(Reading time: 2 - 3 minutes)

கவிதை - பொருளாதாரப் போர் - குணா

economyWar

நகர்ந்திடும் நாட்கள்
நாட்காட்டியின் கணக்குகளாய் மட்டும் ..
நல்லதொரு நாள்
என் நாட்காட்டியில் மட்டும்
அச்சிடப்படாமலே அச்சுப்பிழையாய் வெளிவந்ததோ?

அதிகாலை ஆதவன்
நேரம் தவறாமல்
நேர்மையின் சுடராய் சுட்டெரிக்க ...
என் வானில் மட்டும்
உன் ஆயுள்
கல்லறைக்கு செல்லும் கால் தடமாக...?

குளிர் நிலவின்
மோக ஒளியில்
யாவும் மயங்கிட ..

அதன் கருப்பு நிழல் மட்டும்
என் மொட்டை மாடியில்
தனித்தே தலையணை கேட்கிறதே ?

ஐ விரல்கள் கூட்டுச்சேர்ந்து
எனக்கு துணையாய்
கைகுலுக்குமென நினைக்கையில்
எதிரே சுட்டு விரல்
என்னை நோக்கி சூழ்ச்சிக்கிறதே ?

சந்தோச கோப்பையில்
நிரம்பி வழியும் ஒரு துளி கூட
என் வாசல் திசையறியாமல்
பொங்கி வரும் நுரையிலேயே
என் நுரையீரலும் நின்றிடுதே ?

மலர் பாதையில் நடந்தாலும்
என்றோ தொலைந்த
ஒற்றை முள்
என் பாதம் தேடி
இரத்தக் கோலமிடுதே ?

உண்மையின் வாய்கள் ஊமையாகுதே?
நேர்மையின் செவிகள் செவிடுமாகுதே?
நம்பிக்கையின் கைகளும் முடமாகுதே?
இரத்த ஓட்டத்தில் சாக்கடையும் கலக்குதே...
நித்தம் ஊடுருவி
இதயச்சுவற்றின் நாசி வழி சென்று
மாசு பண்ணி
துடிக்கும் துடிப்பை விஷமாக்குதே?

"பொருள் " தான் ஆதாரமென்ற
நிலை மாறுமோ ?
இல்லை
என் "பொருளாதார நிலை "
மாறுமோ ?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.