(Reading time: 2 - 3 minutes)

பெண்மை - கவிதை போட்டி - 11 - வசந்தி

கண்ணுக்குள் வைத்துக் காக்கிறோமென்று

கட்டுக்குள் வைத்தனர் அன்று!

கட்டுக்குள் வைத்தாலும் கவிபாடுவோமென்று

முன்னேறிய காலமும் உண்டு அன்று!!

 

முழுதும் மூடி மூன்றாமாள் முன்னர்

வராது வெட்கமடைந்த நாட்கள் அன்று!

வெட்கத்தை விவேகத்தால் அழித்து விட்டு

நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்த காலமும் உண்டு!! 

 

தந்தையோத் தமையனோ அன்றிக் கொண்டவனோ

துணையின்றி வெளிவராநிலை அன்று!

வீறுகொண்டு எழுந்து சுதந்திரத்திற்காய்

வெளிவந்த மகளிரும் உண்டு!!

 

அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதுக்கு

சொல்லியடித்தனர் அன்று!

ஆணுக்குப் பெண் இழைப்பில்லை என்று

கும்மியடித்தக் காலமும் உண்டு!!

 

ஆணுக்குப் பெண்ணும் சரிசமமாய்

நினைப்பது நலமென்று கொள்வோம்!

சரிசமமாய் இருந்தாலும் சராசரியாய்

இல்லாதிருத்தல் நலமென்று கொள்வோம்!!

 

நாளொன்றுப் பேசிப் பொழுதைக் கழிக்கும்

நயவஞ்சகன் பேச்சை வென்றிடுவோம்!

கூடிக்களிக்கலாமினி எனக்கூறிச்

சிதைத்திடும் (அ)சிங்கங்களைச் சூறையாடிடுவோம்!!

 

குலப்பெருமைக் காப்பதற்காய் 

கௌரவக்கொலைகள் கலித்துவிட்ட காலமிது!

குற்றேவல் புரியும் குமரன்கள் கூட

குடிவெறியில் கூத்தாடிகளாய் மாறிவிட்ட காலமிது!!

 

பிஞ்சென்றும் பாராமல் பிசாசுகளாய்ப்

பிய்த்தெரியும் மானுடம் மலிந்துவிட்டக் காலமிது!

தன் உதிரத்தைக் கூட ருசி பார்த்திடும்

ஆணினம் அவதரித்துவிட்ட அவமானக் காலமிது!!

 

சூழல் இப்படியிருந்தால்

பெண்ணின் பெருமையென எதைக்கொள்ள?

பெண்களைச் சிதைப்பவர்களை எதைவைத்துக் கொல்ல?

 

இன்றையப் பெண்மை,

பெண்மையாய் மிளிர, வைரமாய் ஒளிர, 

மென்மையில் வன்மை இணைந்திங்குப் பகிர,

பகலவனின் ஒளியும், நிலவின் இதமுமாய் வளர,

பெண்ணியம் பேசும் பெண்மை

கண்ணியம் காத்தலும், கண்ணிவெடி வைத்தலும்

இன்றேத் தொடங்கி இனிதாய்ச் செயல்பட

இந்தச் சுதந்திரத்தைச்  சுவீகரிக்குமா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.