய் என மனைவியைக் கடிந்து கொண்டார்.

பெற்ற குழந்தையை இழந்த தாயால் எப்படி சும்மா இருக்க முடியும்?குழந்தை வருவது தெரியாமல் அப்படி என்ன தெய்வ பக்தி?குழந்தையை இப்படி மிதித்துக் கொன்றுவிட்டீரே?பாண்டுரங்கன் இப்படித்தான் செய்யச் சொன்னானா?என்று வாய்க்குவந்தபடி பேசினார் மனைவி பத்மாவதி.

கோராகும்பாருக்குக் மிகுந்த கோபம் வந்துவிட்டது.தன்னை வைதால்  கூட பரவாயில்லை.     பாண்டுரங்கனையும் அல்லவா இவள் கண்டபடி பேசிவிட்டாள் என கொதித்தெழுந்தார்.பிள்ளையை இழந்த தாயின் மனம் எவ்வாறு இருக்கும் எனக் கூட அவருக்குப் புரியவில்லையோ?கோபம் கொண்ட அவர் தடியை எடுத்து மனைவியை அடிக்கத் துணிந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.